― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சென்னை முதன்மை ரேடியோவ மூடிடாதீங்க... சீனாவின் அபாயம் தொரத்துது! அரசே எச்சரிக்கை!

சென்னை முதன்மை ரேடியோவ மூடிடாதீங்க… சீனாவின் அபாயம் தொரத்துது! அரசே எச்சரிக்கை!

all india radio chennai

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடப் போவதாகவும், இந்த ப்ரைம் பேண்ட் அலைவரிசையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் இனி சென்னை பண்பலை அலைவரிசைக்கு மாற்ற உள்ளதாகவும், சென்னை பண்பலை ரெயின்போ அலைவரிசை நிகழ்ச்சிகளை முற்றிலும் நிறுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இது வானொலி நேயர்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது; நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும் என்று பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்திந்திய வானொலி- கொல்கத்தா வானொலியில் முதன்மை அலைவரிசை ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவுடன் மூடப்பட்டிருக்கிறது. கொல்கத்தா முதன்மை அலைவரிசையில் இதுவரை ஒலிபரப்பப்பட்டுவந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரெயின்போ பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் என்றும், ரெயின்போ பண்பலைவரிசை இனி செயல்படாது என்றும், அதில் மணிக்கு ஒருமுறை ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் இனி ஒலிபரப்பாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் மேற்கு வங்க வானொலி நேயர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதைவிட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவை எந்த நேரமும் நிறுத்தப்படக்கூடும்; அதில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்படும்; பண்பலை நிகழ்ச்சிகள் இனி ஒலிபரப்பாகாது என்பது தான்.

சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.

இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும்தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.

சென்னை வானொலியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை-ஏ, சென்னை-பி, விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிற்றலை ஒலிபரப்பு, ரெயின்போ பண்பலை, கோல்டு பண்பலை ஆகிய 6 அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வந்தன. இவற்றில் சிற்றலை ஒலிபரப்பும், சென்னை-பி அலைவரிசையும் கடந்த இரு ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன. சென்னை-ஏ அலைவரிசை கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளுடன் மூடப்படவிருந்தது. ஆனால், அப்போதே நாம் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது சென்னை ஏ அலைவரிசையை மூட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. அவ்வாறு மூடப்பட்டால் நேயர்களுக்கு தரமான நிகழ்ச்சிகள் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் வேலையிழப்பார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

பிரசார்பாரதியின் செலவுகளைக் குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. பிரசார்பாரதியின் தலைமைப் பொறுப்பில் வானொலி, தொலைக்காட்சி குறித்த அனுபவம் இல்லாத இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்படுவது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். வருவாயை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே எந்த நிறுவனத்தையும் இலாபத்தில் இயக்க முடியுமே தவிர, செலவுகளை குறைப்பதால் அல்ல என்பதை பிரசார்பாரதி நிர்வாகம் உணர வேண்டும். நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சென்னை – ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்… என்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

உண்மையில் சென்னை வானொலி நிலையத்துக்கு என ஒரு பெரிய பாரம்பரியமும் வரலாறும் இருக்கிறது. உலகில் உள்ள பழம்பெரும் வானொலி நிலையங்களில் சென்னை வானொலி நிலையமும் ஒன்று. இது இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. கடந்த 1924-ம் ஆண்டு எழும்பூர் ஹாலோவே கார்டனில், மெடராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் சி. வி. கிருஷ்ணசுவாமி செட்டி 40 வாட ஒலிபரப்பு திறனுள்ள ஒரு கருவி மூலம் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது. பின்னாளில் இது 200 வாட திறனுள்ள ஒரு ஒலிபரப்புக் கருவி மூலம் செயல்படத் தொடங்கியது பிற்காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, இந்த அமைப்பு மூடப்பட்டது. மேலும், அந்த வானொலி ஒலிபரப்புக் கருவியையும் சென்னை மாநகராட்சிக்குக் கொடுத்துவிட்டார்கள்.

1930-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அந்தக் காலங்களில் வானொலி கேட்பதற்கு பொது இடங்களில் ரேடியோ பொருத்தப்பட்டிருக்கும் அதைக் கேடக மக்கள் குடியிருப்பார்கள், கூடியிருப்பார்கள்.

இறுதியில் இந்த சேவையானது 1938ல் அனைத்திந்திய வானொலி நிலையத்தால் ஏற்று நடத்தப் பட்டது. எழும்பூர் மார்ஷல் தெருவில அமைந்திருந்த வானொலி நிலையத்தின் முதல் இயக்குநராக விக்டர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார சென்னை வானொலி சென்னை ஒன்று மற்றும் சென்னை இரண்டு என்ற இரண்டு அலைவரிசையில் இயக்கப்பட்டது. கடைசியாக 1954-ம் ஆண்டு தற்போதுள்ள காமராஜர் சாலைக்கு மாற்றப்பட்டது. அப்படிப் பார்க்கும் போது, தற்போதுள்ள வானொலி அலுவலகத்துக்கு வயது 70.

இப்படிப்பட்ட பழமையும் பெருமையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் சென்னை அகில இந்திய வானொலி, ஆறு அலைவரிசைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சென்னை ரெயின்போ மற்றும் கோல்டு பண்பலை அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்பதற்கென்றே நேயர் வட்டம் தனியாக உள்ளது. அதுபோல் சென்னை ஏ பிரதான அலைவரிசை நிகழ்ச்சிகளை கேட்பதற்கும் சென்னையை விட்டு வெளியில் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவிலான நேயர்கள் உள்ளனர்.

ஏற்கனவே சென்னை பி, சிற்றலை வரிசைகளில் ஒலிபரப்பை நிறுத்திவிட்ட சூழலில் சென்னை பிரதான அலைவரிசையும் கைவைக்கப்படுவது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில் செலவைக் குறைப்பது மற்றும் வருவாயை பெருக்குவது என்பது குறித்து வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறிய போது… வானொலி நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்த வேண்டும் என்று சொல்லும் போது, அங்கு தான் பிரச்னை வருகிறது. ஏனென்றால் இப்பொழுது வானொலி இயங்குவது நிகழ்ச்சிக்காக என்பதை விட அங்கு 400 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிற பொறியாளர்களுக்காகத்தான் என்பதே கசப்பான உண்மை. நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் இருக்க வேண்டிய பணியாளர்களில் வெறும் 20% பேர்தான் தற்போது தயாரிப்புத் துறையில் இருக்கிறார்கள். அதுவும் பணி ஓய்வு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இசைத் துறையிலோ கேட்கவே வேண்டாம். வெகு சொற்பம். முன்பு இருந்ததில் 10 சதவிகிதம் பேர் இப்போது இருந்தாலே அதிகம். இதில் வானொலி அலைவரிசை தொடர்ந்து நடத்தப்பட்டால் பயன் பெறுவது 400 சதவீதத்திற்கும் மேல் அதிகமாக உள்ள பொறியாளர்கள் தான். சொல்லப்போனால் பல நிகழ்ச்சிப் பொறுப்பு இடங்களையும், ஒரு சில நிர்வாக இடங்களையும்கூட அவர்கள் தான் மேற்பார்வை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்ம் இவ்வாறு அதிக அளவில் இருப்பதால்! நிகழ்ச்சித் தயாரிப்பில் கூடுதல் பணியாளர்கள், தயாரிப்பில் கவனம், அதற்கான செலவுகளைக் கொடுத்து, விளம்பர வருவாயைப் பெருக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முன்பு போல் இப்போது நிகழ்ச்சித் தயாரிப்பு அதிகளவில் இல்லை என்றால் காரணம் அதுதான்… என்றார் வருத்தத்துடன்!

சொல்லப்போனால் இப்போது சீன வானொலி மூலமாக தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது எனலாம். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சீன தமிழ் வானொலிக்கு நெடுங்காலமாகவே இங்கே நேயர்களை திரட்டி ஆதரவாளர்களாக மாற்றி வைத்துள்ளார்கள். இது காஷ்மீர் மற்றும் நேபாளம் சீனாவை ஒட்டிய வடக்கு மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது. தமிழகத்தையும் தமிழ் நேயர்களையும் குறி வைத்துதான் இலங்கை வானொலியை தூசு தட்டும் வேலையில் சீனா ஈடுபட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு. இத்தகைய பின்னணியில் தமிழ் ஒளிபரப்பான சென்னை வானொலியின் பிரதான ஒலிபரப்பை, அதாவது 300 கிலோ மீட்டர் எல்லைக்கும் அதிக அளவிலான பரப்பளவில் உள்ள ஒலிபரப்பைக் கைவிடுதல் என்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருத இடம் உள்ளது. இதை மத்திய அரசின் ஒலிபரப்புத் துறை கவனத்தில் வைத்து மேற்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version