- Ads -
Home நலவாழ்வு டீசல் வாகனங்கள் தரும் மரணம்

டீசல் வாகனங்கள் தரும் மரணம்

“நீங்கள் புகைபிடிப்பீர்களா?”

“ஐயோ! அந்த கருமாந்தரத்த நான் கையால் கூட தொட்டதில்ல. யாராவது பிடிச்சா கூட உடனே அந்த இடத்த விட்டு நகர்ந்துடுவேன். நமக்கு ஆரோக்கியம் முக்கியம் பாருங்க..!”
 
இப்படி சொல்பவரா நீங்கள்..! நல்லது..!! ஆரோக்கியத்தை அப்படித்தான் கட்டிக் காக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா?
 
நீங்கள் சிகரெட் பிடிக்காதவராக இருந்தாலும் கூட, நீங்களும் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை புகைத்த பலனைப் பெறுகிறீர்கள் என்று..! அந்த பலன்களை நமக்கு தருவது நமது வாகனங்கள்தான்.
3.bp.blogspot.com 3dXOgWk Cqk VgUPExjl7iI AAAAAAAAGCU 4 hewoMOAEI s640 POLLUTION 2366634f
வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் வாகன புகை பெரும் கேடை ஏற்படுத்துகின்றன. அதற்கு காரணம் வளரும் நாடுகள் சுற்றுச்சூழலில் அக்கரை காட்டாததுதான். வாகன புகை மாசில் மோசமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 
 
இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை விட டீசல் வாகனங்களே அதிகம். சொந்த கார்கள் வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களையே வாங்குகிறார்கள். அதற்கு காரணம் எரிபொருளின் விலை குறைவு என்பதுதான். 
 
சென்னையில் இருக்கும் வாகனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் டன்னுக்கும் அதிகமான மாசை காற்றில் கலந்து விடுகின்றன. இந்த மாசில் என்னென்ன இருக்கின்றன என்று பட்டியல் போட்டுத் தந்திருக்கிறது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம். அதன்படி, அதில் 810 டன் கார்பன்மோனாக்சைடும், 310 டன் ஹைட்ரோ கார்பனும், 160 டன் நைட்ரஜன் ஆக்சைடும், 15 டன் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்களும், 12 டன் கந்தக டை ஆக்சைடும் மேலும் பல நச்சுப் பொருட்களும் இருக்கின்றன.

ஒரு நாளைக்கே இவ்வளவு என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு! ஒரு வருடத்திற்கு எவ்வளவு என்று பாருங்கள்.  சென்னை ஒரு நகருக்கே இத்தனை டன்கள் மாசு என்றால், இந்தியா முழுவதும் எத்தனை நகரங்கள்? எத்தனை லட்சம் வாகனங்கள்? அவைகள் வெளியேற்றும் நச்சுகள் எவ்வளவு? அப்பப்பா..! இப்பவே மூச்சு முட்டுது.!

இந்த மாசுகள் குழந்தைகள், பெரியவர்கள் என்று யாரையும் விட்டுவைப்பதில்லை. டீசல் புகையிலிருந்து மிதந்து வரும் நுண் துகள்கள் சுவாசிக்கும் போது மூச்சுக்காற்று மூலம் நுரையீரலை அடைகிறது. இந்த துகள்கள் 2.5 முதல் 3.5 மைக்ரான் அளவு கொண்ட மிக நுண்ணியது. இவ்வளவு சிறிய துகள்கள் நுரையீரல் சுவரில் அப்படியே படிந்து தங்கி விடுகின்றன. வெளியேறுவதில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேரும் துகள்கள் நாளடைவில் புற்றுநோயை உருவாக்குகின்றன. சிகரெட் புகையும் இதே வேலையைத்தான் செய்கிறது. அதனால்தான் நீங்கள் சிகரெட் புகைக்காதவராக இருந்தாலும் கூட புகைத்த பலனை இந்த டீசல் வாகனங்கள் உங்களுக்கு தருகின்றன.
 
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் டீசல் வாகனங்கள் வெளியேற்றும் புகையில் 90 சதவீத நுண்துகள்கள் ஒரு மைக்ரானுக்கும் குறைவான அளவில் உள்ளன என்று தெரிவித்துள்ளது. இவைகள் எப்போதும் காற்றில் மிதந்தபடியே இருக்கும். நுரையீரல்தான் இவைகள் ஓய்வெடுக்கும் இடம். இது இருமல், தொண்டைக் கமறல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை உருவாக்குகின்றன. 
 
இந்த மிதக்கும் நுண்துகள்கள் உலகம் முழுவதும் வருடத்திற்கு 6,20,000 மரணங்களை ஏற்படுத்துகின்றன. இது உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கும் தகவல். இதுமட்டுமல்ல, இந்த நச்சுப் புகை நமக்கு ஏற்படுத்தும் மற்றொரு பெரும் கோளாறு, ஆஸ்துமா! வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைட் சூரிய ஒளி பட்டதும் ஹைட்ரோ கார்பனுடன் வினைபுரிந்து ஓசோனை வெளியேற்றுகிறது. ஓசோன் எப்போதும் பூமியிலிருந்து மிக உயரத்தில் இருந்தால்தான் நமக்கு நல்லது. நம்முடனே, நமக்கருகில் இருந்தால் அது மகா கெடுதல்.

ஓசோனின் குணம் ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜனை தடுப்பது. ரத்தத்தில் ஆக்சிஜன் குறையும் போது ஆஸ்துமா உருவாகிறது. அதே நேரத்தில் நுரையீரலின் செயல்பாடும் குறைகிறது. இப்படி உருவாகும் ஓசோன் மழைக்காலத்தில் குறைவாகவும் வெயில் காலத்தில் அதிகமாகவும் இருக்கிறது.

இந்த பாதிப்புகள் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம். குழந்தைகளின் உடல் எடையோடு கணக்கிடும் போது குழந்தைகள் பெரியவர்களை விட அதிக அளவில் உணவையும், நீரையும், காற்றையும் ஈர்த்துக் கொள்பவர்கள். குழந்தைகள் பெரியவர்களை விட 2 மடங்கு காற்றை சுவாசிக்கிறார்கள். அதனால் பாதிப்பும் அவர்களுக்கு அதிகம்.

காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் அந்த நகரில் 32,000 பேர் காற்று மாசுப்பாட்டால் இறந்திருக்கிறார்கள் லண்டன் ஆய்வு மையம் ஒன்று இதை தெரிவித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 2.5 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கும் அதேவேளையில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு 3.48 மடங்கும், வாகன மாசு 7.5 மடங்கும் அதிகமாகியுள்ளது.

வாகன புகை இத்தனை பாதிப்புகளை தரும் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து யூரோ 1 என்ற தரக்கட்டுப்பாட்டை கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொண்டு வந்தன. அதன்படி கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன், நுண் துகள்கள் காற்றில் அதிக பட்சமாக எவ்வளவு இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இது ‘பாரத் ஸ்டேஜ்’ என்று அழைக்கப்படுகிறது.

இதற்கேற்ப வாகனங்களின் இன்ஜின்களில் மாற்றம் செய்தால் கார்பன் மோனாக்சைடு வெளியேறுவதை குறைக்கலாம். ஆனால், நைட்ரஜன் ஆக்சைடும், மிதக்கும் நுண் துகள்களையும் குறைப்பது தரமான எரிபொருள் மூலம்தான் முடியும். இந்தியா இரண்டிலுமே மெத்தனமாகத்தான் இருக்கிறது. ‘பாரத் ஸ்டேஜ் 1, 2, 3, 4,..’ என்று வரிசையாக தரக்கட்டுப்பாட்டை அரசு அதிகரித்துக் கொண்டே போனாலும் கார் தயாரிப்பாளர்கள் அதை நடைமுறை படுத்துவதற்கு தயாராக இல்லை.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் எல்லாம் வெளியேறும் மாசு எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு குறைவாக இருக்கிறது. ஆனால், உள்நாட்டில் விற்கப்படும் கார்கள் அந்த தரத்தில் தயாரிக்கப்படுவதில்லை. கேட்டால் தரக்கட்டுப்பாடுபடி வாகனத்தை தயாரித்தால் ஒரு காரின் விலை ரூ.25,000 லிருந்து 45,000 வரை கூடுமாம். வர்த்தக போட்டியில் அது சாத்தியம் இல்லையாம்.

இந்தியர்கள் உயிர்தானே போனால் போகட்டும் என்று அரசும், வாகன தயாரிப்பாளர்களும், எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அலட்சியமாக இருக்கின்றன. அவர்களுக்கு மேலைநாட்டினர் உயிர்தான் சக்கரைக்கட்டி.

மக்களை மதிக்காத அரசும், அரசியல்வாதிகளும், பணம் பண்ணும் முதலாளிகளும் இந்தியாவுக்கு கிடைத்த சாபக்கேடுதான். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். நமக்கும் இந்த  சமூகத்தின் மீது பொறுப்பிருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும்.?

கூடுமான வரை சொந்த வாகனங்களை உபயோகிக்காமல் பொது வாகனங்களை பயணத்திற்கு உபயோகிப்போம். ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் எந்த இடத்திற்கும் நடந்தே செல்வோம். டூ வீலர், கார் வேண்டாம். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

 
புதிதாக கார் வாங்கும் போது ‘பாரத் ஸ்டேஜ் 4’-க்குப் பின் வந்த கார்களை வாங்குவோம். 50,000 ரூபாய் விலை குறைகிறது என்பதற்காக சுற்றுச்சூழலை மாசு படுத்தும் கார்களை வாங்குவதை தவிர்ப்போம். 15 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கும் பழைய வாகனங்களை விற்றுவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கிக்கொள்வோம். பழைய வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றும். ஒருவர் அல்லது இருவர் செல்வதற்கு கார்களை பயன்படுத்தாமல், அதற்கு டூ வீலரோ, பொது வாகனமோ பயன்படுத்திக் கொள்வோம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு ‘என்னிடம் பணம் இருக்கிறது, நான் சொகுசாக போவதற்குத்தான் காரை வாங்கி வைத்திருக்கிறேன்’ என்று கூறி நம்மால் ஆனா ஒரு சிறு மாற்றத்தை கூட இந்த சமூகத்திற்காக.. சுற்றுச்சூழலுக்காக.. செய்ய முடியவில்லை என்றால், நாம் அரசையோ அரசியல்வாதிகளையோ குறை சொல்ல அருகதை அற்றவர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version