- Ads -
Home இந்தியா கரோனா: ஸ்ரீரங்கம் கோவிலில் பரிசோதனைக்கு பின் அனுமதி!

கரோனா: ஸ்ரீரங்கம் கோவிலில் பரிசோதனைக்கு பின் அனுமதி!

srirangam

கோவிட்- 19 வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அல்ட்ரா டிஜிட்டல் தெர்மாமீட்டர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்

இந்தியாவிலும் கோவிட்- 19 வைரஸ் பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட்- 19 வைரஸ் பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளோர் அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இருமல், தொடுதல் ஆகியவற்றால் இந்த நோய்பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் அன்றாடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயிலுக்கு கோவிட்- 19 வைரஸ் பாதிப்புள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதை கண்டறியும் வகையில் கோயில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை சார்பில் அல்ட்ரா டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்பணியை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, அரசு மருத்துவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கோவிட்- 19 வைரஸ் பாதிப்புடன் யாரேனும் வருகிறார்களா எனக் கண்டறிய இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காய்ச்சல், இருமல், தொண்டையில் வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை தொடர் சோதனைக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகவே அல்ட்ரா டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி மூலம் கோயிலுக்கு வருவோர் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதேபோல் கோவிட் -19 வைரஸ் அச்சம் காரணமாக வெளியூர் பக்தர்களின் வருகை குறைந்ததால் வேளாங்கண்ணியில் கடைவீதிகள் வெறிச்சோடின.

சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, நாகை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வரும் வெளியூர் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருகிறது.

குறிப்பாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு வரும் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக குறைந்துள்ளது. இதனால், வேளாங்கண்ணி கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பேருந்து மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வழக்கத்தைவிட பொதுமக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் வெகுவாகக் குறைந்ததால் மெழுகுவர்த்தி, பூ மாலை மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனையும் குறைந்துவிட்டது. இதனால், வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தவக்காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட வேளாங்கண்ணிக்கு அதிக அளவு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்த வியாபாரிகள் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலால் பயணிகள் வருகை குறைந்ததை அடுத்து பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

வழக்கமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும் கடற்கரையும் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வேளாங்கண்ணியில் சுகாதாரத்தைப் பராமரிக்கவும், பக்தர்களின் சுகாதாரத்தைக் காக்கவும் பேராலய நிர்வாகம், மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து நேற்று முன்தினம் கோவிட்-19 வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version