- Ads -
Home நலவாழ்வு ஆடி வெள்ளி; ஆடி செவ்வாய்; பண்டிகை ரெசிப்பி-பத்து!

ஆடி வெள்ளி; ஆடி செவ்வாய்; பண்டிகை ரெசிப்பி-பத்து!

samayal cooking

1. ஆடிப்பால்

தேவையானவை: தேங்காய் – ஒன்று, துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சரிசி (அ) வறுத்த பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப்பருப்பு (அ) பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். அந்தச் சக்கையைச் சிறிதளவு நீர்விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யவும். மொத்தம் மூன்று முறை எடுத்த பாலையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்துவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர்விட்டு (சிறிதளவுவிட்டால் போதும்) அடுப்பில் ஏற்றிக் கரையவிடவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி ஏலக்காய்த்தூள் சேர்த்து நுரைத்துவரும்போதே இறக்கிவிடவும்.

குறிப்பு: புதிதாகத் திருமணமான மணப்பெண் – மாப்பிள்ளையை ஆடிக்கு அழைத்து, ஆடி மாதம் முதல் தேதியன்று இந்த ஆடிப்பாலைக் கொடுப்பது வழக்கம்.

2. மாவிளக்கு

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 6 டேபிள்ஸ்பூன்,

செய்முறை: பச்சரிசியை நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போடவும். பிறகு, வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதை பாத்திரத்தில் உள்ள மாவில் சேர்க்கவும். 4 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும். மூன்றையும் நன்றாகக் கலந்து உருண்டையாக உருட்டி, நடுவில் குழி செய்து நெய்விட்டு திரி போட்டு மாவிளக்காக ஏற்றவும்.

குறிப்பு: ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். குலதெய்வத்தை வழிபடும்போதும், ஆடி மாதம் கோயில்களிலும் இந்த மாவிளக்கை ஏற்றுவர்.

3. ஆடிக்கூழ்

தேவையானவை: அரிசி நொய் – ஒரு கைப்பிடி அளவு, கேழ்வரகு மாவு – 2 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் – 10, தயிர் – ஒரு கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு கைப்பிடி அளவு நொய்யை ஒரு டம்ளர் நீர்விட்டு வேகவிட்டு, கேழ்வரகு மாவை 2 டம்ளர் நீர்விட்டு கரைத்து அதில் சேர்த்து வேகவிடவும். பிறகு உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரைக் கடைந்து அதில் சேர்க்கவும்.

குறிப்பு: சின்ன வெங்காயம் தொட்டு இதைச் சாப்பிடலாம். ஆடி மாதம் அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது வழக்கம்.

4. துள்ளு மா

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்துக் கலக்கவும். கைகளால் பிடித்தால் துள்ளி எழும்பும். அதனால்தான் இதன் பெயர் துள்ளுமா.

குறிப்பு: இதை காளியம்மன், மாரியம்மன் போன்ற பெண் தெய் வங்களுக்குப் படைத்து கோயிலில் பிரசாதமாக வழங்கலாம். ஆடி மாதம் கூழ் ஊற்றும்போது இதையும் செய்து வீட்டில் படைப்பர்.

5. முருங்கைக்கீரைப் பொரியல்

தேவையானவை: சுத்தம் செய்த முருங்கைக்கீரை – 2 கப், உதிர் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, முருங்கைக்கீரை போட்டு வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மூடிவைக்கவும். கீரை வெந்ததும் பாசிப்பருப்பைச் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: ஆடிக்கூழுடன் இந்த முருங்கைக்கீரைப் பொரியலையும் சேர்த்து அனைவருக் கும் கொடுத்து, வழங்குபவர்களும் உண்டு மகிழ்வர்.

6. அரிசி – பருப்பு பாயசம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு, துருவிய தேங்காய் – தலா கால் கப், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 4 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் அரிசி, பருப்புகளை வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். உடைத்தவற்றை குக்கரில் சேர்த்து 3 கப் நீர்விட்டு வேகவைக்கவும். துருவிய வெல்லத்தை வெந்தவற்றுடன் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு, தேங்காய்த் துருவலை வறுத்து இதனுடன் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும். மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

குறிப்பு: ஆடிக்கிருத்திகை அன்று முருகப் பெருமானுக்கு இந்தப் பாயசத்தை செய்து படைப்பர்.

7. அக்கார அடிசில்

தேவையானவை: பச்சரிசி – 250 கிராம், பால் – 600 மில்லி, வெல்லம் – 400 கிராம், நெய் – 100 கிராம், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 10 கிராம்.

செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் நெய்யை எடுத்துத் தனியே வைக்கவும். அரிசியைக் களைந்து பால் சேர்த்து குக்கரில் குறைந்த தீயில் நன்கு வேகவிடவும். வெல்லத்தைச் சிறிதளவு நீர்விட்டு கம்பிப்பதத்துக்கு பாகு வைக்கவும். அந்தப் பாகில் வெந்த கலவையைப் போட்டு நன்றாகக் கிளறி, இடையிடையே நெய் விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு ஸ்பூன் நீரில் குங்குமப்பூவைக் கரைத்துச் சேர்க்கவும். தனியாக எடுத்துவைத்த நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

குறிப்பு: ஆடி அமாவாசை அன்று இதைச் செய்து முன்னோர்களுக்குப் படைப்பது வழக்கம்.

8. முப்பருப்பு வடை

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: மூன்று பருப்புகளையும் நன்றாகக் கழுவி நீர்விட்டு, மிளகாயையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடிகட்டி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருட்டி வடைகளாகத் தட்டிப்போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுத்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெயை வடியவிடவும்.

குறிப்பு: ஆடி அமாவாசை அன்று இந்த முப்பருப்பு வடையையும் சேர்த்து முன்னோர்களுக்குப் படைப்பார்கள்.

9. வாழைக்காய் கறியமுது

தேவையானவை: பெரிய வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறிதளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி சிறிய கனமான துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அளவாக நீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போட்டு வாழைக்காயை அதில் போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த வாழைக்காய் சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: ஆடி அமாவாசையன்று வாழைக்காய் கறியமுது செய்வது வழக்கம்.

10. எள்ளுச்சிமிழி

தேவையானவை: எள் – அரை கப், துருவிய வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: எள்ளைத் தண்ணீரில் போட்டு அலசி கல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெல்லத்தூளைக் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். எள்ளை வறுக்காமல்தான் இதை செய்ய வேண்டும்.

குறிப்பு: நாகபஞ்சமியன்று பெண்கள் எள்ளுச்சிமிழி செய்வதுடன் நாகப்புற்றுக்குச் சென்று பால் தெளித்து வழிபட்டால் நல்லது நடக்கும்; தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version