- Ads -
Home லைஃப் ஸ்டைல் வரலாற்றில் இன்று: திருநெல்வேலி எழுச்சி தினம் 1908!

வரலாற்றில் இன்று: திருநெல்வேலி எழுச்சி தினம் 1908!

nellai thaippoosa mandapam

தெக்கத்தி சீமை என்ற பெருமை நெல்லைக்கு உண்டு. வரலாற்று அடிப்படையில் திருநெல்வேலி பெருமை பெற்ற ஊராக இருந்தாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நெல்லைச் சீமையின் பங்கு அளப்பரியது.

நெல்லையை மையமாகக் கொண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள் வரலாற்று பக்கங்களில் இடம்பெற்று, இன்றுவரை பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இதில், நெல்லையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது மார்ச் 13ம் தேதி கடை பிடிக்கப்படும் நெல்லையின் எழுச்சி நாளாகும்.

1908 பிப்ரவரி 23ம் நாள் கோரல் பஞ்சாலை தொழிலாளர்களிடையே வ உ சி யும் சுப்பிரமணிய சிவாவும் ஊதிய பிரச்சினையில் எழுச்சி ஊட்டினர், பின்னர் பிப்ரவரி 26ல் சிவா மீண்டும் பேசினார். அதற்கு அடுத்த நாளில் வேலை நிறுத்தம் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 29ல் நீதிமன்ற தலைவரும் வ உ சி யும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

பேச்சு வார்த்தைக்கு முடிவு கட்ட தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் வ உ சியை மார்ச் 3ல் மிரட்ட, வழக்குரைஞர் டி. ஆர். மகாதேவ ஐயர் துணையுடன் முறியடிக்கிறார்.

ஆஷை தொடர்ந்து திருநெல்வேலி கலெக்டர் விஞ்சும் மிரட்ட போராட்டம் திவிரமடைகிறது.

சலவை செய்வோர், குதிரை வண்டி ஓட்டுனர், பணியாளர் என யாவரும் ஆங்கிலேயருக்கு பணியில் ஈடுபடவில்லை. இதன் விளைவாக மார்ச் 6ல் உடன்பாடு எட்டப்பட்டு சம்பள உயர்வும், ஞாயிறு விடுமுறையும் வழங்கப்படுகிறது.

நகராட்சி தொழிலாளர்கள், ரயில் பாதை பணியாளர் உட்பட பலர் பயணடைகின்றனர். மார்ச் 7ல் பணிக்குத் திரும்புகின்றனர். இதில் ஒன்றும் செய்ய முடியாமல் தினறிய ஆங்கிலேய நிர்வாகம் வ உ சி யையும் சிவா வையும் பழி தீர்க்க சமயம் தேடியது.

அந்த சந்தர்ப்பம், அடுத்த இரண்டே நாட்களில் அமைந்தது.

வங்கத்தில் – வந்தேமாதர நாளிதழில் வெளியான கட்டுரை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் நெல்லையிலும், தூத்துக்குடியிலும் வ.உ.சிதம்பரனார் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டத்துக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. விபின் சந்திர பால் வெள்ளையனை விரட்ட பொருளாதார அடிப்படையிலான போராட்டமே சிறந்தது என்ற கருத்து உடையவர்.

1908ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, வ உ சி, சிவா, பத்மநாபன் மூவரையும் கைது செய்ய சம்மன் அனுப்பப்பட்டது.

விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908ம்ஆண்டு மார்ச் 8ம் தேதியை சுயராஜ்ய நாளாக சுதந்திரப்போராட்ட வீரர்கள் கொண்டாடினர்.

தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவைக் கொண்டாடி விட்டு நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர், நெல்லையில், விபின் சந்திர பாலின் படத்தை யானை மீது வைத்து ஊர்வலமாக நெல்லை தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டபத்துக்கு வந்தனர். 13 ஆயிரம் மக்கள் திரண்ட கூட்டத்தில் வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் எழுச்சியுரை ஆற்றினர்.

தடையை மீறி பேசியதற்காக வ.உ.சி, சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய 3 பேரையும் மார்ச் 12ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது.

ஆறு மாதம் பம்பாய் சென்றால் கைதை தவிர்க்கலாம் என்ற கலெக்டர் விஞ்ச் ஆசை வார்த்தையையும் உதறி தள்ளினர். இவர்கள் இந்திய குற்றவியல் சட்டம் 124 ஏ & 153 ஏ பிரிவின்படி கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் 13ம் தேதி நெல்லையில் கலவரம் வெடித்தது.

ஜாமீன் தொகை 107, 108 பிரிவின்படி கேட்கப்பட்டது. வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் மனு நிராகரிக்கப்பட்டது.

நெல்லை இந்துக் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்தனர்.
நெல்லை நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம், போலீஸ் நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது.

திருநெல்வேலி நகரில் ரோந்து சென்ற கலெக்டர் விஞ்ச் தேசிய பண்டகசாலையில் தோரணம் கட்டியிருப்பதை தொழிலாளியிடம் விசாரனை நடத்த அவன் பிபின் விடுதலைக்கு என்று பதிலளிக்க மறுகணம் சாட்டையால் தொழிலாளியை அடித்தான். மறுவிநாடி கற்கள் விஞ்சை பதம் பார்த்தன.விஞ்ச் தலைதெறிக்க ஓடினான்.

தூத்துக்குடியில் உதவி கலெக்டர் ஆஷ் தனது கைத்துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சுட்டு மிரட்டினான்.

1908 மார்ச் 13ம்தேதி காலை “நெல்லை பாலம்’ என அழைக்கப்பட்ட வீரராகவபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம், போக்குவரத்து தடைப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக்கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர்களை அழைத்துக்கொண்டு தெருக்களில் ஓடினர். கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி முதல்வர் உட்பட இருவர் தாக்கப்பட்டனர்.

சி.எம்.எஸ்., கல்லூரிக்குள் புகுந்த கும்பல் உதவிப்பேராசிரியரை தாக்கியது. கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச்சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போஸ்ட் ஆபீஸ் தீக்கிரையானது. நகராட்சி மண்ணெண்ணைய் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது.

முன்சீப் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உட்பட 4 பேர் இறந்தனர்.

தச்சநல்லூர் வரை இந்தக் கலவரம்பரவியது. தச்சநல்லூரில் தெருவிளக்குகள், குப்பை, கழிப்பிட வண்டிகளை மக்கள் தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிஷாரை மக்கள் கல் வீசி தாக்கினர். வேலை நிறுத்தம் நடந்தது. இதில் குதிரை வண்டிகாரர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்காக அப்போது இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தம் இதுவாகும்.

இந்த விஷயம் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த நிகழ்வு திருநெல்வேலி கலகம் என்று பிரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டது.

கலெக்டர் விஞ்சின் ஜாமீன் மறுப்பை எதிர்த்து முவரும் தொடர்ந்த மனுவை மார்ச் 16ல் நீதிபதி பின்ஹே தள்ளுபடி செய்து உத்திரவிட்டான்.

ஆயினும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடக் கூறியது. நெல்லை வணிகர் பலர் வ உ சி க்கு ஜாமீன் அளிக்க முன்வந்தும் சிவாவும் பத்மநாப ஐயரும் வெளிவராமல் நான் வரமாட்டேன் என்று கூறினார்.

இதை புகழ்ந்து அரவிந்தர் தமது வந்தே மாதர இதழில் வெகுவாக எழுதினார்.

மார்ச் 20ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலெக்டர் விஞ்சுக்கு மார்ச் 23ல் கிடைக்க, அவனுக்கு வெறுப்பு குறையாமல் வ உ சி, சிவா இருவரையும் அரச நிந்தனை பிரயோகிக்க ஜாமீன் வழக்கு மார்ச் 31ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரும் பாளை சிறையில் அடைக்கப்பட, பத்மநாப ஐயங்கார் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

மார்ச் 13ம் தேதி திருநெல்வேலி கலகத்தின் அடிப்படையில் தான் வஉசி, சிவா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நூற்றுக்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஸ்ரீநிவாச்சாரி, சடகோபாச்சாரி, நரசிம்மாச்சாரி உட்பட பல வக்கில்கள் வஉசி, சிவாவுக்கு ஆதரவாக வாதாடினர். நீதிபதி பின்ஹே வஉசிக்கு 40 ஆண்டுகளும், சிவாவிற்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தீர்ப்பைக் கேட்ட வஉசி சகோதரர், ”எனது தம்பிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையா?” என்று கோர்ட் வளாகத்திலேயே அழுது புலம்பினார். இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருந்த நேரத்தில், நாட்டின் தென்கோடியில் நடந்த இந்த எழுச்சி, சுதந்திரப் போராட்டத்திற்கு முழு உத்வேகம் அளித்தது.

“திருநெல்வேலி எழுச்சி’ குறித்து பிரிட்டன் பார்லிமென்டில் விவாதம் நடந்தது. சென்னை சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. நகராட்சிக் கட்டடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம், எழுச்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட்சேதங்களுக்கு மக்களிடம் தண்டத் தீர்வை வசூலிக்கப்பட்டது.

இந்த எழுச்சியின் விளைவாகத்தான்…. வ.உ.சி., சிவாவுக்கு நடந்த அக்கிரமங்களுக்கு வடிகாலாகத்தான்… அடுத்த மூன்று வருடங்களில் திருநெல்வேலி மீண்டும் முக்கிய இடம்பிடித்தது. 1911 ஜூன் 17 அன்று, திருநெல்வேலி கலெக்டரை தீர்த்துக் கட்டுவது என்று முடிவானது. அப்போது கலெக்டர் விஞ்ச் மாற்றலாகிச் சென்றுவிட்டதால், எஞ்சிய சப் கலெக்டர் ஆஷ் – ஓர் அடையாளமாக மாறிப் போனான். மணியாச்சி நிலையத்தில் கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்று பழி தீர்த்த நிம்மதியுடன் வாஞ்சிநாதன் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் உயிரை இந்த நாட்டின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கினான்.

சிறையில் பெரிதும் வாடிய வ.உ.சி., ஆஷ் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி கேட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version