- Ads -
Home அடடே... அப்படியா? கருந்தேள் கொட்டி கருப்புச் சட்டை கழற்ற வைத்த கடவுள்!

கருந்தேள் கொட்டி கருப்புச் சட்டை கழற்ற வைத்த கடவுள்!

maharaj justice

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்… திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் நடந்த சுயமரியாதை மகாநாட்டுக்குப் போயிருந்தேன். நமது சமயத்தில் உள்ள மூடக் கருத்துகளை நையாண்டி செய்து பல அறிஞர்கள் சுவையாகப் பேசினார்கள். அவர்களது பேச்சுத் திறமையும் துணிச்சலும் என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

இந்த மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் தினந்தோறும் கோயிலுக்குப்போய் இறைவனை வணங்கி வந்தேன். மாநாட்டுப் பேச்சுகளைக் கேட்ட பிறகு “சாமியாவது, சாத்தானாவது! மந்திரமாவது, மண்ணாங்கட்டியாவது!” என்று சொல்லி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்துப் பழிக்கத் தொடங்கினேன். இப்படியாகப் பல ஆண்டுகள் திரிகரண சுத்தியாக “கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்ற உறுதியில் நின்றேன்.

இந்த உறுதிக்கு ஊட்டம் கொடுப்பதற்காக “வால்டேர்’ “இங்கர்சால்’ “பெட்ரன்ட் ரஸ்ஸல்’ போன்ற சிறந்த நாத்திகவாதிகளுடைய நூல்களை கவனத்தோடும் ஆர்வத்தோடும் படித்து வந்தேன். ஆனால் என்னுடைய உறுதிப்பாட்டுக்கு உலை வைக்கக்கூடிய நிகழ்ச்சிகள் பின்னால் நடக்கத் தொடங்கின.

பாளையங்கோட்டையில் நான் வழக்குரைஞராக இருந்தபோது கல்கத்தா தீர்ப்பு ஒன்றை மாவட்ட நீதிமன்றத்தில் மேற்கோளாகக் காட்ட எண்ணி நூலகத்திலிருந்து “41 கல்கத்தா” என்ற தீர்ப்புத் தொகுதியை எடுக்கப் போனேன். புத்தகத்தைப் புரட்டியபோது அதிலிருந்த ஒரு கருந்தேள் என் விரலில் கொட்டிவிட்டது.

தேள்கடி அனுபவம் எனக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருந்ததில்லை. கொஞ்ச நேரம் விரலில் கடுகடுப்பு இருந்தது. சிரித்துச் சமாளிக்கப் பார்த்தேன். ஆனால் நேரம் ஆக ஆக விஷம் ஏறிக்கொண்டே போயிற்று. வலி பொறுக்க முடியாமல் நீதிபதியிடம் “வாய்தா” வாங்கிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.

அதற்குள் கை முழுவதும் வலி பரவி நெறி கட்டிக் கொண்டது. என் துன்பத்தைச் சகிக்க முடியாத என் அத்தை பக்கத்து வீட்டுப் பையன் மணியை அவசரமாக அழைத்தார். அவனுக்கு வயது 10 இருக்கும். என்னைக் கண்டாலே அவன் அஞ்சுவான். அவனைக் கண்டாலே எனக்கு ஏளனம்.

கையில் ஒரு வேப்பங்குலையை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டு பயமில்லாமல் அவன் என்னை அணுகி, வேப்பங்குலையால் என் கையில் மூன்று முறை அடித்தான். உடனே என் வலியெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது! நடந்த நிகழ்ச்சியை என்னால் நம்பவே முடியவில்லை!

மணியை அரைமணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததில், சந்திர கிரகண காலத்தில் நட்டாற்றில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு லட்சக்கணக்காக ஒரு மந்திரத்தை ஜபித்ததால் தனக்கு இந்த விஷம் இறக்கும் சக்தி கை வந்தது என்று சொன்னான்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத மந்திரத்துக்கு இவ்வளவு சக்தி இருக்குமா என்று திகைத்தேன். பெட்ரன்ட் ரஸ்ஸலைப் படித்து உருவேற்றிய என் பகுத்தறிவுக்கு இந்த நிகழ்ச்சி அவமானத்தையே தந்தது. நாளடைவில் இன்னும் பலஅதிர்ச்சி தரத்தக்க நிகழ்ச்சிகள் எனக்கு நடக்கவே, வாழ்க்கையைப் பார்க்கும் என் பார்வை மாறியது. என் மனமும் மாறியது. என் வாழ்வின் அடிப்படையே மாறிவிட்டது

– நீதிபதி எஸ் மகராஜன் எழுதிய “ஆடத் தெரியாத கடவுள்” நூலிலிருந்து

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version