- Ads -
Home உரத்த சிந்தனை வெங்காய பதுக்கல்… கொழுக்கும் வியாபாரிகள்! வெதும்பும் பொதுமக்கள்!

வெங்காய பதுக்கல்… கொழுக்கும் வியாபாரிகள்! வெதும்பும் பொதுமக்கள்!

onion1

வெங்காய கொள்ளையில் கொழுக்கும் வியாபாரிகளால் பொதுமக்கள் மனம் வெதும்பிப் போயுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைக்கின்ற நிலையில், இடைத்தரகர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு சில வியாபாரிகள் இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் சந்தையில் செவ்வாய்க்கிழமை மாலை கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், சென்னை கோயம்பேட்டில் 90 ரூபாய் வரை விற்கப் படுகிறது. சின்ன வெங்காயம் 3 முதல் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்பதால், கிலோ கணக்கில் பொதுமக்களே வெங்காயத்தை வாங்கிச்செல்கின்றனர்.

சென்னையில் சில சூப்பர் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் இஷ்டம் போல் விலை வைத்து விற்கப் படுகிறதாம். அபிராமபுரம் பழமுதிர்சோலையில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.195 என்றும், ராயப்பேட்டை ரிலையன்ஸ் பிரெஷ் கடையில் கிலோ ரூ.115 என்றும், மயிலாப்பூர் நீல்கிரீஸ் கிளையான வி.என்.எஸ் சூப்பர் மார்கெட்டில் கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது.

ஆயினும், லாயிட்ஸ் சாலை பழமுதிர் நிலையத்தில் கிலோவுக்கு ரூ. 99 க்கும், கிரேஸ் சூப்பர் மார்க்கெட் கிளைகளில் ரூ.98க்கும் விற்கப்படுகிறதாம்!

விவசாயிகளிடம் இருந்து 60 ரூபாய்க்கு பெறும் இடைத்தரகர், 75 ரூபாய்க்கு மொத்த வியாபாரிக்கு கொடுத்தால் அவரிடம் இருந்து 90 ரூபாய்க்கு வாங்கும் சில்லரை வியாபாரிகள், 195 ரூபாய் வரை தங்கள் இஷ்டம் போல விலை வைக்கின்றனர். விவசாயிக்கு சொற்ப லாபமே கிடைக்கும் நிலையில், வியாபாரிகளோ லாபத்தில் கொழுக்கின்றனர்.

சின்ன வெங்காயம் விளைச்சல் செய்யப்படும் திண்டுக்கல் , திருச்சி , கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

சின்னவெங்காயம் அறுவடை முடிந்து உடனே சந்தைக்கு அனுப்பப்படுவதில்லை. அதனை சேமித்து வைத்து விலை உயரும் வரை காத்திருந்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயத்திற்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி 3 மடங்கு விலையில் விற்று வருகின்றனர் என்கிறார்கள்.

வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துவிட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பெரிய வெங்காயத்தை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்கின்றனர். அங்கிருந்து கிலோ பெரிய வெங்காயத்தை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து வாங்கும் இடைத்தரகர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது கோயம்பேட்டில் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

ஆந்திர வெங்காயம் விவசாயிகளிடம் 25 ரூபாய்க்கு வாங்கப்பட்டு 40 ரூபாய்க்கும், கர்நாடக வெங்காயம் 30 ரூபாய் முதல் 35 வரை வாங்கப்பட்டு 50 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை வெங்காயம் 2 நாட்களுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்ய முடியாது; அவை அழுகிவிடும்!

இப்படி கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளை மனத்தில் கொண்டுதான் தமிழக அரசும் வெங்காய பதுக்கல் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சோதனைகள் நடத்தவும் கூறியுள்ளது. ஆனாலும் இவர்கள் கொள்ளையர்களாகத்தான் திரிகிறார்கள்! பாவம்.. பொதுசனம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version