- Ads -
Home அடடே... அப்படியா? அகம் அறிந்த ஆழம்.. ஆண்டாண்டு கால நேசம்.. நண்பர்கள் தினம்!

அகம் அறிந்த ஆழம்.. ஆண்டாண்டு கால நேசம்.. நண்பர்கள் தினம்!

friend 1
friend 1

நட்பு காலம்காலமாக போற்றப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தற்காலத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் நண்பர்கள் உலகமெங்கும் தொடர்பில் அமைந்து நட்பை வளர்க்கிறார்கள்.

நட்பினை வள்ளுவர் ஒரு அதிகாரமாக வைத்து யாருடன் நட்பு வைக்கவேண்டும், கூடாது என்பது பற்றியும்,நட்பு என்பது எத்தன்மையது என்பது பற்றியும் கூறியிருப்பார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

ஆடை உடலைவிட்டு நழுவும்போது கை அதைப்பிடிப்பதற்கு விரைந்து செல்வதுபோல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று, அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

மகாபாரததில் வில்லன் துரியோதனனைக்கூட நட்பு என்ற ஒன்றில் சிறந்தவனாக இருந்து கர்ணன்,துரியோதனன் நட்பு என்று இன்றும் யாவரும் பேசும் ஒரு நண்பனாக விளங்கினான்.

சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாறு நட்பின் ஆழம் பேசும்.

athiyaman

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும் வேறு நிகழ்ச்சி இல்லை

அதே போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தான் அதியமான். ‘

முன்னொரு காலத்தில் ஒருவருக்கொருவர்  பார்க்காமலே நட்பு வைத்து நட்பின் இலக்கணமாக திகழ்ந்தனர் பிசிராந்தையார்,கோப்பெரும்சோழன் இருவரும்.

பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.
இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.
கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.
இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.
இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.
தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான். இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காகத்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.
இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.
“இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
வருவன்  என்ற  கோனது  பெருமையும்
அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே.”
பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன. 

friend

இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம். நட்பு தினத்தை கொண்டாடுவதிலும் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.

அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளைகள் போன்ற சொந்தங்களிடம் நாம் அன்பு காட்டுவது இயற்கை. ஆனால் எந்த உறவும் இல்லாமல் வரும் நட்புக்கும் நண்பர்களுக்கும் எல்லை இல்லை. தோள் கொடுப்பான் தோழன்.

நட்பு என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் நண்பன். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதலாகவும், ஊன்றுகோலாக இருப்பான் உண்மையான நண்பன். அந்த நட்பு உன்னதமானது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம்.

friend ship day

உலகம் போற்றும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பெரிய வரலாறு உண்டு. ஆனால், நண்பர்கள் தினத்துக்கு எந்த பின்னணியும் இல்லை.

நண்பர்கள் தின கொண்டாட்டத்தை 1930ம் ஆண்டு Ôஹால்மார்க்Õ வாழ்த்து அட்டைகள் நிறுவனர் ஜோய்ஸ் ஹால் என்பவர் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் முடிவை வெளியிட்டார்.

பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோபி அன்னான் அவர்களால் உலக நட்பு நாள் தூதுவராக கார்ட்டூன் கதாபாத்திரமான வின்னி த பூ (Winnie the Pooh) தேர்ந்தெடுக்கப்பட்டது. தேனை விரும்பி உண்ணும் கரடியான இந்த பாத்திரம், கவிதையும் எழுதும். தன் நண்பர்களான டிக்கர் (புலி), கங்கா (கங்காரு), பிக்லெட் (பன்றி), இயோர் (கழுதை) ஆகியோருக்காக எதையும் செய்யும் கதாபாத்திரமான வின்னி த பூ (கரடி) உலக நட்பு தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான தேர்வு என அனைவராலும் ஏற்கப்பட்டது.

Cartoon

உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.

உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நட்பு என்பது முழுமையான மகிழ்ச்சி, விலை மதிப்பற்றது, ஈடு இணையில்லாதது, துன்பத்தை போக்கக்கூடியது, சுயநலமற்றது என நட்பு பற்றி விளக்கம் அளித்துக்கொண்டே போகலாம்.

நண்பர்களிடையே முறிவு என்பது வரக்கூடாது ஒன்று, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் நண்பர்களை பிரிந்துவிட்டால், இந்த தினத்தை பயன்படுத்தி உங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணருங்கள்.
நண்பர்கள் குறித்து சில பொன்மொழிகள்.

cartoon 2

“பனைமரம்” தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.

“தென்னைமரம்” தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.

“வாழைமரம்” தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.

இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும். –
கவிஞர்.கண்ணதாசன்

ஒரு நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான் – எமர்சன்

புது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான் – புல்லர்

நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு, நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய் – வில்லியம் ஜேம்ஸ்

நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது, துயரத்தைப் பாதியாக்குகின்றது – பிரான்சிஸ் பேகன்

நல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது – காந்தியடிகள்

உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர் – தோமஸ்.ஏ பெக்கட்

பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான், கோபக்காரன் தன்னையே இழக்கிறான் – பீட்டர் வெல்ஸ்

வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வார், வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம் – இங்கர்சால்

நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பனைவனையும் நண்பனாக்கி கொள்ளாதே – ஜெசி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version