- Ads -
Home உள்ளூர் செய்திகள் சீர்காழி அருகே காரை வழிமறித்து பெண் பட்டப் பகலில் படுகொலை

சீர்காழி அருகே காரை வழிமறித்து பெண் பட்டப் பகலில் படுகொலை

murder-sirgaziசீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரில் சென்ற பெண்ணை, காரை வழிமறித்து இறக்கி, பட்டப் பகலில் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணனின் மனைவி வினோதா (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாராய வியாபாரியான ராமுவுக்கு ரூ.90 கோடி சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எழிலரசியை ராமு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், சொத்தின் ஒரு பகுதியை எழிலரசி பெயருக்கு எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் எழிலரசியுடன் ராமு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரைக்கால் பகுதியில் அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் ராமுவை வெட்டிக் கொலை செய்தது. எழிலரசி காயத்துடன் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் வினோதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் தனது குழந்தைகளுடன் சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு தனது தங்கை பிரியாவின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இதனிடையே ராமு கொலை தொடர்பாக வினோதா, அவரது தங்கை கணவர் ஆனந்த், ராமு நண்பர் அய்யப்பன், வைத்தியநாதன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குப் பதிவு செய்த சில மாதங்களிலேயே ராமுவின் நண்பர் அய்யப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழிரலசி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சொத்துக்கள் தொடர்பாக சென்னையில் இருந்து திருமலைராயன்பட்டினம் வந்த வினோதா நேற்று மதியம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சென்ற காரில் வினோதாவின் தங்கை கணவரின் நண்பர் நவநீததிருஷ்ணனும் உடன் சென்றார். அவர்கள் வந்த கார், சீர்காழி புறவழிச்சாலை உப்பனாற்றுப் பாலம் அருகே சென்ற போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கார் வினோதாவின் காரை வழிமறித்தது. கார் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவே, 10 பேர் கொண்ட கும்பல் அந்தக் காரில் இருந்து இறங்கி வினோதா வந்த காரை அடித்து நொறுக்கினர். ஓட்டுநர் மற்றும் காரில் வந்தவரை மிரட்டி, காரில் பின் இருக்கையில் இருந்த வினோதாவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் முகம் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். கொலை செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அவர்கள் வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார், கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப் பட்டிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். அதில், அந்த காரின் நம்பர் பிளேட் போலியானது என்று தெரியவந்தது. வினோதாவின் படுகொலை குறித்து அவரது தங்கை கணவர் ஆனந்த் சீர்காழி போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து எழிலரசியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version