- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சதுர்த்தி நாளில்… ஆதி விநாயகரை தரிசிப்போமா? வாங்க… சிதலபதி என்ற திலதர்ப்பணபுரியை பார்ப்போம்..!

சதுர்த்தி நாளில்… ஆதி விநாயகரை தரிசிப்போமா? வாங்க… சிதலபதி என்ற திலதர்ப்பணபுரியை பார்ப்போம்..!

adhivinayakar sithalapathi

சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயம் என்கிற ஆதிவிநாயகர் ஆலயம், திலதர்ப்பணபுரி.

இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

தல தகவல்:

தல மூர்த்தி : ஸ்ரீ முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்)
தல இறைவி: சொர்ணவல்லி (பொற்கொடி)
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தார மரம்

தல வரலாறு:

திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன.

இராமாயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து செல்லும்போது ஜடாயு என்ற பறவை, இராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் வெட்டப்பட்டு இறந்தது. சீதையைத் தேடி ஸ்ரீ ராமரும், லெட்சுமணனும் இலங்கையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீ ராமருக்கு தனது தந்தை தசரதனுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. அதே நேரத்தில் தன் பொருட்டு உயிரை விட்ட ஜடாயு பறவைக்கும் பித்ரு பூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீ ராமர். அவ்வாறாக இலங்கைக்கு செல்லும் பாதையில் இந்த திலதர்ப்பணபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார். அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீ ராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு ஸ்தலம் ஆகியது.

கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை நட்சோதி மகாராஜா ஆண்டு கொண்டிருந்தார். அவரது அரசவைக்கு ஒரு நாள் நாரதர் பெருமான் வருகை புரிந்தார். அரசர் நாரதரிடம், இந்தியத் திருநாட்டிலே எந்த ஸ்தலம் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்று வினவினார். அதற்கு நாரதர், எந்தத் திருத்தலத்தில் நாம் செய்யும் பிண்ட தானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுச் செல்கின்றனரோ, அந்தத் திருத்தலமே புண்ணியத் திருத்தலம், எனக் கூறினார். மன்னன் பல திருத்தலங்களுக்குச் சென்று, கடைசியாக திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.

திருத்தலப் பெருமை:

திலதர்ப்பணபுரி திருத்தலம் நுழையும்போதே ஒரு சிறந்த, அரிய விஷயம் நம்மை வியப்படைய வைக்கிறது. திருக்கோயிலை பார்த்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஆதி விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை நரமுக விநாயகர், மனித முக விநாயகர் என்றும் அழைக்கின்றனர். வேழ முகம் தோன்றுவதற்கு முன்பாக உள்ள மனித முகத்துடன் கணபதி காட்சி தருகிறார். ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது.

திருக்கோயிலின் தெற்கு புறத்தில் ராமர் தன் கையாலேயே பிடித்து வைத்து பூஜை செய்த அழகநாதர் இருக்கிறார். நந்திகேஸ்வரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாவிஷ்ணு, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்களில் முதன்மையான நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த சுவாமி சிலைகள் அனைத்தும் நுட்பமான வேலைப் பாடுகளுடனும், அச்சில் வார்த்தது போல அழகாக உள்ளன. கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முக்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார். அருகிலேயே சொர்ணவல்லித் தாயார் சன்னதி உள்ளது.

சிவபிரானின் சொல் பேச்சு கேட்காமல், பார்வதி தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்றார். அங்கு தனது தந்தை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு திரும்பினார். அந்த பாவம் தீர இங்கு வந்து மந்தார மரம் ஒன்றை நட்டு வைத்து அங்கேயே குடிகொண்டார். சில காலங்கள் கழித்து சிவன் மனம் மாறி பார்வதியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டார். பார்வதியால் நடப்பட்ட மந்தார மரமே இங்கு தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ராமர் தர்ப்பணம் செய்யும் காட்சி, நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக்கோயிலில் காணலாம் .

இக்கோயிலில் மஹாளய பட்சமாகிய 15 நாட்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சாதி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப் படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version