- Ads -
Home உள்ளூர் செய்திகள் நகைக்கடை உரிமையாளர் கொலையில் பொறியாளருக்கு தூக்கு

நகைக்கடை உரிமையாளர் கொலையில் பொறியாளருக்கு தூக்கு

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் நகைக் கடை உரிமையாளரைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், ஏரோநாட்டிக் என்ஜினீயருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நேற்று இந்தத் தீர்ப்பினை வழங்கியது. சென்னை நெற்குன்றம் பகுதியில் அடகுக் கடை நடத்தி வந்த குணாராம் (எ) கணேஷ்(28), கடந்த 2012 ஏப்ரல் 14ல், நகைக் கடையில் தனியாக இருந்தபோது, கடைக்கு வந்த ஒருவர் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளைடித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை செய்யும்போது கடையில் இருந்த கேமராவில் பதிவான உருவத்தை வைத்து மர்ம நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 12.05.2012 அன்று பள்ளிக்கரணைப் பகுதியில் மக்கள் தொகைக் கணக்கு எடுப்பதாகக் கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (எ) அப்பு (24) என்பதும், ஏரோனாட்டிக் பொறியியல் பட்டதாரியான இவர், விமான ஓட்டிக்கான (பைலட்) பயிற்சியும் பெற்றிருந்தது தெரிய வந்தது. மேலும், நெற்குன்றத்தில் நகைக் கடை உரிமையாளர் குணாராமை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததும் ராமஜெயம்தான் என்பதை போலீஸார் விசாரணையில் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவ் வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் புதன்கிழமை நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 30 சாட்சியங்கள், 22 ஆவணங்கள், 11 சான்று பொருள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு குற்றங்கள் நிரூபணம் செய்த பின்னர் ராமஜெயம் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிபதி மகாலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ராமஜெயத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். “பொறியியல் படிப்பு படித்த ராமஜெயம், தனது அறிவைப் பயன்படுத்தி சமூகத்தில் முன்னேற்றம் அடையாமல், குறுக்கு வழியில் சமூக விரோதச் செயலில் மீண்டும், மீண்டும் ஈடுபட்டு வந்ததால் இவர் வாழத் தகுதியற்றவர் எனக் கருதி இவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக’ நீதிபதி மகாலட்சுமி தனது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version