- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் வரலாற்றில் பரதநாட்டியம்

வரலாற்றில் பரதநாட்டியம்

Thillai Nataraja Temple Chidambaram

டாக்டர். இரா.நாகசாமி எழுதிய கட்டுரை…

இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. மணிபுரி, ஒடிஸ்ஸி, கதக், மோகினி ஆட்டம் என்றெல்லாம் இது பெயர் பெறுகிறது. தமிழ்நாட்டில் ஆடப்பெறும் நாட்டியம் ஒன்றே பரதநாட்டியம் என்றபெயரில் உலகெங்கும் புகழ் பெற்று விளங்குகிறது. இப்பெயர் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக பரதநாட்டியம் என்ற பெயரே தமிழ்நாட்டியத்துக்கு ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பத்தைந்து அல்லது ஆயிரத்து தொள்ளயிரத்து நாற்பதாம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஏற்பட்டது என்றும், அதற்கு முன்னர் இது சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது என்றும் தேவடியாள் குலத்தினர் இதை ஆடிவந்ததால் சமுதாயத்தில் இழுக்குடையதாக இது கருதப்பட்டது என்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதின் பின்னர் சமுதாயத்தில் முன்னிலைக் குடும்பப் பெண்களும், ஆடல் கலையில் ஈடுபட்டதால், சதிர் ஆட்டம் என்ற பெயரை மாற்றி பரதநாட்டியம் என்ற புதுப்பெயர் சூட்டப்பட்டது என்றும், சிலர் கூறுவர். ஆனால் வரலாற்றை நோக்குங்கால் தமிழகத்தில் காலம்காலமாக ஆடலை பரதநாட்டியம் என்று அழைத்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுக்கு பல ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்த அமரகவி சுப்ரமண்ய பாரதியார் தமது பாடலில் பரதநாட்டியக் கூத்திடுவீரே என்று கூறுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடி ஒன்றில் பரதவிதநாட்டியம் பயில்கின்ற பலமாதர் என்ற சொற்றொடர் வருகிறது இதிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பும் தமிழகத்தில் நாட்டியம் பரதநாட்டியம் என்ற பெயரால் அழைக்கப்பெற்றது என்பதில் ஐயத்துக்கே இடமில்லை.
பண்டைய காலங்களில் கதையின் அடிப்படையில் வாசகங்களைக் கூறிக்கொண்டு இடையிடையே இசையுடனும், ஆடலுடனும் நடிப்பதையே நாட்டியம் என்றனர் என்றும், இன்று நாடகம் என்று வழங்கப்படுவதே நாட்டியம் எனப்பட்டது என்றும், இன்று நம் பெண்கள் ஆடும் ஆடலுக்கு நாட்டியம் என்ற சொல் பொருந்தாது என்றும் சிலர் கூறுவர். ஆதலின் இது குறித்து சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.
நாட்டிய சாஸ்திரம்:- பரதமாமுனிவர் எழுதிய நூலுக்கு நாட்டிய சாஸ்திரம் என்று பெயர். இந்நூலில் பரதர் நாட்டியத்தைப்பற்றி மட்டும் கூறவில்லை. அரங்கம் அமைத்தல், இசை, இசைக்கருவிகள், அவற்றை வாசிக்கும் மரபுகள், சொல், கவிதை, கவிதையின் தன்மை, பல்வேறு சுவைகள், ஆடை அணிகலன்கள், முதலியவற்றையும் நாட்டியத்தில் பயன்படுத்தும் கரணங்கள், கால்சாரிகள், ஹஸ்தங்கள், உடல் வளைவுகள், அசைவுகள், கழுத்து அசைவுகள், முதலிய அனைத்தையும் விவரித்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளதும் இந்நூலேயாகும். உலக மரபுகளைக்காட்டுவதை லோகதர்மி என்றும், நாட்டியத்திற்கெனத் தனித்தன்மை உடைய மரபுகளை நாட்டியதர்மி என்றும் பரதர் அழைக்கிறார். பரதர் எழுதிய நாட்டிய நூலுக்கு உரை எழுதியவர்களில் மிகச்சிறந்தவர் அபிநவகுப்தர் என்பவர், காஷ்மீர தேசத்தைச் சேர்ந்தவர், தமிழ் நாட்டில் தஞ்சைக்கோயிலைக் கட்டிய முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்தவர். அவர் இந்நூலை நாட்டிய வேதம் என்று கூறுகிறார்.
கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சார்ங்கதேவர் என்ற பெரியார். அவர் சங்கீர ரத்னாகரம் என்ற நூலை சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார். அவரும் நாட்டிய நூலை நாட்டிய வேதம் என்ற பெயராலேயே அழைக்கிறார். அவரும் நார்த்தனம் என்பது நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார். சார்ங்கதேவரின் நூலுக்கு ஸிம்மபூபாலர் என்பவர் உரை எழிதியுள்ளார். அவர் நர்த்தனம் என்பது நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் என மூன்று பிரிவுகளை உடையது. பாடலின் அர்த்தமானது சுவையை முக்கியமாகக்கொண்டு அபிநயிக்கப்படும் பொழுது நாட்டியம் எனப்படும். பாடலின் அர்த்தம் பாவகத்தை அடிப்படையாகக்கொண்டு அபிநயிக்கப்படும்போது நிருத்யம் எனப்படும். பாடலின் ராகத்துக்கு ஏற்ப உடல் அசைவகளோடு ஆடுதல் நிருத்தம் எனப்படும் என்று கூறுகிறார். மூன்றாவதாகக் கூறப்படும் நிருத்தம் என்பதில் பாடல் உண்டு, ஆனால் அதன் அர்த்தத்தைப் பற்றி கவனம் தேவையில்லை. அதன் ராக அசைவுகளுக்கு ஏற்ப அங்க அசைவுகள் இருக்கவேண்டும். அதாவது அபிநயம் இல்லாமல் நாட்டியம் மட்டும் புரிவதை நிருத்தம் என்பர். இவை மூன்றும் உட்பிரிவுகளே. மூன்றிலே இசையும் உண்டு, ஆடலும் உண்டு. ஆதலால் இதற்கு நாட்டியம் என்பது பொதுப்பெயர்.
தமிழ் மரபு:- தமிழ் மரபில் நாட்டிய நூல்படி பெண்கள் ஆடிய ஆடலை நாட்டியம் என்றே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக அழைத்து வந்துள்ளனர். தமிழில் நாட்டிய மரபுகளை மிகச்சிறப்பாகக் கூறும் நூல் சிலப்பதிகாரமாகும். சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடியதைக்கூறும் அறங்கேற்றுக் காதையில் அப்பெண் நன்னூல்களில் கூறியபடி நாட்டியம் புரிந்தாள் என்று நாட்டிய நன்னூல் நன்கு கடைபிடித்துக்காட்டினள் என்று கூறுகிறது. இதற்கு உரை எழுதிய அரும் பதவுரையாசிரியர் நாட்டியத்தை நூல்களில் சொன்ன முறமை வழுவாமல் அவிநயங்காட்டிப் பாவகந்தோன்ற ஆடிக்காட்டினாள் என்று கூறுகிறார்.
அபிநயம் காட்டி ஆடும் ஆடலுக்கு நாட்டியம் என்று பெயர் என்பது இவர் கருத்து. அரும்பதவுரையாசிரியருக்கு இருநூறு ஆண்டுகளுக்கும் பின்னர் வந்த அடியார்க்கு நல்லாரும் இதயே கூறுகிறார். மாதவி அரங்கேறி தனியாக ஆடிய ஆடல், இன்று நம் பெண்கள் ஆடும் ஆடலைப்போன்றதே. இதை இளங்கோவடிகளும், அரும்பதவுரையாசிரியரும், அடியார்க்கு நால்லாரும் நாட்டியம் என்றே அழைத்துள்ளதிலிருந்து இன்று பெண்கள் ஆடும் ஆடலை பரதநாட்டியம் என்பதே பொருந்தும்.
தமிழில் நாட்டியத்தை, கூத்து, ஆடல், நிருத்தம், லயம், நர்த்தனம், நடம், என்றெல்லாம் அழைப்பர். சிலப்பதிகாரம், நடமாடும் பெண், இருவகைக் கூத்துக்களையும், பலவகை கூத்துகளையும் அறிந்து ஆடல் வேண்டும் எனக் கூறுகிறது. இருவகைக் கூத்து என்பது தேசி, மார்க்கம் என்ற இரண்டுவகை, தேசி என்பது நம் நாட்டில் தமிழ்ப் பகுதியில் மலர்ந்த ஆடல், மார்க்கம் என்பது வடுகு என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழகத்திற்கும் வடபால் மலர்ந்த ஆடல். ஆதலின் இளங்கோவடிகள் காலத்தையே தமிழக ஆடல் என்றும் வடுகு ஆடல் என்றும் இருபிரிவுகள் வளர்ந்திருந்தன என்பது தெளிவு. பிற்காலத்தில் இவை மேலும் பலபிரிவுகளாக விரிந்தன. புகழ்கூத்து, வசைக்கூத்து என்றும் ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து என்றும், சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என்றும் இரண்டிரண்டாகக் கூத்துக்களை வகைப்படுத்தினர்.
இவற்றைப்பற்றி அடியார்க்கு நல்லார் தமது உரையில் விரிவாகப் பின்வருமாறு கூறுகிறார். சாந்திக் கூத்து என்பது சொக்கம், மெய்க்கூத்து, அவிநயம், நாடகம் என நான்கு பிரிவுகளை உடையது. நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து சாந்திக் கூத்து எனப்படும். சொக்கம் என்பது சுத்த நிருத்தம், அது நூற்றெட்டுக் கரணம் உடையது. மெய்க்கூத்து என்பது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழில் கூத்தாகலின் மெய்க்கூத்தாயின. இவை அகச்சுவை பற்றி எடுத்தலின் அகமார்க்கம் என நிகழ்த்தப்படும்.
அவிநயக்கூத்து கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து. நாடகம் கதை தழுவி வரும் கூத்து. விநோதக் கூத்து என்பது குரவை, கலிநடம், குடக் கூத்து, தோல் பாவை என்னும் கூத்துகளாம்.
தமிழ் நாட்டியத்தில் நிருத்தத்துக்குச்சிறப்பிடம்:-
இவற்றில் சொக்கம் என்பது சுத்தநிருத்தம் எனப்படும் என்பதும் அது நூற்றிஎட்டு கரணங்களைக் கொண்டது என்பதும் குறிக்கத்தக்கது. சிவபெருமான் நிருத்தம் புரிவதில் மிகவும் ஈடுபாடுடையவர். அவரே கரணங்களை முதன்முதலில் போதித்தார். அந்தி நேரங்களில் ஆடல்புரிகின்ற நான் பல்வேறு கரணங்களைக் கொண்டு அங்கஹாரங்களால் அலங்கரித்து நிருத்தம் புரிந்தேன். அதை நினைவு கூர்கிறேன் என்று சிவபெருமானே கூறுகிறார்.
மயா அபி ஸ்மிருதம் நிருத்தம் சந்தியாகாலேஷு நிருத்யதா நாநா கரண சம்யுக்தை: அங்கஹாரை: விபூஷிதம்
சிவபெருமானுக்குக் கரணங்களில் உள்ள ஈடுபாட்டைத் தேவாரத் திருப்பதிகங்களும் குறிக்கின்றன. கழலோடு திருவிரலால் கரணம் செய்து கனவின் கண் திருவுருவம் தான் காட்டும்மே எழிலாரும் தோள் வீசித்தான் ஆடும்மே. என்று அப்பர் பாடுகிறார். காலும் கையும் இணைந்து அழகுற ஆடுவது நிருத்தத்தில் கரணம் எனப்படும். பரத முனிவரின் நூலில்.
ஹஸ்த பாத சமாயோக: நிருத்தஸ்ய கரணம் பவேத். என இலக்கணம் கூறப்பட்டுள்ளது. கழலோடு திருவிலால் கரணம் செய்து. என்னும் அப்பர் பாடல் கரணம் என்பதின் இலக்கணத்தைத் தமிழில் அழகாக எடுத்தியம்புகிறது. கரணம் என்பதற்கு மிகவும் தொன்மையான தமிழாக்கம் இதுவே. அப்பர்சுவாமிகள் மற்றோரு இடத்தில் சிவபெருமானை சொக்கம் பயின்றீர் என்றும் ஆடும் சொக்கன்காண் என்றும் அழைக்கிறார். சொக்கம் என்பது கரணம் எனக்கண்டோம். ஆதலின் தமிழ்நாட்டில் அப்பர் வாழ்ந்த கி. பி. அறுநூறுக்கும் முன்பாகவே நூற்றிஎட்டு கரணங்களும் அவை சிவபெருமானடியவை என்பதும் அவற்றிற்கு சொக்கம் என்ற பெயரும் அறியப்பட்டிருந்தன.
சிற்பத்தில் நாட்டியக்கரணங்கள்:-
இந்திய வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில்தான் நாட்டியக் கரணங்களுக்கு மிகச்சிறந்த இடத்தை அளித்து வந்துள்ளனர். தஞ்சைப் பெருங்கோயிலில் இராஜராஜப் பெருமன்னன் நூற்றிஎட்டு கரணங்களுக்குச் சிறப்பிடம் கொடுத்துச் சிற்பமாகப் படைத்துள்ளான். கர்ப்ப கிருஹத்தின் மேல் தளத்தில் சுற்றுச் சுவரில் சிவபெருமான் நூற்றி எட்டு கரணங்களையும் ஆடுவதாகச் சிற்பங்களில் அமைத்திருக்கிறான். இவை பரதருடைய நாட்டிய சாஸ்திரத்தில் கூறியபடி வடிக்கப்பட்டுள்ளன. நூற்றி எட்டு கரணங்களும் வரிசைப்படுத்தப்பட்டு சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளதைத் தமிழ் நாட்டில் தான் காண்கிறோம். தொன்மையான சான்று இதுவேயாகும். கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி கோயில் கோபுரத்தில் நூற்றி எட்டு கரணங்களைச் சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை சிவபெருமான் ஆடுவதாக உள்ள இவை கி. பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டுச் சோழர் கால சிற்பங்களாகும். வேறு ஏதோ சிவன் கோயிலில் முதலில் இருந்தன. இப்பொழுது இக்கோபுரத்தில் பாங்குறப் பொருத்தப்பட்டுள்ளன. இச்சிற்பங்களின் கீழே கரணங்களின் பெயர்கள் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாகச் சிதம்பரம் நடராஜப்பெருமானின் கோயிலில் நான்கு கோபுர நிலைக்கால்களிலும், நூற்றி எட்டு கரணங்களைப்பெண்கள் ஆடுவதாகச் சோழர் காலத்தில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கோபுரத்திலும், மேற்குக் கோபுரத்திலும் ஒவ்வொரு கரணத்தின் கீழும் கிரந்த எழுத்துக்களில், அந்தந்தக் கரணத்தைக் கூறும் பரத சாஸ்திரச்செய்யுள் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. பரத சாஸ்திரமே இவ்வாறு கல்லில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டில்தான் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். திருவண்ணாமலை, திருவதிகை போன்ற கோயில்கோபுரங்களிலும் இது போன்று கரணங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இவற்றிலிருந்து சோழர் காலத்திலிருந்தே நம் தமிழ் நாட்டில் நாட்டியத்தில் கரணங்களுக்குச் சிறப்பிடம் கொடுத்து வந்துள்ளதைக் காண்கிறோம். ஆதலின் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் நாட்டியத்தைக் காட்டிலும் தமிழக நாட்டியத்தில் கரணங்கள் இன்றும் அதிகம் பயன் படுத்தப்பட்டன.
நாட்டியம் கற்றுத்தரும் முறை:- நாட்டியத்தைப் பெண் குழந்தைகளுக்கு எப்பொழுது கற்றுத்தரத் தொடங்க வேண்டும்? எவ்வளவு ஆண்டுகள் பயின்ற பின் அரங்கேற வேண்டும்? நாட்டியப் பெண்ணிற்கு வேண்டிய இலக்கணம் யாது? என்பவற்றைப் பற்றி இளங்கோவடிகள் தெளிவாகக் கூறியுள்ளார். நாட்டியம் ஆடும் பெண்ணிற்கு ஆடல் தெரியவேண்டும். பாடல் தெரியவேண்டும். இவற்றுடன் அழகும் நிறைந்திருக்க வேண்டும். இம்மூன்றில் ஒன்றும் குறையக் கூடாது. ஐந்து வயதில் குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுத்தர வேண்டும். தினம் காலையும், மாலையும் நாட்டியப் பயிற்சி செய்தல் வேண்டும். இதை சிரமம் இருபொழுது என்று அரும்பத உரை ஆசிரியர் கூறுகிறார். அடியார்க்கு நல்லார் காலத்தில் நாட்டியப் பயிற்சியை எப்படித் தொடங்கினார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. பண்ணியம் வைத்துக் கணபதியை வணங்கி, ஐந்து வயதுப்பெண்ணை மலர்களால் அலங்கரித்து ஆடல் கற்றுத்தரத் தொடங்க வேண்டும். இதற்கு தண்டியம் சேர்த்தல் என்று பெயர்.
பண்ணியம் வைத்து ஆனைமுகன் பாதம் பணிந்து நாள்
புண்ணிய ஓரை புகன்றன கொண்டு எண்ணியே
வண்டிருக்கும் கூந்தல் மடவாலை ஐயாண்டில்
தண்டியஞ் சேர்விப்பதே சால்பு
என்பது பாட்டு
வட்டணையும் தூசியும் மண்டலமும் பண்ணிமைய
எட்டுடன் சரிரண்டாண்டு எய்திய பின்
கீதக்குறிப்பும் அலங்காரமும் கிளரச்
சோதித்து அரங்கேறச்சூழ்
பெண்ணிற்கு வட்டணை, தூசி, மண்டலம், பண், முதலியன கற்றுத்தந்து பின்னர் கீதம் அலங்காரம் முதலியனவும் புகட்டி, பன்னிரண்டாம் வயதில் இவற்றில் அடைந்துள்ள தகுதியை சோதனை செய்து பின்னர் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்கிறது பாடல். இரண்டு வகையான தேசி, மார்க்கம் என்னும் இருவகை நடனங்களையும் ஏழு ஆண்டில் இப்பெண்கள் கற்றுப்பின்னரே அரங்கேறினர்.
தலைக்கோல்:-
ஒரு பெண் முதன் முதலில் நாட்டியம் புரியும் அரங்கத்துக்குத் தலைக்கோல் தானம் என்று பெயர். தலைக்கோல் என்பது அரங்கேற்றத்தின் சின்னமாகத் திகழ்வது. பொதியில் மலை போன்ற புண்ணிய மலைச் சாரல்களிலே வளரும் மூங்கில் கழிகளினால் இக்கோல் செய்யப்படும். கணுவுக்குக் கணு ஒரு சாண் உடையதாக இக்கோல் ஏழு சாண் நீளம் இருக்கும். கணுக்களில் நவரத்தினங்கள் இழைத்து இடை நிலங்களில் பொன்தகடு போர்த்தி இது செய்யப்பட்டிருக்கும். இக்கோலை இந்திரன் மகன் ஜயந்தனாகக் கருதி, ஆவாஹித்து புண்ணிய நன்னீர்களால் நீராட்டுவித்து, மலர்மாலைகளால் அலங்கரிப்பர். பின்னர் பட்டத்து யானையிடம் கொடுத்து, அரசன், அமைச்சர் முதலியோர் சூழ்ந்துவர ஊரை வலம் வருவர். முரசுகளும், மங்கல வாத்தியங்களும் முழங்கும். உடன் தேரும் வரும். தேரில் வரும் கவியிடம் இத்தலைக்கோல் அளிக்கப்படும். இவ்வாறு ஊர்வலம் வந்த பின்னர் அரங்கிலே தலைக்கோலை எதிர்முகமாக வைத்து அதைப் பூசீத்து, அதன் பின்னர் ஆடல் தொடங்குவர். இவ்வாறு அரங்கேற்றம் முடிக்கும் பெண்ணுக்குத் தலைக்கோலரிவை எனப்பெயர். சோழர்காலத்ததில் கி. பி. பத்தாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலும் இவ்வழக்கம் இருந்து வந்தது. பல ஆடல் மகளிர் தலைக்கோலி எனக் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர்.
பக்காவத்தியம்:-
இவ்வாறு அரங்கேறிய பெண்கள் ஆடியமுறை பற்றியும் நம்மால் அறியமுடிகிறது. இதை அரங்கிலே ஆடும் இயல்பு என்று கூறுவர். ஆடலைப்பற்றிக் கூறும் முன்னர் பக்கவாத்தியங்களைப் பற்றிச்சிறிது அறிதல் நலம்.
அரங்கத்தில் பெண் ஆடும்போது வாய்ப்பாடலுடன் குழல், யாழ், மத்தளம் (தண்ணுமை). குடமுழா, இடக்கை ஆகிய கருவிகள் வாசிக்கப்பட்டன என்று இளங்கோவடிகள் கூறுகிறார். குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்பின்வழி நின்றது முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை. என்று சிலப்பதிகாரம் கூறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் நாட்டியத்துக்கு இவை பக்கவாத்தியங்களாக இருந்தன. தேவாரக்காலமான கி. பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டிலும் இவை பக்கவாத்தியங்களாக வாசிக்கப்பட்டன.
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிர கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள். சம்பந்தர் தேவாரம். அப்பர் சுவாமிகள் குழல், கொக்கரை, கைத்தாளம் மொந்தை முதலிய பக்கவாதியங்கள் என குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறட்பூதம் முன்பாட தான் ஆடுமே. என்கிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தக்கை (உடுக்கை போன்ற இசைக்கருவி) தண்ணுமை (மத்தளம்). தாளம், வீணை, தகுனிச்சம், இணைச்சங்கு, கொக்கரை குடமுழா ஆகியவை பக்கவாத்தியங்கள் என்று கூறுகிறார். இதில் தகுனிச்சம் என்பது ஒருவகை முழவு. கொக்கரை ஒரு வகை வளைந்த இசைக்கருவி. நாட்டியத்தில் சங்கும் பக்கவாத்தியமாகப் பயன்பட்டது என்பது இதனால் புலப்படும்.
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுனிச்சம் இணைச்சங்கு கொக்கரை குடமுழவினோடு ஓசை கூடப்பாடி நின்றுடுவீர். என்கிறார்.
ஏறக்குறைய கி. பி. ஆயிரத்தில் தோன்றிய தஞ்சைப்பெரிய கோயில் ஏராளமான பெண்கள் நாட்டியமாடினர். அவர்களைப்பற்றி இராஜராஜன் பெரியதொரு கல்வெட்டைப் பொறித்து வைத்துள்ளான். அதிலிருந்து நாட்டியத்துக்குப் பக்கவாத்தியம் எவ்வாறு இருந்தது என்று அறிகிறோம். நாட்டவம் செய்வார் நால்வர், பாடவ்யம் எண்மர், கானபாடி ஐவர், வங்கியம் வாசிப்பார் (குழல்) மூவர், உடுக்கை வாசிப்பார் இருவர், வீணை வாசிப்பார் இருவர், ஆரியம் பாடுவார் மூவர், தமிழ் பாடுவார் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்பார் இருவர், சங்கு ஊதுவார் மூவர், பக்கவாத்தியம் இருபத்து நால்வர், என மொத்தம் பக்கவாத்யம் அருபத்தி நான்கு பேர் இருந்தனர்.
அறுபத்து நான்கு பக்கவாத்தியரைக் குறிக்கும் அக்கல்வெட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆனால் சங்கீத ரத்னாகரம் என்ற நூல் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாசிப்போர் அறுபத்து நான்கு பேர் இருந்தால் அதை உத்தம சம்பிரதாயம் என்றும், முப்பத்திரண்டுபேர் இருந்தால் மத்திம சம்பிரதாயம் என்றும், அதற்குக்கீழ் இருந்தால் அதம சம்பிரதாயம் என்றும் வழக்கிலிருந்தது. ஆதலின் அறுபத்து நால்வரைப்பாடுவதற்கும், பக்கவாத்யத்துக்கும் நியமித்த ராஜராஜன் உத்தம சம்பிராயத்தைப்பின்பற்றியுள்ளான்.
சங்கீதரத்னாகரம் என்னும் நூல் மத்தளக்காரர், தாளக்காரர், கஞ்சதாளம், காளம் ஊதுவர், குழல், வாய்ப்பாட்டு என இசைப்போரையும் கூறுகிறது. இசைக் கருவிகள் இணைந்து வாசிப்பதை வடமொழி நூல்கள் மேளாபகம் என்று கூறுகின்றன. அதிகமான இசைக் கருவிகள் இணைந்து வாசிப்பதைத் தமிழில் பெரியமேளம் என்றும், குறைந்த இசைக்கருவிகள் உள்ளதைச் சின்னமேளம் என்றும் அழைத்தனர் போலும்! முற்காலங்களில் மங்கள வாத்தியம் அல்லது ஸகலவாத்தியம் என்று எல்லா இசைக்கருவிகளும் இணைந்து வாசிக்கும் மரபு உண்டு. இதில் முக்கிய இடம் பெறுவது நாதஸ்வரம். ஆதலின் நாதஸ்வரத்தை மேளவாத்தியக் கச்சேரி என்று சொல்லும் பழக்கம் வந்தது.
மேளவாத்தியத்தில் இசைக் கருவிகளின் எண்ணிக்கை அதிகம், ஆதலால் அதைப் பெரிய மேளம் என்று அழைத்தனர். சாதாரணமான நாட்டியக் கச்சேரிக்கு இசைக் கருவிகளின் எண்ணிக்கை குறைவு. அதனால் நாட்டியக் கச்சேரியைச் சின்னமேளம் என்ற பெயரில் அழைத்தனர். சமீப காலம் வரை சின்ன மேளம் என்ற பெயரில் நாட்டியம் வழங்கிவந்ததற்கு காரணம் அதுவே.
இசைக்கருவிகளை, பண்டைய நூல்கள் பாடலுக்கு ஏற்ப இணந்து இசைப்பவை என்றும், நிருத்தத்துக்கு ஏற்ப இணைந்து இசைப்பவை என்றும், இரண்டுடனுடனும் இசைப்பவை என்றும் மூன்று வகைகளாகக் கூறுகின்றன். இவை கீதானுகம், நிருத்தானுகம், உபயானுகம் எனப்பெயர் பெறும் மூன்றுவகை.
அரங்கில் ஏறி ஆடும் இயல்பு:-
அரங்கில் ஏறி ஆடும் முறையைப் பற்றியும், பண்டைய நூல்களிலிருந்து அறிய முடிகிறது. முதல் முதலில் ஏறி ஆடும் அரங்கைத்தலை அரங்கேற்றல் என்று அழைப்பர். அரங்கில் ஏறியவுடன் முதலில் இரண்டு பாடல் பாடப்படும். இவை தெய்வப் பாடல் என்று அழைக்கப்படுகின்றன. முதல் பாடல் நன்மைகள் நல்க தெய்வத்தை வேண்டுவதாம்.
இரண்டாவது பாடல் தீமைகள் அகல வேண்டுவதாம். தெய்வப்பாடலைப்பாடி முடித்தவுடன் எல்லா இசைக் கருவிகளும் இசைக்கப்படும். இதை அந்தரக்கொட்டு என்பர். இவ்வந்தரக்கொட்டு இசைத்த பின்னர் தான் ஆடும்பெண் உருக்காட்டுதல் மரபு.
ஆடுகின்ற பெண் முதலில் தேசிக் கூத்தை ஆடினாள். இதை மூன்று ஒத்துடைய மட்டதாளத்தில் தொடங்கி ஒரொத்துடைய ஏகதாளத்தில் முடித்தாள். இதன் பின்னர் மார்க்கம் என்னும் ஆடலைப்புரிந்தாள். இதற்கு பிரபந்தம் பாடப்பெற்றது. பிரபந்தம் என்பது பஞ்சதாளத்தில் வகுக்கப்பெற்றது. இதையும் மட்டதாளத்தில் வைசாக நிலையில் ஆடி முடித்தாள். இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடியதாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆதலின் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் தமிழகத்தில் நிலவிய ஆடல் முறை இது என அறியலாம்.
சங்கீதரத்னாகரம் என்னும் நூல் கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றது எனக் கண்டோம் அந்நூலில் முதலில் புஷ்பாஞ்சலி குறிக்கப்படுகிறது. பின்னர் நிருத்தம் குறிக்கப்படுகிறது. அது இன்று அலாரிப்பு என்று சொல்வதை ஒத்துள்ளது. நிருத்தம் இவ்வாறு பலவகை வாத்ய பிரபந்தங்களுக்கு ஏற்ப ஆடவேண்டும். பாடலில் எவ்வாறு பிரபந்தம் உண்டோ அதுபோல வாத்தியம் மட்டும் வாசிக்க தனிப்பிரபந்ங்கள் இருந்தன. இவற்றை வாத்யப்பிரபந்தம் என்றனர். இதன்பின்னர் கேயமான பிரபந்தங்களுக்கு நாட்டியம் ஆடவேண்டும் என்று இந்நூல் கூறுகிறது.
கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஜயஸேநாபதி என்பவர். நிருத்த ரத்னாவளி என்ற நூலை இயற்றியிருக்கிறார் காகதீய அரசன் அவையை அலங்கரித்தவர். இவர். தென்னாட்டுப்பண்பை அறிந்தவர். முதலில் புஷ்பாஞ்சலி ஆடிப்பின்னர் நிருத்தாங்கம் என்பதை ஆடவேண்டும். பதம், கவிதை, துடுக்கு எனப்பல அங்கங்களை ஆட வேண்டும் ஆடும் முறையில் சிற்சில வேறுபாடுகளைக்கொண்டு சுத்தபத்ததி, விசித்திரபத்ததி, தேசிபத்ததி என மூன்று வகைகளைக்கூறுகிறார். கி. பி. ஆயிரத்து எண்ணூற்றிருபத்திஐந்தில் தஞ்சையில் ஆண்டவர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி. இவர் நாட்டியத்தில் சிறப்பாக ஈடுபாடு கொண்டவர். பல நிரூபணங்களை இவரே இயற்றியுள்ளார். இவர் காலத்தில் அரங்கேறி ஆடும் பெண்கள் பதினெட்டு உருப்படிகளை ஆடியதாக அறிகிறோம். அவை கீழ்க்கண்டவாறு பெயர் பெறுகின்றன.
ஜயஸ்துதி, சரணுசரணு, அலாரு, சொல்ல, சப்தம், வர்ணம், பதம், ஸ்வரஜதி, அபிநயபதம், தில்லானா, அபிநயபதம், ஜக்கினிபதம், கீதம், பிரபந்தம், திரிபுட, சுலோகவர்ணம், கவுத்தம் மங்களே. இப்பெயர்கள் சற்று மராட்டியச் சாயலுடன் வழங்கும் தமிழ் சொற்களே. அலாரிப்பு என்னுந் தமிழ்ச்சொல் அலாரு என்றுள்ளதைக் காணலாம். சரபோஜியின் காலத்தில் வாழ்ந்தவர்கள்தாம் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்று புகழ்வாய்ந்த தஞ்சை சகோதரர்கள். இவர்கள் தஞ்சைக்கோயில் நட்டுவனார்களாகவும், சரபோஜி அவர் மகன் சிவஜி ஆகிய இருவர் அவைக்களத்திலும் நாட்யாசார்யர்களாகவும் திகழ்ந்தவர்கள். நாட்டியத்திற்குப் பல வர்ணங்கள் ஜதி முதிலியவற்றைத் தமிழ், தெலுங்கு மொழிகளில் இயற்றியவர்கள். இவர்கள் இயற்றிய பல பாடல்களை இன்றும் நமது நாட்டியமணிகள் தமது ஆடல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இன்று நம் பெண்கள் ஆடும் ஆடல் மரபை சீர் செய்தவர்கள் இவர்களே என்றும் இன்றைய நாட்டிய மரபின் தந்தை என இவர்களையே கூறவேண்டும் என்றும் இவர்களே, புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், பதம், சப்தம், தில்லானா என்ற வரிசையை ஏற்படுத்தியவர்கள் என்றும் சிலர் கூறுவர்.
நாட்டியம் தொடக்கம் முதல் மங்களம் வரை இவர்களுக்கு நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே இன்று ஆடுவது போலவே பெண்கள் ஆடினர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. நிலக்கோட்டை ஜமீன்தார் நாகமகூளப்ப நாயக்கர் மீது சுப்ரதீபக்கவிராயர் என்ற புலவர், ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலுக்கு கூளப்பநாயக்கன் விறலி விடுதூது எனப்பெயர். இது மதுரையை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆண்ட காலத்தில் எழுதப்பெற்றது. கி. பி. ஆயிரத்து எழுநூற்றி இருபத்தைந்தைச் சார்ந்தது. மதுரை மீனாஷி அம்மன் கோயிலில் ஆயிரக்கால் மண்டபத்தில் ஒரு நாட்டியப்பெண் ஆடியதாக இந்நூல் கூறுகிறது. அவள் தொடக்கம்முதல் இறுதிவரை என்னென்ன உருக்கள் ஆடினாள் எனத் தெளிவாகக் கூறுகிறது. முதலில் அப்பெண் தெய்வ சுருதி பாடினாள். பின்னர் கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் ஆகிய இசைக் கருவிகள் இசைத்தன. பின்னர் அப்பெண் புஷ்பாஞ்சலி செய்தாள். அதன் பின் பிள்ளையார் கவுத்துவம், சுப்ரமண்யர் கவுத்துவம் ஆடினாள். பின்னர் நந்திகேசுவரரின் அபிநய தர்ப்பணத்தில் கூறியுள்ளபடி அலாரிப்பு செய்தாள். பின்னர் கைச்சலாம் செய்தாள். இதன்பின்னர் வரிசையாக தரு ஜதி, கீதம் முதலியன ஆடினாள் என மேலும் தொடர்கிறது.
தெய்வசுருதி காணும் இசை, ராகம், கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் கோணாமல் கூடும் சுருதியுடன் கொம்பனையாள் சங்கீதம் பாடும் சுருதி இன்பம் பாலிக்க என அப்பாடல் தொடங்குகிறது. சிலப்பதிகார காலத்திலேயே ஆடல் தொடங்கும் முன் தெய்வப் பாடல் இரண்டு பாடப்பெற்றது எனக் கண்டோம். சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் பிறகு இந்நூலில் தெய்வச்சுருதி பாடப்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நமது மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காப்பாற்றப்படும் மரபு என்பு இதிலிருந்து தெளிவாகிறது. புஷ்பாஞ்சலி செய்து கணேச கவுத்துவம் சுப்ரமண்யர் கவுத்துவம் கொண்டபிறகு ஒரு எடுப்பெடுத்தாள் எனக் கண்டோம். எடுப்பென்றால் என்ன?
கி. பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் வேங்கடமகி என்பவர். தஞ்சை நாயக்கர் அரண்மனையில் அமைச்சராய் இருந்தார். அவர் சதுர்தண்டி பிரகாசிகை என இசையைப்பற்றி ஒரு நூல் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார். இதில் எடுப்பு என்ற தமிழ்ச் சொல்லை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார். வாயப்பாட்டில் ஆலாபம் என்பது ஒரு தொடக்கநிலை. அது ஆயத்தம் என்றும் எடுப்பு என்றும் இரு பகுதியாக இருக்கும். ஒரு ராகத்தைப்படிப்படியாக வளர்ப்பதை எடுப்பு என்கிறார். இதற்கு ராகவர்த்தினி என்றும் பெயர் உண்டு. இதயே இப்பெண் எடுத்தாள் என இந்நூல் கூறுகிறது. முகம்மதியர் படை எடுப்புக்குப்பின்னர் அவர்களது நாகரிகக் கூறுகள் சில நம் நாகரிகத்துடன் இணைந்தன. அவ்வாறு இணைந்தவற்றில் சலாம் செய்தல் என்பது ஒன்று. கி. பி. ஆயிரத்து எழுநூற்று இருபத்தைந்திலேயே இது நமது இசையுடனும் நாட்டியத்துடனும் இணைந்துவிட்டது என்பதற்கு இந்நூல் சான்று. நாட்டியத்தில் முதலில் சலாம் செய்வது வரும். இதை இந்நூல் கைச்சலாம் செய்தாள் என்று கூறுகிறது. இராமநாதபுரத்தில் ஆயிரத்து எழுநூற்று இருபத்தைந்தில் தீட்டிய ஓவியங்கள் இராமலிங்க விலாசம் என்ற மாளிகையில் உள்ளன. அவற்றில் சில பெண்கள் சேதுபதி அரசரின் முன்னர் ஆடுவது போல் உள்ளன. ஒன்றில் ஆடும் பெண் சலாம் செய்தல் தீட்டப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிகள் கூட தமது கீர்த்தனைகளில் சலாமுரே என்ற பதத்தைப் பயன்படுத்தி பாடியுள்ளார். தஞ்சாவூர் மராட்டிய அரசர்களின் அவையில் நாட்டியமணிகள் சலாமிடுவது வழக்கமாயிருந்தது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட சலாம் என்ற உருப்படியை பெண்கள் ஆடிவந்தனர். இப்பொழுது இது ஆடப்படுபவதில்லை.
கைச்சலாத்தின் பிறகு இப்பெண் தரு, ஜதி, கீதம், பிரபந்தம், பதசாரி, அபிநயம், பேரணி, ஜக்கனி, கூத்து, தேசிகம், முதலியன ஆடினாள் என்றும் இறுதியில் ஜயமங்களம் ஆடி முடித்தாள் என்றும் கூறுகிறது. ஆகமொத்தம் பதினெட்டு உருப்படிகளை இப்பெண் ஆடியுள்ளாள். சரபோஜு நிரூபணத்திலும் இவ்வாறு பதினெட்டு உருப்படிகள் ஆடப்பெற்றன எனக் கண்டோம். பதினெட்டு உருப்படிகளையும் ஆடி முடிக்க நான்கு மணிக்கும் மேலாகும். அக்காலத்தில் மக்கள் நான்கு மணி நேரம் அமரந்து பார்க்கும் மரபு இருந்தது. இக்காலத்தும் கிராம மக்கள் நீண்ட நேரம் ஆட வேண்டும் என விரும்புவதைக் காண்கிறோம். ஆதலின் நாட்டியம் ஆடும் பெண் தான் ஆடும் உருப்படிகளை வரிசைப்படுத்தி ஆடுவது என்பது தொன்றுதொட்டு வரும் மரபு என்பது தெளிவு. அண்மைக் காலங்களில் சிலர் தஞ்சை சகோதரர்கள் என்னும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரும் தான் சரபோஜி அவையில் இன்றுள்ள நாட்டிய மரபை சீர்செய்தார்கள் எனக்கூறுகின்றனர். தஞ்சை சகோதர்கள் என்ன சீர் செய்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை.
நாட்டியப்பெண் பாடும் மரபு:-
மேலும் கூளப்பநாயக்கர் விரலிவிடுதூது, ஆடுகின்ற பெண் இடையில் கீதம் பாடினாள் என்று கூறுகிறது. அண்மைக்காலம் வரையில், நாட்டியம் ஆடும் பெண்ணுக்கு நன்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும். ஆடலின் இடையில் பாட வேண்டும். தற்காலத்தில் தெலுங்குதேச குச்சிபுடி நடனத்தில் சிலர் இடை இடையே பாடிகின்ற மரபைக் கொண்டுள்ளனர். தமிழ் மரபில் இது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. அப்பர், ஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் ஆடும் போது பாடவும் செய்தனர். என மாதர் பண்ணுடன் பாடி ஆட என்றும், இழைவளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட என்றும் தேவாரப் பாடல்கள் குறிப்பதைக் காணலாம்.
நாட்டியச்சொற்கள்:-
நாட்டியத்தில் இன்று பயன்படுத்தும் சில சொற்கள் எவ்வளவு தொன்மையானவை எனக்காண்போம். நமது பரதநாட்டியத்தில் கை தை என்ற சொற்களை சொல்லுகட்டில் பயன்படுத்துகிறார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் எனக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். ஈரோட்டுக்கு அருகில் அறச்சலூர் என்ற இடத்தில் ஒரு மலையில் குகைப்பகுதி ஒன்று உள்ளது. அதில் தை த தை த தை என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் இச்சொற் கோர்வைகளைக் கோர்த்தவன் பெயர் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி. பி. இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது. சதி என்ற சொல்லை அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் தமது பாடல்களில் பயன்படுத்துகின்றனர்.
சரியின் முன்கை நன்மாதர் சதி பட மாநடமாடி என்று சம்பந்தரும், குடமுழவச்சதிவழியே அனல் கையேந்தி கூத்தாடவல்ல குழகனாகி என்று அப்பரும், கூடிய இலயம் சதிபிழையாமை கொடியிடை உமையவள் காண என சுந்தரரும். பாடுவதிலிருந்து நாட்டியத்தில் ஜதி என்ற சொல் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. அது போல் தேம் தாம் என்ற ஜதிச்சசொற்களை சம்பந்தர் அப்படியே பயன்படுத்துகிறார்.
தேம்தாம் என்று சேயிழையார் நடமாடும் திருவையாறே என்று கூறுகிறார். அதுபோல் தென்னாதெனா என்ற சொற்களும் நாட்டியத்தில் பயன்படுகின்றன. இவற்றை மாணிக்கவாசக சுவாமிகள் தமது பாடலில் தென்னாதென்னாவென்று தெள்ளேணம் கொட்டோமோ. என்கிறார். இப்பொழுது ஆடலில் தில்லானா என்று ஒரு ஆடலைக் குறிக்கின்றனர் இதில் திறனா திறனா என்ற சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. திறனா திறனா என்ற சொல்லும் பண்டைய நூல்களில் காணப்படுகிறது. கி. பி. அறுநூறில் ஆண்ட பல்லவ அரசன் மகேந்திரவர்மன் தான் எழுதிய மத்தவிலாசப்பிரஹஸனம் என்ற நூலில் திறண திறண என்று குறித்துள்ளான். திறணம் என்றசொல் தெள்ளணம் என மருவி வந்துள்ளதோ என்று கூட ஐயப்படலாம்.
இன்று நாட்டியத்தில் பயன்படும் வர்ணம், கீதம், ஜதி, வலி, நிருத்தம், சொக்கம், லயம், கரணம் முதலிய பல சொற்களும் தேவாரப் பதிகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இன்று பதம் என்று ஒரு உருப்படி ஆடப்படுகிறது. அது அபிநயத்தை அடிப்படையாகக் கொண்டது. சிருங்காரச் சுவையை பிரதானமாகக் கொண்டது. கி. பி. பதினெழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷேத்ரஞரின் பதங்கள் புகழ் வாய்ந்தவை, பதம் என்ற சொல் எதிலிருந்து வந்தது? பரதமுனிவர் தாண்டவம் என்றும் லாஸ்யம் என்றும் இருவகை நடனங்களைக் குறிக்கிறார். தாண்டவம் சிவபெருமான் ஆடியது. லாஸ்யம் என்பது உமாதேவி ஆடியது. உமை அன்னை உஷைக்கு லாஸ்யத்தைக் கற்றுக் கொடுத்தாள்.
லாஸ்யம் என்பது லஸனம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலால் ஏற்படும் மனோ பாவங்களை வெளிப்படுத்துவது லாஸ்யம் எனப்படும்
லஸநாத்லாஸ்யம் இத்யுக்தம் ஸ்திரீபும்பாவ ஸமாச்ரயம் என்று பரதர் கூறுகிறார். ஆதலால் சிருங்காரச் சுவையை பிரதானமாகக் கொண்டு ஆடப்படுவது தான் லாஸ்யம் என்னும் நடனமாம். வெறும் பாடலில் மட்டும் ச்ருங்காரத்தை வெளிப்படுத்துவது கேயபதம் என்றும் நாட்டியத்தில் பயன்படுத்துவது அபிநயம் என்றும் அழைக்கப்பட்டன.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கூட நாட்டியத்தில் பயன்படுத்துவதை அபிநயம் என்றே அழைத்தனர். அச்சொல்லே சுருக்கமாக இக்காலத்தில் பதம் என்று அழைக்கப்படுகிறது.
பண்டைய தமிழகத்தில் அகக்கூத்து என்றும், புறக்கூத்து என்றும் இருவகைக்கூத்துக்கள் இருந்தன. இவற்றில் அகக்கூத்து என்பது காதல் சுவையை முதன்மையாகக் கொண்டது. இதை அகமார்க்கம் என்றும் கூறுவர். லாஸ்யம் என்றாலும் அகமார்க்கம் என்றாலும் ஒன்றே. குரவைக்கூத்து என்று சிலப்பதிகாரம் கூறும் ஆடல் அகமார்க்கத்தை சார்ந்ததே. இது கூட வட இந்தியாவில் ராஸகேளி என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டது.
அகமார்க்கத்துக்கு எனத்தனியாகப்பாடல்கள் உண்டு. கந்தம் முதல் பிரபந்தம் வரை உள்ள பாடல்கள் அகமார்க்கத்துக்கு உரிய பாடல்களாகும் என்று உரையாசிரியர்கள் கூறுவர். இதிலிருந்து பிரபந்தம் என்ற பாடல் அகச்சுவையைப் பிராதானமாகக் கொண்டு நாட்டியத்திற்காகப் பயன்பட்டது என்பது தெளிவு. தமிழ்நாட்டில் தொன்னூற்றாறு வகையான பிரபந்தங்களைக் குறிப்பர். இப்பிரபந்தங்களை ஆராயும் போது அறுபதுக்கும் மேற்பட்டவை காதல் சுவையை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டவை. பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்கள் தமிழில் உள்ள மிகத் தொன்மையான இசைப் பாடல்களாகும். இவற்றில் கலித்தொகை முற்றிலும் அகச்சுவையைப் பொருளாகக் கொண்டது.
நாட்டியத்திற்காக இயற்றப்பட்ட இசைப்பாடல்கள் இவை. அதே போன்று பரிபாடலும் நாட்டியத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இசைப்பாடல் எனக் கருதுகிறேன். புறநானூறு என்னும் என்னும் தொகுப்பு புறக்கூத்துக்கும், அகநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கியங்கள் அகக்கூத்துக்கும், பயன்படுத்தப்பட்ட இசைகள் எனவும், அகம், புறம் என்னும் பிரிவே இதன் அடிப்படையில் தோன்றியதோ என்றும் கொள்ளலாமோ எனில், கொண்டால் தவறில்லை, பொருத்தமே என்பது எனது கருத்து ஆற்றுப்படை என்னும் வகை பிரபந்தங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. பாணரும் விறலியரும் இவ்வகைப் பிரபந்களில் இடம் பெறுதல் காணலாம்.
கோவை, கலம்பகம், பரணி, உலா, தூது, பிள்ளைத்தமிழ், ஊசல், சிந்து ஆகிய பாடல்வகைகள் நாட்டியமாக ஆட எழுதப்பட்டவை. ஆழ்வார்கள் பாடிய பாடல்களை திவ்யப்பிரபந்தம் என்று சொல்கிறோம். இவை தெய்வப்பாடல்கள் தெய்வத்தின் மீது பெண்கள் பாடி ஆடுபவை. நாட்டியத்திற்காகப்பயன்பட்டவை.
இன்றும் திவ்ய பிரபந்தப்பாடல்கள் அனைத்திற்கும் அரையர் என்போர் பாடி அபிநய நாட்டியம் புரிவர். இவை நாட்டியத்தின் மூலம் தெய்வ வழிபாடாக மிளிர்ந்தவை என்பதைக்காட்டும். திவ்யப்பிரபந்தங்களில் பல பாடல்களும் அகத்துறைப்பாடல்களாக உள்ளன. இவற்றை ஆடல் மகளிர் கோயில்களில் பாடி ஆடும்போதுதான் இவற்றின் அர்த்தம் பொருத்தமாக அமைகிறது. இம்மரபு அறியாது சில ஆராய்ச்சியாளர்கள் இப்பாடல்களை அடியார்கள் பாடுகிறார்கள், என்றும் இது மனோதத்துவத்துக்கே முரண்பாடு என்றும் எழுதுவது பொருத்தமற்றது. மரபு தெரியாத ஆராய்ச்சியாகும். தேவராப்படல்கள் பலவும் ஒரு பெண் சிவபருமான் மீது காதல்கொண்டு, அதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். கீழ் வரும் பாடலைக் காணுங்கள்.
வண்ணமும் வடிவும் சென்று கண்டில ள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்தில ள்
கண்ணுலாம் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
அண்ணலே அறிவான் இவள் தன்மையே
என்று அப்பர் பாடுகிறார்.
சொன்மாலை பயில்கின்ற குயிலனங்கள் சொல்லீரோ
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னி
பொன்மாலை மார்பன் என் பொதுநலமுண்டு இகழ்வானோ
என்னும் அப்பர் பாடலும் அகப்பாடலே.
பண்டைய தமிழகத்தில் கோயில் வழிபாட்டில் ஒரு அங்கமாக நாட்டியம் திகழ்ந்தது. ஆதலின் பாடலும் ஆடலும் இணைந்தே வளர்ந்தன. பல ஆயிரக்கணக்கான பாடல்கள் தோன்ற ஊக்குவிக்கும் உணர்வாகத் திகழ்ந்தது நாட்டியமே. ஆதலின் தேவாரப் பாடல்கள் நாட்டியத்திற்காகப்பயன்பட்டன எனில் அது மிகையாகாது.
மாணிக்கவாசக சுவாமிகள் எழுதியவை திருவாசகம் என்றும் திருக்கோவையார் என்றும் அழைக்கப்படுகின்றன. திருக்கோவையார் முற்றிலும் காதல் சுவையின் அடிப்படையில எழுதப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆன்றோர் இதை மாணிக்கவாசக சுவாமிகளே எழுதினார் என்பர். ஆயினும் இன்று சிலர் இதில் உள்ள காதற் சுவையைக் காணில் மாணிக்கவாசக சுவாமிகள் இதை எழுதியிருக்கமாட்டார் என்கின்றனர். ஆடும் பெண்கள் கோயில்களில் பாடி ஆட எழுதப்பெற்றது ஆதலின் மாணிக்கவாசகரே எழுதினார் என்பர் ஐயமில்லை. மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் ஆடுவதற்காக எழுதப்படவை. திருவாசகத்தில் கீழ்வரும் பாடல்கள் அவ்வகையைச் சார்ந்தவை.
திருவெம்பாவை, அம்மானை, பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டல், திருச்சாழல், கோத்தும்பி, பூவல்லி கொய்யல், உந்தீபற, தோணெக்கம், பொன்னூசல், அன்னைப்பத்து, குயில்பத்து. முதலிய அனைத்தும் நாட்டிய மகளிர் ஆடுவதற்காக எழுதப்பெற்றவை. கோயில்களில் திருவாசகப் பாடல்களைத் தேவரடியார் பெண்கள் பாடி ஆடினர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. குலோத்துங்க சோழன் காலத்தில் முதல் பத்து பாடுவதற்கும், இரண்டாம் பத்து, கடைக்காப்பு, சாழல்பாடி ஆடவும் விட்ட நிவந்தங்களைக் கல்வெட்டு கூறுகிறது. ஆதலின் திருவாசகப் பாடல்கள் ஆடப்பெற்றன என்பதில் ஐயமில்லை. பாண்டிய-பல்லவர் ஆகிய அரசர்களின் அவையில் பல பாடல்கள் எழுதப்பட்டன. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்ந்தர் காலத்தில் வாழ்ந்தவன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்ற பாண்டிய மன்னன் இவனுக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்றும் நின்ற சீர் நெடுமாறன் என்றும் பெயர் உண்டு. அவன் மீது பாடப்பெற்றது பாண்டிக்கோவை என்னும் நூல் இந்நூலின் பாடல்கள், பாண்டிய மன்னனின் சிறப்பையும் வெற்றிகளையும் பாடி ஒரு பெண் அவன்மீது கொண்ட காதலை எடுத்தியம்புவதாக உள்ளது. ஆதலின் இப்பாடல்கள் பாண்டியன் அவையில் நாட்டிய மகளிரால் ஆடப்பட்டவை எனலாம். இது போன்று தெள்ளாறெறிந்த நந்திவர்மன் மீது பாடப்பட்டது நந்திக்கலம்பகம் என்னும் நூல். இதில் உள்ள பாடல்களும் நந்திவர்மனைத் தலைவனாகக் கொண்டு தலைவியின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமின்றி இவை இவைப் பாடல்களாகவும் உள்ளன. அம்போதரங்கம் என்னும் இலக்கண அமைப்பில் தாளத்திற்கு ஏற்ப அமைந்த பாடலேயாகும். ஆதலின் இப்பாடல்கள் நந்திவர்மனின் அவையில் நாட்டிய மகளிர் பாடி ஆடியவையே.
சோழர்காலத்தில் நாட்டியம் மிக உன்னத நிலயை அடைந்திருந்தது. அப்பொழுது பல பாடல்கள் நாட்டியத்திற்காக இயற்றப்பட்டிருக்க வேண்டும். அவை எவை எனத் தெளிவாகக் கூறச்சான்று கிடைத்தில. ஆயினும் ஒன்றிரண்டு மட்டும் நாட்டியத்திற்காக இயற்றப்பட்டவை எனத் திட்டவட்டமாகக் கூறலாம். குலோத்துங்க சோழனின் கலிங்கத்து வெற்றியைக் கூறுவது கலிங்கத்துப் பரணி. இது ஜயங்கொண்டார் இயற்றியது.
கலிங்கத்துப் பரணியின் அமைப்பைக் காணும்போது அது குலோத்துங்கனின் அவையில் நாட்டிய நாடகமாக ஆடப்பட்டது எனலாம். அது போன்று ஒட்டக்கூத்தர் இயற்றியநூல் தக்கயாகப் பரணி என்பது. தக்கையாகப் பரணி கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் இராஜரஜேச்சுரத்து இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. அக்கோயில் நாட்டிய நாடகமாக ஆடப்பெற்றது. அதேபோன்று விக்ரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராஜராஜன் உலா என்னும் மூவர் உலாக்களும் அம்மனர்களின் அவையில் நாட்டியமாக ஆடப்பெற்றவை. பிற்காலத்தில் பல பாடல்கள் நாட்டியத்திற்காக இயற்றப்பட்டன. அருணகிரியாரின் திருப்புகழும், குமரகுருபரர் இயற்றிய பிரபந்தங்களும் இவ்வகையைச் சார்ந்தவையே எனலாம்.
நாட்டியம் கோயில் வழிபாட்டின் அங்கம்:- கோயில்களில் வழிபாட்டின் அங்காமாக நாட்டியம் திகழ்ந்தது. கோயில் வழிபாடு பதினாறு அங்கங்களை உடையது.
ஷோடசோபசாரம் என்று இதைக்கூறுவர். இதில் கீதவாத்தியம் பதினான்காவது அங்கம் என்றும் நிருத்தம் பதினைந்தாவது அங்கம் என்றும் ஆகம நூல்கள் கூறுகின்றன. ஈசான குருதேவ பத்ததி என்ற நூல் வழிபாட்டில் நிருத்தம் எவ்வாறு பயன்பட்டது எனக்கூறுகிறது. கோயிலை முதலில் வலம் வரும்போது வாத்யங்கள் மத்யமத்தில் இசைக்கப்படவேண்டும். இரண்டாவது சுற்றில் அதாவது ஸீரி பலி கொடுக்கும்போது விளம்பிதத்தில் ஸங்கீதம், லாஸ்யம், தாண்டவம், மண்டனம் ஆகியவற்றை புரிதல் வேண்டும். மூன்றாவதாக வலம் வரும்போது கீதமும், வாத்தியமும் துருதத்தில் இசைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
ஸ்ரீ பலி என்பது கோயில்களில் நாள்தோறும் சந்திதோறும் நடைபெறும் ஒரு வழிபாடு. இதில் பிரம்மா முதலிய தேவதைகளுக்கும் திகபாலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, சோமன், ஈசானன், ஆகிய தெய்வங்களுக்கு அன்னம் படைக்கப்படும். அவ்வமயம் நிருத்தம் புரியவேண்டும். ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனி நிருத்தம் உண்டு. தாளங்களும் வெவ்வேறு தாளங்களாகும். சிதம்பர ஷேத்ர சர்வஸ்வம் என்ற நூலில் சில சிறப்புச்செய்திகள் கூறப்படுகின்றன. வீதிகளில் அந்தந்த திசைக்கு ஏற்ற கீத நாட்டியத்தையும் பரதர் குறிக்கும் பிரமணம் முதலிய விலாச நிருத்தியங்களையும் செய்வர். கணிகையர்கள் பரதர் கூறிய நாட்டியத்தைப்புரிவர் என்றும் கூறுகிறது.
திருமால் கோயிலில் புரிய வேண்டிய நிருத்தங்கள் பதினெட்டுக்கும் குறிக்கப்படுகின்றன இவற்றில் மண்டலம், பிருஷ்ட குட்டிமம், கமலம், கமலவத்விருத்தம், ஸர்வதோபத்ரம், விலாசம், கேதகம், விஷ்ணுக்ராந்தம், பத்ரமாலி, காந்தார குட்டிமம், விருத்த குட்டிமம், பாரிபத்ரம், கடிபந்தனம் என்பவை நாட்டியவகைகள். சைவக் கோயில்களில் அஜபா நடனம், குக்குட நடனம் முதலிய நடனங்கள் இடம்பெற்றன. கல்வெட்டுக்களில் நாட்டியத்தைப் பற்றிப் பல செய்திகள் உண்டு. அவற்றைப் பற்றி விரிந்த ஒரு நூலே எழுதலாம். பரதநாட்டிய வரலாறு, குறிப்பாகத் தமிழகத்தில் வளர்ந்த விதம் இன்னம் சிறக்க எழுதப்பட வேண்டும். அம்முயற்சியின் ஒரு அங்கமே இது.
பண்ணியல்பாக பத்திமையாலே
பாடியும் ஆடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி
வியனுலகாண்டு வீற்றிருப்பவரே
-சம்பந்தர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version