― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாவெற்றிகரமாக நிறைவடைந்த ஜி-20 மாநாடு: பாரதத்துக்கு உலகத் தலைவர்கள் புகழாரம்!

வெற்றிகரமாக நிறைவடைந்த ஜி-20 மாநாடு: பாரதத்துக்கு உலகத் தலைவர்கள் புகழாரம்!

modi in g20
#image_title

ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடந்து இன்று நிறைவு அடைந்தது. செப்.09, 10 இரு நாட்கள் தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு, தீர்மானங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது பிரதமர் மோடி தலைமையிலான பாரத அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இங்கிலாந்து புறப்பட்டார் ரிஷி சுனக்

தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. பாரதம் தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் பாரதத்திற்கு  வருகை தந்தார். முன்னதாக தில்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்தார்.

தொடர்ந்து ஜி-20 மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று மாநாடு நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் ரிஷி சுனக் தனது மனைவியுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டின் போது பருவநிலை மாற்றம் தொடர்பான ‘பசுமை பருவநிலை நிதி’ அமைப்பிற்கு இங்கிலாந்து அரசு சார்பில் 20 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்’ – பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ

தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது. பாரதம் தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

பாரத திடமிருந்து ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பெற்றுக்கொண்டார். முன்னதாக தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இது குறித்து பேசிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, “மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம். நான் தொழிலாளர் இயக்கத்தில் இருந்தபோது பல ஆண்டுகளாக நான் பின்பற்றிய அகிம்சை போராட்டத்திற்கு முன்மாதிரியாக விளங்கியவரும், எனது அரசியல் வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்தவரும் மகாத்மா காந்தி தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஞ்சலி செலுத்த கிடைத்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஜி-20 உச்சி மாநாடு; பாரதத்தின் பாரம்பரிய இசை கச்சேரியை ரசித்த விருந்தினர்கள்

ஜி-20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, நாட்டின் பாரம்பரிய இசையை கொண்டு கச்சேரி நடத்தப்பட்டது.

இதில், 78 கலைஞர்கள் பங்கேற்று, இந்துஸ்தானி, கர்நாடக மற்றும் நாட்டுப்புற பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரிய வகை இசை கருவிகளை கொண்டு, நம்முடைய ஈடு இணையற்ற மற்றும் தனித்துவ இசை பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டது.

அந்த இசை கருவிகளில், சுர்சிங்கர், மோகன வீணா, ஜலதரங்கம், ஜோதிய பாவா, தங்காலி, தில்ருபா, சாரங்கி, கமைசா, மட்ட கோகில வீணா, நளதரங்கம், துங்புக், பகாவஜ், ரபாப், ராவண்ஹத்த, தல் டாணா, ருத்ர வீணா உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகள் இசைக்கப்பட்டன.

இவற்றில் காந்தர்வ அதோத்யம் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. இதில், நாடு முழுவதும் உள்ள இசை கருவிகள் கொண்டு இந்துஸ்தானி, கர்நாடகம், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சமகால இசை ஆகியவற்றை பாரம்பரிய கருவிகளை உபயோகித்து நடத்தி காண்பித்தனர்.

பாரதத்தின் பாரம்பரிய இசையை வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், அனைத்து மாநில முதல்-மந்திரிகள், மாநில மற்றும் மத்திய மந்திரிகள், மத்திய அரசிலுள்ள அனைத்து செயலாளர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.

நட்புறவுக்கான மையம்: மோடிக்கு ஜோ பைடன் நன்றி

தில்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அவர் மாநாட்டில் பேசும்போது, உண்மையில் இது ஒரு பெரிய விசயம். பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம். மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசி கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட என்று கூறினார்.

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தில்லியில் ஜி-20 உச்சி மாநாட்டை முடித்து கொண்ட பைடன் பின்னர், வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார்.

கிறிஸ்தவ பாதிரியாருக்கு நாணயம் பரிசளித்த அமெரிக்க அதிபர் பைடன்

தில்லியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு (ஆர்ச்டயோசீஸ்) ஒன்றின் பாதிரியாராக நிகோலஸ் டயஸ் உள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து, இறைவணக்கத்தில் ஈடுபட்டார். அதிபர் பைடன் புறப்பட்டு செல்லும் முன், கிறிஸ்தவ பாதிரியார் டயசுக்கு நாணயம் ஒன்றை பரிசளித்து உள்ளார்.

இதுபற்றி பாதிரியார் டயஸ் கூறும்போது, அதிபருடன் சேர்ந்து ஜெபம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்டது, எனக்கு ஒரு சிறந்த தருணம். அவருக்காக வேண்டி கொண்டேன். நம்முடைய நாட்டுக்காகவும் கூட வேண்டி கொண்டேன். என்னுடைய அனுபவத்தில், அவர் சமய பற்று கொண்ட கத்தோலிக்கர். போப் பிரான்சிஸ் மற்றும் அவருடைய போதனைகளை தீவிரத்துடன் பின்பற்ற கூடியவர். அவற்றை எப்படி தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பதவியில் அமல்படுத்தலாம் என முயற்சித்து பார்க்க கூடியவர்.

அவருடைய நம்பிக்கையானது எனக்கும், என்னுடைய நம்பிக்கைக்கும் ஓர் அனுபவம். அவர் மிக பணிவானவராக வந்து சென்றார். எனக்கு அவர் நன்றிக்குரியவர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே கொடுக்க கூடிய நினைவு பரிசை அவர் எனக்கு கொடுத்து சென்றார். அதனை நான் நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அந்த நாணயத்தில் 261 என்ற எண் உள்ளது. இதற்கு முன்பு 260 பேருக்கு மட்டுமே இந்த கவுரவம் கிடைத்து உள்ளது என்பது எனக்கு தெரியும் என்றும் பாதிரியார் டயஸ் கூறியுள்ளார்.

ஜி20 கூட்டுப்பிரகடனம் ‘பாரதத்தின் பெருமைக்குரிய தருணம்’ – சசிதரூர் புகழாரம்

தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. பாரதம் தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. கூட்டுப் பிரகடனத்தை ஜி20 கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் – ரஷியா போர் குறித்தும் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளை, போர் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவுக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. ரஷியா – உக்ரைன் போர் குறித்து மிகவும் மென்மையான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.

கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவின் பெயர் இடம் பெறவில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 நாடுகள் ஒன்றாக கூட்டுப்பிரகடனம் வெளியிட்டு, அதில் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்காதது இதுவே முதல் முறையாகும். இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளை ஒரே கருத்தின் கீழ் கொண்டுவர பாரதம் எடுத்த முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜி20 கூட்டமைப்பிற்கான பாரதத்தின் பிரதிநிதி அமிதாப் காந்த் தலைமையிலான பாரத தூதரக குழுவின் தீவிர முயற்சியால் ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் சாத்தியமாகியுள்ளது.

மிகவும் சிக்கலான புவிசார் அரசியல் விவகாரத்தில் (உக்ரைன் – ரஷியா போர் விவகாரத்தில்) ஜி20 மாநாட்டில் கூட்டுப்பிரகடனத்தை வெளியிட இடைவிடாது 200 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று, 300 இரு தரப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டு இறுதியில் கூட்டுப்பிரகடனம் முடிவு எட்டப்பட்டது. ரஷியா, சீனாவுடனான நேற்று இரவு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதி பிரகடனம் தயாராகிவிட்டது’ என ஜி20 கூட்டமைப்பிற்கான பாரத பிரதிநிதி அமிதாப் காந்த் கூறினார்.

இந்நிலையில், ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் பாரதத்தின் பெருமைக்குரிய தருணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அமிதாப் காந்தை டேக் செய்த சசிதரூர், மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள் அமிதாப் காந்த். நீங்கள் பாரத நிர்வாக சேவை (ஐஏஎஸ்) துறையை தேர்வு செய்தபோது ஒரு உயர் ராஜதந்திரியை பாரத வெளியுறவு சேவை இழந்துவிட்டதாக நினைத்தேன். ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் குறித்து ரஷியா, சீனாவுடனான நேற்று இரவு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதி பிரகடனம் தயாராகிவிட்டது என அமிதாப் காந்த் கூறியிருந்தார். ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் பாரதத்தின் பெருமைக்குரிய தருணம்’ என பதிவிட்டுள்ளார்.

ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்து இடம்பெற்ற கருத்துக்கள் பின்வருமாறு:-

உக்ரைன் போரை பொறுத்தவரை, இந்தோனேசிய தலைநகர் பாலியில் (கடந்த ஆண்டு நடந்த ஜி20 மாநாடு) நடந்த விவாதத்தை நினைவுகூருகிறோம். அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட நமது தேசிய நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அனைத்து நாடுகளும் ஐ.நா.வின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமித்தலை ஏற்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சகாப்தம் போருக்கானது அல்ல’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாரதத்தின் ஜி-20 தலைமைத்துவ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்:  நடிகர் ஷாருக் கான்

நடப்பு ஆண்டின் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான தலைமையை பாரதம் ஏற்று நடத்தியது. இதன்படி, தில்லியின் பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறியது. வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பின்னர், வந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது.

2-வது நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் பிரேசிலிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் சிறப்புகளை உலக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், சிறந்த பூமிக்காக ஜி-20 உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் நடைபெற்றன என பிரதமர் மோடி, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இதனை டேக் செய்து, நடிகர் ஷாருக் கான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாரதத்தின் ஜி-20 தலைமைத்துவம் வெற்றியடைந்ததற்காக மற்றும் உலக மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, நாடுகள் இடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு, பாரதீயரின் மனதிலும் கவுரவம் மற்றும் பெருமைக்கான உணர்வை அது கொண்டு வந்துள்ளது. உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், நாங்கள் தனித்து வளம்பெறுவது மட்டுமின்றி ஒன்றாகவும் இருப்போம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்.. என ஷாருக் கான் பதிவிட்டு உள்ளார்.

அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை ஏற்கிறது பிரேசில். பிரேசில் அதிபரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி. இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு பிரேசில் வசமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version