- Ads -
Home உள்ளூர் செய்திகள் ஒகேனக்கல் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

ஒகேனக்கல் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தருமபுரி புறநகரப் பேருந்து நிலையத்திலிருந்து காலை 11.45 மணிக்கு இப் பேருந்து புறப்பட்டது. ஒகேனக்கல் வனப் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள வளைவில் மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்தபோது, அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறம் இருந்த சாலையோரத் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்து முழுவதுமாகச் சேதமடைந்தது. பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட அந்த வழியே சென்றவர்கள், விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பென்னாகரம், ஒகேனக்கல் தீயணைப்பு, மீட்புத் துறை வீரர்களும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து, பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி மீட்டனர். பேருந்தில் பயணம் செய்த தருமபுரி மாவட்டம், அதகபாடியைச் சேர்ந்த காளியப்பன் (54), இவரது மனைவி வெங்கட்டம்மாள் (50), மல்லாபுரம் சகாதேவன் (50), கம்மாளப்பட்டி மாதம்மாள் (50), அவரது பேத்தி சிவசங்கரி (10), தருமபுரியைச் சேர்ந்த மணிவண்ணன் (50), தொப்பூர் அருகே தொம்பரகாம் பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (10) ஆகிய 7 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். ஊத்தங்கரையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் சுதாகர் (42), இண்டூர் சுண்ணாம்புப் பாளையம் எம்.துரைசாமி (63) ஆகிய இரண்டு பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version