- Ads -
Home உரத்த சிந்தனை பாரதியாரும் உலக அரசியலும்!

பாரதியாரும் உலக அரசியலும்!

யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டு எங்கெங்கு கொடுமை ஓங்குகிறதோ அங்கெல்லாம் அக்கொடுமையைச் சாடித் தமது வலிமையான கவிதைக் குரலாலும் உரை நடைக் குரலாலும், பேச்சுக் குரலாலும்

bharathiar

கிருஷ்ணா ராமலிங்கம் —

யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டு எங்கெங்கு கொடுமை ஓங்குகிறதோ அங்கெல்லாம் அக்கொடுமையைச் சாடித் தமது வலிமையான கவிதைக் குரலாலும் உரை நடைக் குரலாலும், பேச்சுக் குரலாலும் கண்டனம் தெரிவித்து அக்கொடுமையை ஒழிக்கப் பாடுபடுகின்றார். இதில் அவர் சோர்வடைந்ததே இல்லை.

இந்த உணர்வின் அடிப்படையிலேதான் பாரத தேசத்தை அடிமைப்படுத்தி வறுமைக்கும், பிணிக்கும் பஞ்சத்திற்கும் உள்ளாக்கிய ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து முழங்கினார்; பெல்ஜிய நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார்; புதிய ருஷியாவில் கலியுகம் விழுந்து கிருதயுகம் எழுக என்று ஆசி கூறினர்.

ஐர்லாந்து, கிரீஸ், பாரசீகம், துருக்கி முதலான நாடுகளுக்கு, பிரிட்டனும், நேசக் கட்சியாரும் இழைத்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறார்.

இங்ஙனம் கண்டிப்பது மறைமுகமாக பாரத மக்களுக்கு ஆங்கிலேயர் செய்து வந்த அக்கிரமங்கள எடுத்துக்காட்டி அவர்களை எதிர்த்துப் போராடி விடுதலை பெறத்தூண்டுவதற்குப் பயன் பட்டாலும் அது ஒன்றே பாரதியாரின் நோக்கமாக இருக்கவில்லை.

பாரதியார் உலக அரசியல் நடைமுறைகளை எவ்வளவு நுட்பமாக அந்தக் காலத்திலே ஆராய்ந்து மக்களுக்குத் தமது இந்தியா வார இதழின் மூலமாக எடுத்து விளக்கினார் என்பதை நாம் காண்கிறோம்.

உலகத்து நாடுகளின் போக்கை ஒட்டியே இந்தியாவின் போக்கும் அமைய வேண்டி வரும் என்கிற உண்மையை
அக்காலத்திலேயே பாரதியார் தமது தொலை நோக்கால் உணர்கின்றார்.

1921ஆம் ஆண்டு செப்டம்பரோடு பாரதியாரின் பேனா ஒய்வு பெற்று விடுகிறது, அதற்குப் பின்னால் 1921 டிசம்பரிலும் 1922 ஆம் ஆண்டு ஜனவரியிலும்தான் சத்யாக்ரஹ இயக்கம் ஆரம்பம்; நேருக்கு நேர் அந்நிய ஆட்சியோடு மோதி சுமார் முப்பதினாயிரம் பேர் சிறை சென்றார்கள்.

பாரதியார் நடத்திய இந்தியா வார இதழ் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்றது. அது 1910 மார்ச்சுத் திங்களோடு நின்று விடுகிறது.

அந்தக் காலத்திலேயும் சரி, சுதேச மித்திரனில் மீண்டும் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போதும் சரி, பின்னால் அந்த நாளிதழிலேயே உதவி ஆசிரியராக இரண்டாம் முறையாக அமர்ந்த போதும் சரி உலக நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு எளிதில் விளங்குமாறு பாரதியார் எழுதுகின்றார்.

பாரசீக தேசத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி இந்தியா வார இதழில் எழுதுவார் (16 மார்ச் 1907); சீனாவிலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி எழுதுவார் (8 செப்டம்பர் 1906); ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் என்று கட்டுரை தீட்டுவார் (8 டிசம்பர் 1906): ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்று தெளிவு படுத்துவார் (10 நவம்பர் 1906); ஐர்லாந்தைப்பற்றிப் பரிவோடு எழுதுவார்; துருக்கியின் நிலையை அதே கட்டுரையில் எடுத்துக் கூறுவார் (15 நவம்பர்1920); கிரேக்க தேசத்தின் ஸ்திதியை விவரிப்பார். (19 நவம்பர் 1920).

இவ்வாறு பாரதியார் எழுதுவதைக் காணும்போது நமக்கே வியப்பாக இருக்கிறதல்லவா?

இன்று நம்மிடையே உலவிவரும் தமிழ் நாளிதழ்களைப் பாருங்கள். அநேகமாக உலக நடைமுறைகளைப் பற்றி ஒன்றுமே இராது. ஏதாவது நில நடுக்கம் அல்லது விமான விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆசிரியர் மாணவி கள்ள உறவு போன்ற செய்திகள் மட்டுமே வரும். அயல் நாடுகள் எவ்வாறு இயங்குகின்றன, அங்கு நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் கலாச்சாரம் போன்ற தகவல்களைக் காண இயலாது.

பாரதியார் அன்று உலக நடைமுறைகளைக் கூர்ந்து நோக்கி எழுதியது அவருடைய மனிதாபிமானம் என்ற பரந்த நோக்கிலே முக்கியமாக எழுந்ததாகும்.

லார்டு கர்ஸன் இந்திய வைஸ்ராயாக 1899 முதல் 1905 வரை இருந்தவர்; வங்காளப் பிரிவினைக்குக் காரணமாயிருந்து அதை அமல் செய்தவர்; பல அநீதிகளைச் செய்தவர்.

இவரைப் பற்றி காரசாரமாகக் கண்டித்து பாரதியார் தமது இந்தியா வார இதழிலே எழுதியிருக்கிறார். இருந்தாலும் இவருடைய மனைவியார் இறந்த காலத்தில் பாரதியார் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கத் தவற வில்லை, “லார்டு கர்ஸனும் அவரது மூன்று குழந்தைகளும் அடையக் கூடிய துக்கத்தை நினைக்கும்போது எவரும் பரிதாபம் அடையக் கூடும்” என்று தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ளார்.

‘’இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது‘’ என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார் (பார்க்க–யூகோள மஹாயுத்தம்).

‘’அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்யஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம்.

இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர, வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூ மண்டல முழுவதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.’

இவ்வாறு ஹிந்து தர்மம் என்ற கட்டுரையிலே 29 நவம்பர் 1917ல் பாரதியார் எழுதுகின்றார்.

அணுகுண்டுப் பூதம்தோன்றி மானிட இனமே அழிந்து போகுமோ என்று அஞ்சுகின்ற இந்நாளில் பாரதியாருடைய எச்சரிக்கை மிகப் பயனுடையதாகும்; ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.

‘’இப்பொழுது மனிதர் ஒருவருக்கொருவர் பயப்படுவது தான் அதிகம்‘’ என்று பாரதியார் 22 செப்டம்பர் 1916-ல் எழுதினார்.

இன்று இந்த பயம் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

‘’உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா?’’ என்று அதே கட்டுரையில் (லோகோபகாரம்) பாரதியார் கேட்கிறார்.

எப்பேர்பட்ட தீர்க்கமான சிந்தனை…. வாழ்க நீர் எம்மான்……

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version