- Ads -
Home இலக்கியம் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் வெற்றி பெற பாராயணம்: இந்து மக்கள் கட்சி ஏற்பாடு!

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் வெற்றி பெற பாராயணம்: இந்து மக்கள் கட்சி ஏற்பாடு!

arjun sampath

இந்து மக்கள் கட்சி  சார்பில் நிறுவனத் தலைவர்  அர்ஜுன் சம்பத்தின் 53-வது பிறந்த நாளை ஒட்டி ஏப்.20 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள கிருஷ்ண விலாஸ் ஹோட்டல் அரங்கில் ஜோதிடர் அணி சார்பில் ஜோதிடர் மாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு கோவை மாவட்ட ஜோதிடரணித் தலைவர் N.K.திவாகரன் தலைமை வகித்தார்.  ஜோதிடர் மூகாம்பிகைதாசன் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பங்கேற்றனர்.  வராகி மணிகண்ட சுவாமிகள்,  ஜெகநாத சுவாமிகள்,  சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள், கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள்.

இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவை…

1. ஜோதிடக்கலை என்பது மூடநம்பிக்கை அல்ல, நமது முன்னோர்களின் வானியல் மற்றும் கணித அறிவியலுக்கு உன்னத சாட்சியாக உள்ளது. ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசி மண்டலங்கள் என அசைக்க முடியாத அடிப்படைகளுடன் உள்ளது. இவை அனைத்தும் விஞ்ஞானப் பூர்வமானது ஆகும். சில ஜோதிடர்களின் கணிப்புகள் சில நேரங்களில் தவறாகலாம். ஆனால் ஜோதிடக்கலை என்பது பொய்யாகாது. ஜோதிடம் எனும் அறிவியற்பூர்வமான இந்திய நாட்டின் அருங்கலையை அவமரியாதை செய்யும் எவ்விதமான செயலையும் எவர் செய்தாலும் எவ்வகையில் செய்தாலும் இம்மாநாடு அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஜோதிடத்துறையின் உண்மையான வளர்ச்சிக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகின்றோம்.

2. அரசு பல்கலைக் கழகங்களில் ஜோதிடம் மற்றும் அது சார்பான படிப்புகள் ஓர் அங்கீகாரம் செய்யப்பட்ட துறையாக அமைக்கப்பட்டு, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட அரசு ஆவன செய்ய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகின்றது. ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டு வந்த ஜோதிட பட்டயப்படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து இம் மாநாடு வருத்தம் தெரிவிப்பதுடன் அப்படிப்பினை உடனடியாகத் தொடங்க அரசும், பல்கலைக்கழகமும் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

3. பல்கலைக்கழகங்களில் ஜோதிடத்துறை/மற்றும் இருக்கைகளை ஏற்படுத்தத் தேவையான நிதியாதாரம் திரட்டவும் பாடத்திட்டங்கள் வகுக்கவும் இம் மாநாடு தகுந்த முன் முயற்சி செய்திட உறுதி கொள்கிறது.

4. ஜோதிட அறிஞர்களைக் கொண்டு பயிலரங்கங்கள், ஆய்வரங்கங்கள், குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையிலான பயிற்சிகளை இலவசமாக நடத்திட இம் மாநாடு தகுந்த முன் முயற்சி செய்திட உறுதி கொள்கிறது. ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் எவரையும் இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

5. வயது மூத்த ஜோதிட அறிஞர்களுக்கு, தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுவது போல கெளவரப் பட்டங்களும், உதவித்தொகையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை அரசிடம் இம் மாநாடு முன்வைக்கின்றது.

6. ஜோதிடர்கள் கடவுளோ, கடவுளின் அவதாரங்களோ அல்ல அவர்கள் தாம் கற்ற கலையறிவின் மூலமாக மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் ஆலோசகர்கள் மட்டுமே ஆவர். பொது மக்கள் தனி மனித ஆராதனை, தனி மனித வழிபாடு போன்றவற்றைச் செய்வதன் மூலம் ஒரு தவறான பாதைக்கு செல்வதையும், அவ்வாறு மக்களைத் தூண்டுபவர்களையும் இம்மாநாடு கண்டிக்கிறது.

7. ஜோதிடம் காட்டும் முடிவுகள் மாற்ற முடியாத விதிகள் அல்ல. ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே. எனவே அதன் வரையரைகளை உணர்ந்து கொண்டு ஜோதிடர்களும், ஜோதிட ஆலோசனை பெறுவோரும் இந்து சமய அற மதிப்பீடுகளை வாழ்வில் பின்பற்றுவதாலும், உண்மையான முயற்சியினாலும், உழைப்பாலும் வாழ்வாங்கு வாழலாம் என இம்மாநாடு முன்மொழிகின்றது.

8. வராகமிகிரர், பராசரர், ஜைமினி, காளிதாசர், அகத்தியர், வசிஷ்டர், புலிப்பாணி, காகபுஜண்டர் போன்ற ஞானிகளை வணங்கிப்போற்றுவதுடன், பற்பல ஆராய்சிகளை தற்கால சூழலுக்குத் தகுந்தாற்போல உருவாக்கவும் ஜோதிடக்கலையானது மருத்துவம் கணினி மற்றும் பொறியியல், உளவியல் போன்ற துறைகளுக்கு இணையாக உலகளவில் வலிமை பெற வேண்டுவதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளவும் இம் மாநாடு உறுதி கொள்கின்றது.

நிகழ்ச்சியின் நிறைவாக தமிழகத்தில் ஆன்மீக அரசியல் வெற்றி பெற ராமராஜ்ஜியம் உருவாகிட லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version