- Ads -
Home கட்டுரைகள் சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (9): காக -பிக நியாய..!

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (9): காக -பிக நியாய..!

காகமும் குயிலும் பார்ப்பதற்கு கருப்பாகவே இருக்கும். அவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வசந்த காலம் வந்தால் காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாடு

samskrita nyaya

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

‘காக -பிக நியாய’ – காக்கையும் குயிலும்!

காக: – காகம். பிக: – குயில்

காகமும் குயிலும் ஒன்று போலவே இருந்தாலும் அவற்றின் திறமைகள் வேறு வேறு. காகம் கரையும். குயில் கூவும். அது கத்தல். இது இனிமை. அதுதான் வேறுபாடு.

வெளி உருவத்தைப் பொறுத்து மட்டுமே யாருடைய திறமையையும் கணக்கிட முடியாது. சந்தர்பம் வரும்போது மட்டுமே அவர்களின் திறமை வெளிப்படும். அந்த சந்தர்பத்தைக் காலமே தீர்மானிக்கும் என்ற செய்தியை அளிக்கும் புகழ் பெற்ற நியாயம் ‘காக-பிக’ நியாயம்.

“உப்பும் கற்பூரமும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். ருசி பார்க்கும் போதுதான் எது உப்பு எது கற்பூரம் எனபது தெரியும். மனிதர்கள் கூட அப்படித்தான். யார் எப்படிப்பட்டவரோ வெளி வடிவத்தைப் பொறுத்து கணக்கிட முடியாது” என்கிறார் யோகி வேமனா புகழ் பெற்ற அவருடைய் “உப்பு கப்புரம்பு ஒக்க போலிகனுண்டு….” என்ற செய்யுளில்.

பண்டிதரைப் போல ஜரிகை வேட்டி, அங்கவஸ்திரம் தரித்தால் போதுமா? சபையில் பேசும்போதோ கேள்விக்கு பதிலளிக்கும் போதோ பேச்சின் திறமையைப் பொறுத்து பண்டிதர் யார்? அல்லாதவர் யார்? என்பது வெளிப்பட்டு விடும்.

பாகவத புராணத்தில் வர்ணித்த ஜடபரதரின் கதையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். முற்பிறவி நினைவோடு பிறந்த ஜடபரதர் சம்சார மோகத்தில் விழாமல் கவனமாக இருந்தார். ஜடம் போல் இருக்கத் தொடங்கினார். அனைவரும் அவரை எருமை மாட்டோடு ஒப்பிட்டனர். அதோடு நிற்கவில்லை. வண்டியில் கட்டி இழுத்தனர். அவர் சகித்துக் கொண்டார். ஒரு நாள் அரசன் ரஹுகுணன் பல்லக்கில் சென்று கொண்டிருந்தான். பல்லக்கு தூக்குவதற்கு ஒருவன் தேவைப்பட்டான். தேடிய வீரர்களுக்கு ஜடபரதர் கண்ணில் பட்டார். அவரை பலவந்தமாக இழுத்து வந்து பல்லக்கைத் தூக்க வைத்தனர். பழக்கமில்லாததாலும் காலின் கீழ் உயிரினங்களை மிதித்து விடக் கூடாது என்பதாலும் ஜடபரதர் மெதுவாக குதித்துக் குதித்து நடந்தார். அரசனுக்கு தொந்தரவாக இருந்தது. அவன் கோபத்தோடு ஏளனமாக ஜடபரதரை கண்டித்தான். தண்டனை விதிக்க நினைத்தான். அதற்கு அந்த யோகி அளித்த பதிலைக் கேட்டு அரசன் வியந்து நின்றான். யோக சாஸ்திர சாரமெல்லாம் அந்த பல்லக்குத் தூக்கியின் சொற்களில் வெளிப்பட்டது. ஜடபரதர் பார்ப்பதற்கு பைத்தியம் போலிருந்தாலும் வாய் திறந்தால் கேட்பவருக்கு அறியாமை இருள் விலகிவிடும். அரசனுக்கு அவர் சாமானிய மனிதன் இல்லை என்பது புரிந்தது. உடனே பல்லக்கை விட்டு இறங்கி ஜடபரதரின் காலில் விழுந்து வணங்கினான். ஜடபரதர் அரசனுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தார்.

தற்காலத்தில் இதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றது. சூட் பூட் அணிந்த ஒருவர் ரயிலில் இருந்து இறங்கினார். தன்னுடைய பையைத் தூக்குவதற்கு தயங்கி, ‘கூலி! கூலி!’ என்று குரல் கொடுத்தார். அதற்குள் அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் சாதாரண உடையில் இருந்ததால் அவரை சுமை தூக்கும் கூலி என்று நினைத்து தன் பையைக் கொடுத்து, “வாசல் கேட் வரை தூக்கி வா” என்றார். அந்த மனிதர் மறுபேச்சின்றி அந்த மூட்டையைத் தூக்கி வந்தார். அந்த சூட் அணிந்த ஆசாமி பணம் கொடுக்க முன்வந்த போது வாங்க மறுத்தார்.

அன்று மாலை நடந்த பெரும் மாநாட்டில் கூலி என்று நினைத்த மனிதர் மேடையில் அற்புதமான உரை நிகழ்த்தினார். வியப்படைவதா வெட்கப்படுவதா என்று அந்த சூட் ஆசாமிக்கு புரியவில்லை. அந்த உரை நிகழ்த்திய மனிதர் யார் தெரியுமா? அவரே அறிஞரும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வரசந்திர வித்யாசாகர்.

உருவத்தைப் பார்த்து மனிதரை எடைபோடுவது தவறு என்று கூறும் காக-பிக நியாயத்திற்கு மற்றொரு புகழ் பெற்ற உதாரணம் – எட்டு வித கோணல்கள் கொண்ட உடல் படைத்தவரான அஷ்டாவக்ரர் கதை. இவருடைய உடலைப் பார்த்து வாயிற்காவலர் முதல் அனைவரும் இவரை சந்தேகித்தனர். அவமதித்தனர். அனைவரின் கணகீட்டையும் தலைகீழாகச் செய்து அரசவையில் ஜனகருக்கே ஞானம் உபதேசிக்கும் குருவாக அறியப்பெற்றார் அந்த பால மேதை.

இந்த சுலோகம் காக-பிக நியாயத்தைச் சுட்டுகிறது.

காக: கிருஷ்ண: பிக: கிருஷ்ண:
கோ பேத: பிக காகயோ:
வசந்தகாலே சம்ப்ராப்தே
காக: காக: பிக: பிக:

பொருள்: காகமும் குயிலும் பார்ப்பதற்கு கருப்பாகவே இருக்கும். அவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வசந்த காலம் வந்தால் காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாடு புரித்து போகும். 

—0o0—

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version