- Ads -
Home அரசியல் உள்ளாட்சித் தேர்தல்கள்: ஜனநாயகப் படுகொலையே!

உள்ளாட்சித் தேர்தல்கள்: ஜனநாயகப் படுகொலையே!

ஜனநாயகத்தை காக்கும் என்று கருதப்பட்ட உள்ளாட்சி தேர்தல்கள் ஜனநாயக படுகொலைகளோடு நடந்து முடிந்துள்ளன.

localbody elections

-> நாராயணன் திருப்பதி

ஜனநாயகத்தை காக்கும் என்று கருதப்பட்ட உள்ளாட்சி தேர்தல்கள் ஜனநாயக படுகொலைகளோடு நடந்து முடிந்துள்ளன.

சொந்த கிராமத்தில் உற்றார், உறவினரிடையே, நண்பர்களுக்கிடையே, நன்கு அறிமுகமானவர்களிடையே அந்தந்த பகுதிகளில் ஊராட்சியை நிர்வகிக்க, அடிப்படை வசதிகளை மேம்படுத்த, சீர்படுத்தவே உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆனால், ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு கூட பல லட்சங்கள் செலவிடப்பட்டதோடு, கடும் போட்டி, சண்டை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து என உருமாறி ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற கனவு தற்போது ‘கட்ட பஞ்சாயத்து ராஜ்’ என்றாகி விட்டது’.

உள்ளாட்சிகளில் நடைபெறும் கட்டமைப்பு மற்றும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தக்கூடிய ‘நிதி’யை கையாளும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சர்வவல்லமை படைத்தவர்களாக உள்ளாட்சிகளின் தலைவர்கள் விளங்குகிறார்கள், ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ‘அதிகாரப் பரவல்’ என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களின் ஒவ்வொரு கையெழுத்திற்கும் அவ்வளவு மதிப்புள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே வேட்புமனு தாக்கல் செய்தவர்களை திரும்ப பெற செய்வது, தனக்கெதிரான வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பது, விலைக்கு வாங்குவது போன்ற பல்வேறு நாடகங்கள் அரங்கேறியதை மறுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அல்லது ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதியில் (வார்டில்) வெற்றி பெற்றால் கூட கோடீஸ்வரர்களாகி விட முடியும் என்பதால்,சக வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம், பொருள், மது, அடி, உதை,மிரட்டல் என்று சாம, தான,பேத, தண்டம் என்ற நான்கையும் பயன்படுத்தி அதிகாரத்தை அடைந்திருக்கிறார்கள்.

கிராம வார்டுகள் மற்றும் தலைவர் பதவி தவிர மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் கட்சியின் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்றாலும், அனைத்துமே அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் தான் செயல்படுகின்றன. இதில் பல வேட்பாளர்கள் எதிர்ப்பில்லாமல் (Unopposed) தேர்ந்தெடுக்கப்பட்டதாக பெருமை தேடி கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் அந்த பதவியை ஒரு பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. ஆக, மக்கள் பிரதிநிதிகள் என்ற விற்பனை பொருளை (Saleable commodity) விலைக்கு வாங்குவது வேட்பாளராக இருந்தாலும் தங்கள் உரிமையை விலைக்கு விற்பது பொது மக்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்சியில் போட்டியிட பணம், வாக்களிப்பதற்கு பணம், வாக்களிக்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு பணம், அதிகாரிகளுக்கு பணம் என்று பணத்தை தண்ணீராய் செலவழித்து ‘மக்கள் பணியாற்ற’ போட்டியிடுகிறார்கள் ‘மக்கள்’. சில மாநகராட்சி வார்டுகளில் சில வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவிட்டதாக சொல்லப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. பல கோடிகளை கொட்டி குவித்து போட்டியிடுபவர்களுக்கு சேவை மனப்பான்மை எங்கிருந்து வரும்? முதலீடு செய்வது லாபத்தை ஈட்டுவதற்கு தான் என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடி. தேர்தல் முடிந்த பின்னர், தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்களில் குதிரை பேரம், கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல், கவுன்சிலர்களை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று கவனித்தல், எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல், சுயேச்சைகளிடம் பேரம் பேசுதல் என்று இந்த உள்ளாட்சி வியாபாரம் தன் உச்சக்கட்டத்தை எட்டியதை தமிழர்கள் அனைவரும் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்.

ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்கள், தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை தி மு க வை சேர்ந்தவர்கள் பறித்து கொண்டார்கள் என்று புலம்ப, அதற்கு தி மு க தலைவர், தன் கட்சியினரை கண்டிக்க, ஒரு சட்டமன்ற உறுப்பினர் உட்பட சில மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட, அதையும் மீறி சிலர் முரண்டு பிடிக்க, சமூக நீதி படைத்து, சமுதாயத்தை சீர் செய்வதற்காகவே கட்சி நடத்துகிறோம் என்று முழங்கிய கூட்டணி தலைவர்கள் தங்கள் கட்சியினருக்கு பதவியை பெற்று தர போராட, என்று இந்த வியாபாரம் நீண்டு கொண்டே இருப்பதை தமிழகம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

சில வருடங்களுக்கு முன் ஊழலின் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று அமித்ஷா அவர்கள் கூறிய போது பொங்கி எழுந்தவர்கள், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் கோடிக்கணக்கான பணம் வாரி இறைக்கப்பட்டது சமுதாய சேவைக்காக தான் என்று சொல்வார்களா அல்லது அடுத்த ஐந்து வருடங்களுக்கு கிராமங்களிலும், நகரங்களிலும், மாநகராட்சிகளிலும் நடைபெறப்போகும் கட்டமைப்பு வியாபாரத்திற்கான முதலீடு என்பதை ஏற்றுக்கொள்வார்களா?

ஜனநாயகத்தின் தூண்களாக சித்தரிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தற்போதைய தேர்தலில் நடைபெற்ற பணநாயகத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதோடு, தி மு கவும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து. மீண்டும் தமிழகத்தின் ஐந்து வருட உள்ளாட்சி வியாபார ஒப்பந்தத்தை புதிப்பித்து ஊழல்,லஞ்சம் எனும் உடும்புப் பிடியில் சிக்க வைத்துள்ளது.

இந்த தேர்தலில் ஒரே ஆறுதல், தி மு கவின் அதிகார துஷ்பிரயோகத்தை, பணபலத்தை, ஆள்பலத்தை, எதிர்த்து போராடி பல இடங்களில் பெற்ற பாஜக வேட்பாளர்களின் வெற்றி தான். இந்த போராட்டத்தை வருங்காலத்தில் மேலும் முன்னே கொண்டு சென்று வெற்றி பெரும் பாஜக.

அதுவரை, இனி தமிழகத்தில் எல்லாமே ‘காசு, பணம், துட்டு, Money, Money’ தான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version