- Ads -
Home நலவாழ்வு இருட்டு நல்லது..!  

இருட்டு நல்லது..!  

 

4.bp.blogspot.com GK
 
உலகளாவிய  மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015-ல்

முதல் பரிசு பெற்ற கட்டுரை

இருட்டு நல்லது..!

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பொருட்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அந்த பட்டியலில் வெகு சமீபமாக சேர்ந்திருப்பது ஒளி; அதாவது வெளிச்சம். 
 
வெளிச்சம் எப்படி சுற்றுச்சூழலை பாதிக்கிறது?

பகலில் தோன்றும் சூரிய ஒளி இயற்கையானது. அதில் அத்தனை பாதிப்பில்லை. மனிதன் இயற்கையை சீண்டியதால் சூரியன் கொஞ்சம் கோபமாக நம்மை தாக்கிக்கொண்டிருக்கிறான். மற்றபடி சூரியன் நல்லவன்தான். 

 
ஆனால் இரவில் அவனுக்கு தெரியாமல் நாம் நம் உலகை பகல் போல் வெளிச்சமாக்கிக் கொள்கிறோமே, அங்குதான் இருக்கிறது ஆபத்து. அந்த ஆபத்தைப் பற்றிய பதிவுதான் இது.

இரவும் அடர்ந்த இருளும்தானே நமக்கு ஆபத்தையும் பயத்தையும் தருகிறது. மாறாக, ஒளி அச்சத்தை போக்குகிறது. துணிவை தருகிறது. இரவில் கூட வேலைப்பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒளி எப்படி ஆபத்தாகும்?

ஆபத்தாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயற்கை நமக்கு 12 மணி நேரம் பிரகாசமான சூரிய ஒளியையும், 12 மணி நேரம் அடர்ந்த இருளையும் கொடுத்திருக்கிறது. இரண்டுக்குமே இரண்டுவிதமான கடமைகள் இருக்கின்றன. நமது உடலும் ஏனைய உயிரினங்களும் 12 மணி நேர ஒளி மாற்றத்துக்கு ஏற்றபடிதான் உருவாக்கப்படிருக்கின்றன. ஆனால், நாம் செயற்கையாக ஒளிரும் விளக்குகளால் இரவின் பொழுதைக் குறைத்துவிட்டோம். இதன் மூலம் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டோம்.

மின் விளக்குகள் கண்டுபிடிக்காத காலத்திற்கு முன் இருந்த இரவு நேர வானத்திற்கும், இப்போது உள்ள இரவு வானத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். வானத்திலும் ஒளி மாசு பிரதிபலிக்கிறது. இதனால் நட்சத்திரத்தையும் கிரகங்களையும் ஆய்வு செய்யும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, இரவில் வேட்டையாடும் விலங்குகளும், பறவைகளும் இந்த செயற்கை வெளிச்சத்தால் குழம்பிப்போகின்றன. கடல் ஆமைகள் கடலில் இருந்து சற்று தொலைவில் அடர்ந்த இருளான இடத்தில்தான் கூட்டை உருவாக்கி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்த ஆமைகள் கலங்கரை விளக்கு ஒளியாலும், கடலுக்கு அருகில் இருக்கும் கட்டடத்தின் விளக்கு ஒளியாலும் பாதிக்கப்பட்டு, இனப்பெருக்கத்தையே குறைத்து வருகின்றன.

பறவைகள் நிலவின் ஒளியை வைத்து அதன் மூலம் தாங்கள் உருவாக்கிக்கொண்ட திசை வழியாக இரவு நேரத்தில்தான் இடம்பெயர்கின்றன. அந்த பறவைகளின் பாதையில் குறுக்கிடும் பெரிய கட்டடங்களின் ஒளியால் கவரப்பட்டு, திசை மாறி அதில் மோதி இறக்கின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பறவைகள் வருடந்தோறும் இப்படி மடிகின்றன.

வீட்டின் வெளிப்புறம் உள்ள மின்விளக்குகள் அதாவது, தெரு விளக்கு, விளம்பர பலகைகளின் விளக்கு ஒளி போன்றவற்றால் கவரப்படும் பூச்சிகள், விடியும் வரை அந்த விளக்கையே சுற்றிச்சுற்றி வருகின்றன. அதனால் உணவும் எடுத்துக் கொள்ளாமல், இனச்சேர்க்கையும் நடைபெறாமல் பூச்சி இனங்கள் வெகுவேகமாக அழிகின்றன. பூச்சிகள் தானே அழிந்தால் அழியட்டும் என்று விட்டுவிட முடியாது. உயிரினங்களின் உணவுச் சங்கிலி சுழற்சி பாதிக்கப்படும்.

 
சரி, பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தானே பாதிப்பு நமக்கு எதுவும் இல்லையே?! என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இது மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தி சொல்கிறார்கள்.

உலகிற்கு எப்படி 12 மணி நேரம் ஒளி, 12 மணி நேரம் இருள் என்று இருக்கிறதோ, அதேபோல் உயிரினங்களின் உடலுக்குள்ளும் ஒரு உயிர் கடிகாரம் இருக்கிறது. அதுதான் நமக்கு தூக்கத்தையும் விழிப்பையும் தெரிவிக்கிறது. 

செயற்கை ஒளியால் முதலில் பாதிப்பது இந்த உயிர் கடிகாரம்தான். நமது உடல் 12 மணி நேரம் வெளிச்சத்திலும், 12 மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருளில் இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. சூரிய ஒளி  உடல் வளர்ச்சி மற்றும் வலிமைக்கான காரணிகளை தூண்டிவிடுகிறது. இதே தூண்டுதல் நாம் உபயோகிக்கும் ஒளியிலும் உண்டு.

1860-ல் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதில் இருந்து 19 வயதாக இருந்தது. இப்போது அது 8 வயதில் இருந்து 15 வயதாக குறைந்திருக்கிறது. இதற்கு உணவு உட்பட பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக சொல்லபடுவது ஒளிதான்.

சூரிய ஒளி பெண்ணின் ஹார்மோனை தூண்டிவிடுகிறது. அதனாலே வெப்ப நாடுகளில் பெண்கள் சிறு வயதிலே வயதுக்கு வந்து விடுவார்கள். சூரிய ஒளி குறைவாக உள்ள குளிர் நாடுகளில் அதாவது ரஷ்யா, அமேரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவற்றில் பெண்கள் தாமதமாக வயதுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று வெப்ப நாடுகள் குளிர் நாடுகள் என்ற எல்லா இடங்களிலும் ஒரேவிதமாக பெண்கள் விரைவாகவே வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

அதற்கு காரணம் இரவிலும் பகல் போல் ஒளிரும் விளக்குகள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வகுப்பறைகள், வீடு, கடைகள் என எங்கும் இரவை பகலாக்கும் பிரகாசமான வெளிச்சம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்றவை வெளியிடும் கதிர்வீச்சுகளும் சூரிய ஒளிக்கு இணையான தாக்கத்தை உண்டாக்குகின்றன.

தொடர்ந்து ஒளியின் தாக்கம் உடல் மீது பட்டுக்கொண்டே இருப்பதால் ஹார்மோன் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதனால் சின்ன வயதிலே வயதுக்கு மீறிய சதைப் பிடிப்போடு பெண்கள் வளர்கிறார்கள். விரைவிலே பருவத்துக்கும் வந்துவிடுகிறார்கள்.

சின்ன வயதில் பெரிய மனுஷியாவதில் என்ன தப்பு? என்று கேட்கலாம். சிறுமிகள் வயதுக்கு வந்ததும் பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகம் சுரக்கத் தொடங்கி விடுகின்றன. இந்த சுரப்புகள் எலும்புகளின் வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன. இதனால் இந்த சிறுமிகள் வளர்ந்து பெரிய பெண்கள் ஆனதும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். 14 வயதுக்கு பின் பருவம் அடைந்த பெண்களைவிட அதற்கு முன்பே பருவம் அடைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 4 மடங்கு அதிகம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

ஒளியின் பாதிப்பு இதோடு முடிந்து விடவில்லை. வெளிச்சம் அற்ற அடர்ந்த இருட்டில் தூங்கும் போது நமது உடலில் மெலடோனின் என்ற  ஹார்மோன் சுரப்பு சுரக்கத் தொடங்குகிறது. இதுதான் நமது ஆரோக்கியத்தின் உயிர்நாடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நன்றாக தூங்கவும், கொழுப்பை நீக்கவும் இது உதவிபுரிகிறது. மேலும் தைராய்டு,  பெண்ணின் கருமுட்டை, ஆணின் விரைகள் நன்றாக செயல்பட இந்த மெலடோனின் மிக முக்கியம்.

ஆனால், தொடர்ந்து இரவிலும் உடல் மீது வெளிச்சம் பட்டுக் கொண்டே இருக்கும்போது இந்த சுரப்பு வெகு வேகமாக குறைந்து போகிறது. மிக குறைவாகவே சுரக்கிறது. இதனால், தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பருமன், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல பாதிப்புகள் உருவாகின்றன.

இப்படி தோன்றும் அத்தனை நோய்களையும் ஒரு பைசா செலவில்லாமல் சரி செய்து விடலாம்; விளக்கை அணைப்பதன் மூலம். கூடவே நமது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு தூங்கப் போகிறவர்கள் தொலைக்காட்சி, கணினிக்கு விடைக் கொடுத்து 10 மணிக்கு முன்பே தூங்கிவிடுங்கள். படுக்கை அறையில் இரவு விளக்கும் அணைக்கப்பட்டு அடர் இருளில் தூங்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். போக போக நல்ல தூக்கம் வரும். சர்க்கரை நோய், மன அழுத்தம் எல்லாம் குறையத் தொடங்கும். இரவை முழுமையாக அனுபவித்தாலே போதும் எல்லா வியாதியும் நம்மை விட்டு ஓடிவிடும்.

ஒளியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை பார்த்தப் பின் மேலைநாடுகளில் இப்போதே ‘பாரம்பரிய இரவை மீட்போம்..!’ என்ற பெயரில் பல இயக்கங்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் அதற்கான அடிச்சுவடு கூட இன்னும் ஏற்படவில்லை.

இதனை ‘ஒளி மாசு’ என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் 30 சதவீதம் விளக்குகள் தேவைக்கு அதிகமாக ஒளிர்கின்றன என்கிறது ‘சர்வதேச இருள்-வான் அமைப்பு’. நியூயார்க் நகரில் மட்டும் வீடுகளுக்கு வெளிப்புறம் எரியும் மின் விளக்குகள்  வருடத்திற்கு 2.1 கோடி டன் கார்பன் டைஆக்சைடை வெளியேற்றுகின்றன. இந்த ஒரு நகரின் மாசை மட்டும் சரி செய்வதற்கே 87.5 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிறது அந்த அமைப்பு.

அதைவிட  சில எளிமையான வழிகள் இருக்கின்றன. தேவையில்லாத இடங்களில் இருக்கும் விளக்குகளை அகற்றுவது, வான் நோக்கிப் பாயும் ஒளியை தடுத்து நிலத்தில் மட்டும் விழும்படி விளக்கைச் சுற்றி கவசமிடுவது, வீடு மற்றும் அலுவலகங்களின் உட்புறத்தில் தேவையில்லாமல் எரியும் விளக்குகளை அணைப்பது போன்றவற்றை செய்தால் 60 முதல் 70 சதவீத ஒளி மாசுபடுதலை தவிர்க்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

எது எப்படியோ இயற்கைதான் மீண்டும் வலியது என்பதையே இது காட்டுகிறது. இதனால் நாமும் தேவையற்ற ஒளிகளை குறைத்து, இருளில் படுத்து பாரம்பரிய இரவை மீட்போம்.

இருட்டு நல்லது..!!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version