- Ads -
Home Reporters Diary நீதித்துறை ஊழல்கள்: வழக்கறிஞர் சங்கம் கேள்வி

நீதித்துறை ஊழல்கள்: வழக்கறிஞர் சங்கம் கேள்வி

அன்பார்ந்த பொதுமக்களே!

நீதித்துறை ஊழலுக்கெதிரா நீதித்துறையின் ஒரு அங்கமான வழக்கறிஞர்களே, நீதிபதிகளின் ஊழலைப் பேசுவது ஒருவகையில் ‘பூசாரியே கடவுள் இல்லை’ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும் “உண்மையைச் சொல்வது வழக்கறிஞர்களின் கடமை” என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் நீதித்துறை தொடர்பான சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

கடந்த 1947-லிருந்து 2015-வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் ”வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜீ அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.யார் நடவடிக்கை எடுப்பது?

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல்பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசன், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர்.இன்றுவரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன?

கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ”சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு நடந்துவரும்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா,கர்ணன்,தனபாலன்-வேலுமணி(Junior Judge) ஆகியோர் கிரானைட் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததேன்?

தாதுமணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி நியமிக்கப்பட்டு விசாரணை முடிந்தநிலையில் விசாரணைக்குழு அறிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா ரத்து செய்த மர்மம் என்ன?

நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்புச் சொன்னார்.இது நீதியின் தற்கொலை.போராடும் வழக்கறிஞர்கள் மீது கோபப்படும் நீதிபதிகளே, உங்கள் பதில் என்ன?

தமிழக மக்களின் வேர்வை சிந்திய வரிப்பணம் 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியா கம்பெனி.எட்டப்பன்போல் ஸ்டே குடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன்.இது தேசத் துரோக குற்றமல்லவா?

உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று?

நீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம்- கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார் என்பதால்தானே?

ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் உயர்-உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகில் ரோத்தகி சொன்னாரே! வழக்கம்போல் மவுனம்தான் பதிலா?

சாதாரண மக்களின் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிநிற்க, பி.ஆர்.பி – வைகுண்டராஜன் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளையர்களின் வழக்குகளை மட்டும் நீதிபதிகள் விசாரித்து முடிப்பதேன்?

மூத்த – செல்வாக்கான வழக்கறிஞர்கள் வந்தால் வழக்குகள் முடிக்கப்படுவதும், முகம் தெரியாத இளம் வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஏன்?

சல்மான்கான் போல சாமானிய மக்களுக்கு உடனடி நீதி கிடைக்குமா?

அமித்சா வழக்கில் தீர்ப்புச் சொல்லி – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவி பெறுவது சரியா?

அனைத்துத் துறைகளும் ஊழியர் தேர்வை சட்டப்படி,சரியாக நடத்த வேண்டும் என உத்தரவிடுகிறது சென்னை உயர்நீதிமன்றம்.ஆனால், சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வை வெளியில் சொன்னால் மக்கள் காறித் துப்ப மாட்டார்களா?

வழக்கறிஞர்களுக்கு அடிக்கடி நேர்மையை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமின் வழங்கியது மனுநீதிப்படியா?

சொத்துத் தகராறுக்கு சொந்தத் தம்பி வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் யோக்கியறா?

சட்டமே தெரியாத நீதிபதிகள் கர்ணன், வைத்தியநாதன், ராஜா போன்றவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளானது எப்படி?

நீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர்.தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன?

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்கத் தகுதியானவர்களா?

சட்டத்தை விட, நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராமசுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன?

நீதித்துறை மாண்பைக் கெடுப்பது – நீதிபதிகளின் ஊழல்- பாலியல் குற்றங்கள்-அரசு ஆதரவு தீர்ப்புகளா? வழக்கறிஞர் போராட்டங்களா?

நீதித்துறை ஊழல் தொடர்பாக என்றாவது FULL COURT-ல் விவாதித்துண்டா?

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தால் நீதிபதிகள் பயப்படுவதேன்?

ஒட்டுமொத்தமாக, சாமானிய மக்களுக்கு நீதி வழங்க மறுத்து தோற்றுப் போனது இந்திய நீதித்துறை.மாற்றுக்கருத்துள்ள நீதிபதிகள் ஒரே மேடையில் விவாதிக்க வரலாம்.

மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் நீதித்துறை,தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளுக்கு வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள் என்பதாலும்,நீதிபதிகளின் மேலதிகாரத்தைக் கேள்வி கேட்கிறார்கள் என்பதாலும், எங்களெ ஒடுக்க புதிய சட்டத்த இயற்றி தலைமை நீதிபதி முனைகிறார்.அரசு-காவல்துறையோடு இணைந்து நிற்கிறது.மக்கள் துணையோடு நீதித்துறையின் அடக்குமுறையை வீழ்த்துவோம்! வழக்கு, சிறைக்கு அஞ்சாமல் புதிய சட்டத்தை எதிர்த்து திரும்ப பெரும்வரை தொடர்ந்து போராடுவோம்!
ஹிட்லர் ஆட்சிக்குப் பின் நடந்த விசாரணையில் அரசுடன் சேர்ந்து குற்றம் இழைத்து, மக்களை ஒடுக்கிய நீதிபதிகளும் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நினைவூட்டுகிறோம்!
பாராளுமன்றமே!
சென்னை உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்திடு!

பொதுமக்களே!

நீதிபதிகளின் ஊழல்களைக் கேள்வி கேளுங்கள்! போராடுங்கள்! நாங்கள் கேட்டதற்காக எங்களை ஒடுக்குவதற்காக புதிய சட்டம் இயற்றி உள்ளார்கள்

———————————–
அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version