- Ads -
Home உரத்த சிந்தனை யாகங்களுக்குப் பின் பெய்து சாதித்த தென்மேற்குப் பருவமழை! அக்.20ல் அடுத்தது தொடங்குது!

யாகங்களுக்குப் பின் பெய்து சாதித்த தென்மேற்குப் பருவமழை! அக்.20ல் அடுத்தது தொடங்குது!

rain

தென்மேற்கு பருவமழை 58 ஆண்டுகளுக்கு பிறகு அதிக நாள் நீடித்து ஒரு சாதனையை இந்த வருடம் படைத்துள்ளது. இந்த வருட தென்மேற்கு பருவமழை மேலும் பல சாதனைகள் படைத்துள்ளது!

இந்த வருடம் கொட்டித்தீர்த்த தென்மேற்கு பருவமழை கடுமையான வேண்டுதல்கள், வேண்டுகோள்கள், யாகங்கள், பூஜைகள் என மக்களின் தாகம் தீர்க்க கடும் பிரார்த்தனைகளுக்கு நடுவே வந்து கொட்டித் தீர்த்தது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரம் கால தாமதமாகவே தொடங்கியது. முதல் மாதமான ஜூன் மாதத்தில் மிகக் குறைவாகவே மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மழைப் பிடிப்புப் பகுதிகள் மழைப் பொழிவு அவ்வளவாக இல்லை. இதனால், குற்றால சீஸனும் வெகுவாக டல் அடித்தது. அதனால் 2018 ஆம் வருடத்தை போல் இந்த வருடமும் மழை பொய்த்து விடும் என்றே மக்கள் அஞ்சினர்.

இதனால், தமிழக திருக்கோயில்களில் மழை வேண்டி யாகம், பூஜைகள், திருவிளக்கு வழிபாடுகள் ஆகியவைகளை நடத்த அறநிலையத் துறை உத்தரவிட்டது. இதை அடுத்து தமிழகத்தில் உள்ள புனித நீர் நிலைகளில் திருக்கோயில்களில் மழை வேண்டி யாகங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் பருவமழை ஜூலை முதல் நேற்று வரை தன் நீர் வளத்தைக் காட்டு காட்டு என்று காட்டி…. கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வழக்கத்தை விட ஐந்து சதவிகிதமும் ஆகஸ்ட் மாதத்தில் 15 சதவீதமும் செப்டம்பரில் 52% கூடுதலாகவே மழை பெய்துள்ளது.

நாடு முழுவதும் சராசரியாக இதுவரை 88 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 10 சதவீதம் அதிகம். மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் பல சாதனைகளை படைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:

வானிலை மைய கணிப்புப்படி 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த வருடம்தான் தென்மேற்கு பருவமழை 110% பெய்துள்ளது. 1931 க்குப் பிறகு, அதாவது 87 வருடங்களுக்கு பிறகு வானிலை மையம் கணித்துள்ளதை விட இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளது.

1996 க்கு பிறகு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இயல்பை விட 15 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

செப்டம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழை 1917இல் 65 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. தற்போது 102 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 52 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மழையின் அளவில் ஒன்பது ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 83ஆம் ஆண்டில் 42 சதவீதம் கூடுதலாக மழை பெய்திருந்தது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் 30 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

வழக்கமாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, பருவமழை விலகவேண்டும். ஆனால்61ல் கூடுதலாக ஒரு நாள் மழை பெய்து அக்டோபர் ஒன்றில் பருவமழை விலகியது. இந்த ஆண்டு வரும் பத்தாம் தேதி வரை பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே 58 ஆண்டுகளில் அதிக நாட்கள் நீடித்த பருவமழை என்ற பெருமையை இந்த வருட தென்மேற்கு பருவமழை பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிக மழை பெய்யும் பகுதியான வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இது வரை பெய்த மழையின் இயல்பான அடிப்படையில் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பான அளவு கணக்கிடப்படுகிறது. இந்த மழை அளவு 2000 ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. இதுவரையில் 19 ஆண்டுகளில் 2007ல் மட்டுமே இயல்பான அளவுடன் 10 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது!

தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் விடைபெறும் நிலையில், அக்., 20 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதாகக் கூறப் படுகிறது.

வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி இது குறித்து தெரிவிக்கையில், தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம். தென்மேற்கு பருவ மழை எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் 50 சதவீதம் கோவையில் கூடுதலாகவே பதிவாகியுள்ளது.

தென் மேற்குப் பருவ மழையைப் பொறுத்தவரை நான்கு மாதங்களில் கோவையில் 18 மழை நாட்களில் 308 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆக.9ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 130 மி.மீ., மழை கிடைத்தது.

அதன்படி நடப்பு ஆண்டில் தென் மேற்குப் பருவமழை 50 சதவீதம் அதிகமாகவே பெய்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்று ஓரிரு நாட்களில் வடகிழக்காக மாறிவிடும். வடகிழக்குப் பருவமழை, அக்.20 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கோவையில் அக்டோபர் மாதம் 146 மிமீ., மழையும், நவம்பர் மாதம் 118 மிமீ., மழையும், டிசம்பர் மாதம் 41 மிமீ., மழையும் எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த மூன்று மாதங்களில் 305 மிமீ., மழை கிடைக்கும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version