- Ads -
Home இந்தியா கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!

கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!

narayanasamy kiranbedi


புதுச்சேரியில் இரு துருவங்களாகத் திகழும் ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இருவரும் ஓர் இலக்கிய விழாவில் சந்தித்ததால் பரபரப்பு நிலவியது. ஒரே மேடையில் வேறு நின்றதால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

திடீரென ஆளுநர் கிரண்பேடி கேட்டுக் கொண்டதற்கிணங்க, கிரண்பேடியின் உரையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார் முதல்வர் நாராயணசாமி.
#KiranBedi #Narayanasamy #Puducherry #KiranBediVsNarayanasamy


புதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.

புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 53வது கம்பன் விழா இன்று தொடங்கியது. விழாவை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார். இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இலங்கை அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன், ஐதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி. ராமசுப்ரமணியன் உட்பட, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கம்ப ராமாயணப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மற்றும் ஆளுநர் சார்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தான் பேசும்போது, தனது ஆங்கில உரையை மொழிபெயர்க்க, முதலில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை அழைத்தார். அவரோ, தன்னால் இயன்றவரை மொழிபெயர்த்துக் கூறுவதாக சற்று தயங்கித் தயங்கிச் சொன்னதும், கிரண் பேடி சற்றும் தயங்காமல், முதலமைச்சர் நாராயணசாமியிடம் தனது பேச்சை தமிழாக்கிச் சொல்லுமாறு கூறி அழைத்தார்.

இதனை அங்கே கூடியிருந்தவர்கள் வெகு ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். காரணம், புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் ஏழாம் பொருத்தம்தான்! பல விஷயங்களிலும் ஏறுக்கு மாறாக ஏட்டிக்குப் போட்டியாக பேச்சிலும் நடத்தையிலும் உர் என்று இருக்கும் நிலையில், திடீரென பகை மறந்து கிரண்பேடி அழைத்தபோது ஆச்சரியம் வராமல் எப்படி இருக்கும்?

நிகழ்ச்சியில் கூடியிருந்தோர் பலமாக கைதட்டத் தொடங்கினர். இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரின் உரையை மொழிபெயர்த்துச் சொன்னார். அப்போது பேசிய ஆளுநர், அடுத்த 10 நிமிடத்துக்கு உங்களுடன் நட்பு முறையில் இருக்க விரும்புகிறேன் என்றார். பதிலுக்கு நாராயணசாமியும், ’நானும் அந்த நிமிடம் வரை மட்டுமே நட்புடன் இருக்க விரும்புகிறேன்’ என்றார். இருப்பினும் சமாளித்த கிரண்பேடி, ’ஆனால் இந்த நட்பு முறை, காலம் முழுவதும் தொடரட்டும்’ என கூறிக் கொண்டு பேச்சைத் தொடங்கினார். அவரது பேச்சை நாராயண சாமி மொழிபெயர்த்தார். இப்படி, தனது பேச்சை முதல் முதலாக மொழிபெயர்த்துச் சொன்ன நாராயணசாமிக்கு கிரண்பேடி மேடையிலேயே நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இலக்கியம் பகையை மறக்க வைத்தது என்று இந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து அங்கே கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் பேச்சை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் விழா அரங்கில் இருந்து வெளியேறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version