― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பாரதி(ய மொழிகள்) தினம்!

பாரதி(ய மொழிகள்) தினம்!

bharathiya bhasha utsav

கட்டுரை: பத்மன்

“இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்று மகாகவி பாரதியார் பாடிய பாடல் வரிகளுக்கான உண்மை அனுபவம், மத்திய அரசின் பாஷா பரிஷத் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்போது ஏற்பட்டது. மகாகவி சுப்ரமண்ய பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11ஆம் தேதி, இனி ஆண்டுதோறும் பாரத மொழிகளின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பாரதிய மொழி தினமாக (பாரதீய பாஷா திவஸ்) கொண்டாடப்படும் என்ற இனிய அறிவிப்பே அது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் அனைத்துக் கல்லூரிகளிலும் நிகழாண்டு முதல், ஆண்டுதோறும் டிசம்பர் 11ஆம் தேதியன்று பாரத மொழிகளின் ஒருமைப்பாட்டைப் பேணும் வகையில் பல்வேறு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்துள்ளது.

தமக்கு 11ஆவது வயதில் கிடைத்த பாரதி என்ற பட்டப்பெயரின் உட்பொருளுக்கு இணங்க, தான் ஓர் ஆண் வடிவக் கலைமகள் என்பதை சுப்ரமண்ய பாரதி தமது மேதாவிலாசத்தாலும் எழுத்துத்திறத்தாலும் நிரூபித்திருப்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரத்தில் தமது சிந்தனை வடிவங்களான கவிதைகள், கதைகள், கட்டுரைகள், காவியங்கள் உள்ளிட்டவற்றாலும் செயல்பாட்டினாலும் தாம் ஒரு தலைசிறந்த பாரதியன் (இந்தியன்) என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம், பாரதி என்ற பெயருக்கு மேலும் பொருத்தமன்றோ! தலை மீதான தமது முண்டாசுத் துணியை, தோள்பட்டைகளில் பரந்து விரியச்செய்தும், நெஞ்சு வரை இழுத்து இறக்கியும் அவர் கட்டியிருக்கும் பாங்கே, பாரத மாதாவையே முகத்தில் சுமந்திருக்கும் “பாரதி” என்பதை உணர்த்துமே!

பாரத மாதாவை நெஞ்சிலும் முகத்திலும் சுமந்த அந்த மகாகவி பாரதி, பாரத மொழிகளின் இணைப்புப் பாலமாகவும் உண்மையில் திகழ்ந்துள்ளார், திகழ்கிறார். அதனால்தான் அவரது பிறந்த தினம் தமிழர்கள் மாத்திரம் கொண்டாடக் கூடியதல்ல, அகில பாரத மக்களும் அகமகிழ்வுடன் கொண்டாட வேண்டியது என்பதை உணர்த்தும் வகையில் டிசம்பர் 11 ஆம் தேதி பாரதிய மொழி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களைச் சற்று அலசுவோமா?

“செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரத மாதாவைப் போற்றியவர் பாரதி. அக்காலத்தில் இந்தியாவின் முக்கிய மொழிகளாக அறியப்பட்ட பதினெட்டு மொழிகளுமே அன்னை பாரதம் பேசுகின்ற அருமை மொழிகள் என்பதை முதலில் அறிவித்தவர் பாரதி. அதேநேரத்தில் பேசுகின்ற மொழிகள் வேறுபட்டாலும் இந்தியர்கள் உணர்வால் ஒரே நாட்டினர் என்பதை “சிந்தனை ஒன்றுடையாள்” என்ற சொல்லாலும் பாரதி நாட்டியுள்ளார்.

வான்புகழ் கொண்ட வள்ளுவன் தந்த மறைநூலாம் திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள், நான்மறை உட்பொருளை நவிலும் தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள், கம்பன் காவியமாம் இராமாயணம் போன்ற பாரதப் பண்பாட்டுச் செழுமை வாய்ந்த எண்ணற்ற கலைப் படைப்புகளைக் கொண்ட இனிய தமிழ் என்பதால் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்” என்று அறிவுறுத்தியவர் பாரதியார். அத்துடன், பாரதத்தின் கலைப்படைப்புகள் அனைத்தும் தமிழிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று கட்டளையிட்டவரும் அவரே.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி பாடியிருப்பது தொன்மை வாய்ந்த தமிழின் இனிமை கருதி அவர் கூறிய உண்மை நவிற்சியே அன்றி, உயர்வு நவிற்சி அல்ல. ஏனெனில் அவருக்கு சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, மராட்டி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி போன்ற அன்னிய மொழிகளும் நன்கு தெரியும். அதிலும் தன்னடக்கத்துடன் யாமறிந்த மொழிகளிலே என்றுதான் அவர் கூறியிருக்கிறார்.

அதேநேரத்தில் நாட்டின் பிற மொழிகளை மதிப்பதோடு நேசிக்கும் அவரது உன்னத குணம்தான், அவரது பிறந்த தினத்தை பாரதிய மொழிகள் தினமாக அறிவிக்கக் காரணமாய் அமைந்துள்ளது. “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து” என்று பாடியதும் அவர்தான். “சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்” என்று கூறியதும் அவர்தான். “கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனப் பாடி, பாரதம் முழுவதும் பண்டப் பரிமாற்றம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியவர். “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்” என்று கூறி, நதிநீர் இணைப்புக்கும் நதிவழி ஒருமைப்பாட்டுக்கும் அறைகூவல் விடுத்தவர்.

“சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்று முழங்கி, குழந்தைகளுக்கும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை விதைத்தவர்.

நமது கல்வியானது பாரத நாட்டின் பெருமைகள் அனைத்தையும் பாலர்களுக்குப் புகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதை தமது கவிதைப் படைப்பான சுயசரிதையில் வலியுறுத்தியுள்ள பாரதி, ஆங்கிலக் கல்வி முறை அவ்வாறு அமையவில்லை என்பதையும் சாடியுள்ளார். கம்பன், காளிதாசன் ஆகியோரின் காவியங்கள், வானியல் மேதை பாஸ்கரனின் பெருமை, மிகச் சிறந்த இலக்கணம் எழுதிய பாணினியின் திறமை, ஆதிசங்கரின் தத்துவ மேன்மை, இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறள், மூவேந்தர்களின் அறநெறியிலான அரசாட்சி, சாம்ராட் அசோகனின் சிறப்பான பேரரசு, மிலேச்சர்களை வீழ்த்திய வீரசிவாஜியின் வெற்றி இவற்றையெல்லாம் சொல்லித் தராத கல்வியால் நமக்கு என்ன பயன்? என்று வினவுகிறார்.

அதேநேரத்தில் ஆங்கிலத்தையும் அவர் வெறுத்தவரில்லை. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்த்தல் வேண்டும்” என்று நல்ல விஷயங்கள் எந்த மொழியில் இருந்தாலும் நமது சொந்த மொழிக்கு அதனைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் பாரதி. இதனை ஊருக்கு உபதேசம் என்று கூறிடாமல், தானே அதற்கு முன்மாதிரியாக இருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். அந்தக் காலத்தில் ஆங்கிலக் கவிஞர் ஜான்ஸ்கர் என்பவர் எழுதிய “The Town of Let’s Pretend” என்ற தலைப்பிலான கவிதையை, “கற்பனையூர்” என்ற தலைப்பில் தமிழிலே மொழிபெயர்த்துள்ளார். இதேபோல் ஷெர்மன் என்ற ஆங்கிலப் பெண் புலவர் பாடிய கவிதையை “இந்திய அழைப்பு” என்ற தலைப்பிலே தமிழாக்கம் செய்துள்ளார். மூன்று அடிகளில் அமைந்த ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைகூவைத் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதியார்.

பாரத தேசியத்துக்கும், மொழி வழியிலான ஒருமைப்பாட்டுக்கும் மிகப் பெரிய பங்களிப்பாக சிறந்த மொழிபெயர்ப்புகளையும் பாரதியார் மேற்கொண்டுள்ளார். ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ள வேத ரிஷிகளின் செய்யுள்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நடத்திய ஞானபானு என்ற பத்திரிகையில் 1913 முதல் 1915ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு வேத ரிஷிகளின் கவிதை தொடராக வெளிவந்துள்ளது.
எழுநூறு ஸ்லோகங்களைக் கொண்ட பகவத் கீதையை எளிய முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். அதுமட்டுமல்ல பகவத் கீதை ஒரு வாழ்வியல் நூல் என்பதை விளக்கும் அற்புதமான ஆய்வுகளுடன் கூடிய மிக நீண்டதொரு முன்னுரையையும் வழங்கியுள்ளார். இந்த முன்னுரையே தனியொரு நூலாக அமையும் தகுதி படைத்தது. பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரத்தின் முதல் பாகமான “ஸமாதி பாதம்” என்ற பகுதியை (50 சூத்திரங்கள்) தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். தாம் நடத்திய கர்மயோகி என்ற பத்திரிகையில் இதனை 1909 முதல் 1911 ஆம் ஆண்டுவரையான காலத்தில் தொடராக வெளியிட்டுள்ளார். பாரதியின் இந்த அரிய சேவையைப் பாராட்டியுள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன்மிகவாதியுமான மகான் அரவிந்தர், “பாரதி இந்தியத் தத்துவங்களை அனுபவத்தால் உணர்ந்த மேதை. பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு பாரதியார் செய்துள்ள மொழிபெயர்ப்பு அருமையானது” என்று புகழ்மாலை சூட்டியுள்ளார்.

வேதத்தின் சில ஸ்லோகங்களையும், ஆழ்வார்களின் சில தமிழ்ப் பாசுரங்களையும் பாரதியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கண்ணம்மா என் காதலி உள்ளிட்ட தான் இயற்றிய சில பாடல்களையும், தமது சில கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்துள்ளார். அரவிந்தரின் ஆங்கிலக் கட்டுரைகளை பாரதி தமிழாக்கித் தந்துள்ளார். வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் புகழ்பெற்ற “வந்தேமாதரம்” பாடலை, தமிழில் இரண்டு முறை மொழிபெயர்த்துள்ளார்.

வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் புதினத்தை சர்மா என்பவர் தமிழில் மொழிபெயர்த்தபோது, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்தப் புதினத்தில் இடம் பெற்றிருந்த வந்தமாதரம் சுபலாம் சுஜலாம் என்று தொடங்கும் வங்க மொழிக் கவிதையைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தார். அந்தப் பாடல் பாடுவதற்கு எளிமையாக இல்லை என்று கருதிய பாரதியார், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதே வந்தேமாதரம் பாடலை, எளிய தமிழில் இரண்டாவது முறையாக மொழிமாற்றம் செய்தார்.

மகாகவி என்று போற்றப்படும் மற்றொரு கவிஞரான ரவீந்திரநாத் தாகூரைத் தனக்குப் போட்டியாகக் கருதாமல் அவர் நோபல் பரிசு பெற்றபோது பாராட்டிக் கொண்டாடியவர் பாரதி. இதேபோல் தாகூர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்தச் செய்தியையும் அவரது உரையையும் தமது இந்தியா நாளிதழில் புகழ்ந்து எழுதினார். மேலும், இந்தச் செய்திக்கு இந்தியப் பத்திரிகைகள் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நல்லதொரு பத்திரிகையாளனாகக் குமுறிய பாரதி, இந்தியர் ஒருவர் வெளிநாட்டுக்குப் பயணம் சென்று இந்தியாவின் புகழைப் பரப்புவது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வா என்றும் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்ல, ரவீந்திரநாத் தாகூர் எழுதியவற்றில் ஐந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து “பஞ்ச வியாசங்கள்” என்ற தலைப்பில் பாரதி வெளியிட்டுள்ளார். தாகூர் வங்க மொழியில் இயற்றிய சிறுகதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதுவையில் தங்கியிருந்தபோது “லா மார்ஸலேஸ்” என்னும் பிரெஞ்சு தேசிய கீதத்தை, “அன்னை நன்னாட்டின் மக்காள்” என்று தொடங்கும் கவிதையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு தேசிய கீதத்தின் மெட்டில் பாரத அன்னையைப் புகழும் பாடலையும் பாடியுள்ளார்.
“பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்” என்று பாரத அன்னைக்குத் திருப்பள்ளியெழுச்சியோடு திருத்தசாங்கமும் பாடியவர் மகாகவி பாரதியார். “எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” என்று முழங்கி, அவ்வாறு தோள்கொட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டவர்.

“ஒளி படைத்த கண்ணினாய் வாவாவா, உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா” என்று இளைய பாரதத்துக்கு அழைப்பு விடுத்தவர். “பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்று நம் எல்லோருக்கும் உத்தரவிட்டவர்.

மகாகவி பாரதியின் அறிவுரையை சிரமேற்கொண்டு “வையத் தலைமை கொள்” என்பதை நோக்கி மத்திய அரசு வீறுநடைபோடுகிறது என்பது அதனுடைய பல்வேறு செயல்களின் மூலம் வெளிப்படுகிறது. “எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்” என்ற மகாகவி பாரதியின் கனவு, நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. இதற்கு கட்டியம் கூறுவதைப் போல் அறிவிக்கப்பட்டுள்ள பாரத மொழிகள் தினத்தைப் பெருமகிழ்வோடு கொண்டாடுவோம்! பாரதியின் உயர் ஞானக் கருத்துகளை பாரதம் முழுவதும் கொண்டு செல்வோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version