- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில்...

கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?

கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ?
கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
பலருக்கு இது விஷயமாக பல ஐயங்கள் உள்ளன. இது சம்பந்தமாக அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கேள்விகள்:-
“மரணத்திற்கு பின் அந்த ஜீவனின் நிலை என்ன? ஜீவி இறந்த பின் எவ்விதம் மாறுதல் அடைவான்? புண்ணியாத்மாக்கள் யார்? பாபாத்மாக்கள் யார்? இது பற்றி விவரித்தால் அனைவரும் புண்ணியாத்மாக்களாக ஆவதற்கு முயற்சித்து நரக வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அனுகூலமாக இருக்குமே?”

மரணமடைந்த ஜீவனுக்கு பிரேதப் பிசாசு வடிவம் வராமலிருப்பதற்காக பிள்ளைகள் கர்மாக்கள் செய்ய வேண்டும். 10 நாட்கள் பிண்டம், உதகம் (நீர்) போன்ற தானங்களால் வேறொரு சரீரம் பெற்று ஜீவன் அதனுள் பிரவேசிக்கிறான் என்று புராணங்கள் கூறுவதாக தெரிகிறது!. அனைவரும் பிண்டப் பிரதானம் செய்கிறார்களா? செய்யாததால் அனைவரும் பிசாசுகளாக அலைகிறார்களா?
ஹிந்து மதத்தவர்கள், நம் புராண, இதிகாசங்களில் கூறப்படுகின்ற தெய்வங்களை பக்தியோடு வணங்குபவர்கள் அனைவருமே இந்த கர்மாக்களை செய்கின்றனரா? செய்ய இயலுகிறதா? அவ்வாறு செய்ய இயலாததால் அவர்களின் இறந்த பெரியோர்கள் பிசாசுகளாக திரிகிறார்களா? சரி. இதர மதத்தவர்களின் சங்கதி என்ன? இது பற்றிய விஷயங்களை படிப்பதால் குழப்பமும் பயமும் ஏற்படுகிறதே!
கருட புராணம் வீடுகளில் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்களே, உண்மையா? கோவில்களில் வைத்துத் தான் படிக்க வேண்டுமாம்! மரணத் தீட்டு உள்ள சமயங்களில் தவிர பாக்கி வேளைகளில் படிக்கக் கூடாதாமே?

பதில்:-

அந்தந்த மதத்தவருக்கு அந்தந்த மதப்படி மரணத்திற்குப் பின் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள் உள்ளன. அவையே அந்த ஜீவன்களுக்கு பிண்ட சரீரங்களை அளிக்கின்றன. அந்த சம்ஸ்காரங்கள் இல்லாத போது, பிரேதத்திற்கு விமுக்தி கிடைக்காது.
நம் ஹிந்து சம்பிரதாயப்படி நமக்கு சில தினங்கள் பிண்டம், உதகம் போன்ற பிரதானங்களை செய்ய வேண்டிய விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செய்யாவிட்டால், பிரேதங்களாகவே இருக்க வேண்டிய நிலை வரும் என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.
புராண, இதிகாசங்களில் கூறப்பட்ட மதிப்பு மிகுந்த, விஞ்ஞான பூர்வமான, மனிதனுக்கு சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் நம் சம்பிரதாயம் பற்றிய விஷயங்களில் – இந்த ‘மரணத்திற்குப் பிற்பட்ட நிலை’ கூட ஒரு பாகம் தான். ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் இவை பற்றி ஸ்பஷ்டமாக எடுத்துக் கூறியுள்ளன.
அது மட்டுமல்ல. வேதத்திலும் இது பற்றிய விவரங்கள் விஸ்தாரமாக உள்ளன. இந்த வைதீக சம்ஸ்காரம் செய்வதற்கு அனைவரும் வேதம் படித்து, ஒப்பித்து, கர்ம காண்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இது நம் ஹிந்து மதத்தில் சனாதனமாக, பழங்காலம் தொட்டு வருகின்ற சம்பிரதாயம்.
மரணத்திற்குப் பின் நிலைமை என்ன என்பது பற்றி தெரிந்து கொண்டால். தகுந்த ஜாக்கிரதையுடன் நடந்து கொள்வோம் என்ற உத்தேசத்துடன் ரிஷிகள் இப்படிப்பட்ட புராணங்கள் மூலம் தெரிவிக்கிறார்கள். இவை அனைத்தும் சூட்சும உலகு சம்பந்தப்பட்ட விஷயங்கள். அதை பற்றி ஸ்தூலமாக, வெளிப்படையாக நிரூபிப்பது எவ்வாறு சாத்தியம்?
தெய்வம், தெய்வீக சக்தி – இவற்றைப் போலவே, இவையும் சூட்சும பிரபஞ்ச விஷயங்கள். பரலோகம் பற்றிய நம்பிக்கையே இல்லாத போது, பாபம், புண்ணியம் பற்றிய பேச்சே இல்லை. லௌகீகமான நாஸ்திகர்ககளின் வாதம் இதுவே அல்லவா? நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இவை அனைத்தும் உண்மையே! அவற்றின் பாதிப்பு நம் மீது பட்டே தீரும்.

தியானம், யோக சாதனை, நித்திய அனுஷ்டானம் செய்பவர்களுக்கு தெய்வ ரட்சணை இருப்பதோடு, சூட்சும பிரபஞ்ச தரிசனம் கூடக் கிடைக்கிறது. யாரெல்லாம் அவ்விதம் தியானம் செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த தரிசனம் கிடைக்கிறது. அனைவரும் அனைத்தயும் சாதிக்க இயலாதல்லவா? அவ்வாறு சாதிக்க இயலாதவர்கள், சாதித்தறிந்தவர்களின் ஞானம் மூலம் தெரிந்து கொண்டு நம்பிக்கையோடு கடைபிடிப்பார்கள்.

இவ்வாறான விஷயங்கள், படிப்பவர்களின் மனதில் கவலையோ குழப்பமோ ஏற்படுத்துவதில்லை. மாறாக, படிப்பவரை ஆலோசனையில் ஆழ்த்தும் என்பது உறுதி. வியாதி, நிவாரணம் சம்பந்தப்பட்ட வைத்திய நூல்களை படிப்பதால் சாமானியர்களுக்கு சிறிது கவலை ஏற்படுவதுண்டு. அதற்காக அந்த நூல்களை வெளியிடக் கூடாது என்று கூறுவது சரியாகாதல்லவா?
பித்ரு கர்மாக்களை செய்வதற்கு, பண்டிதர்களாகவோ, நிஷ்டையோடு கூடியவர்களாகவோ, வேதம் அறிந்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. மிகச் சாமானியர்களும், அனைத்து இனத்தவர்களும் அவரவர் சம்பிரதாயத்தை ஒட்டி செய்தபடிதான் உள்ளனர். இன்றைக்கும் பலர் அமாவாசையன்று தம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் உணவு உண்ண மாட்டார்கள். அனைத்து குலத்தவரும் இவ்விதம் இருக்கின்றனர். யாரோ ஒரு சில தர்ம பிரஷ்டர்கள் இவற்றை உதறி விட்டு, தம் சோம்பேறித் தனத்தையும் அலட்சிய போக்கையும் மெச்சிக் கொள்வதற்கு ஏதேதோ பேசுகின்றனர். அவ்வளவே!
அஷ்டாதச புராணங்களும் வியாச மகரிஷி எழுதியவையே. அவற்றுள் கருட புராணமும் ஒன்று. சம்ஸ்கிருத மொழியில் அதில் உள்ள விஷயம் மிக விஸ்தாரமாக உள்ளது. சம்பிரதாய முறைப்படி அதனை அத்யயனம் செய்தால் அதில் உள்ள ரகசியங்கள் தெரிய வரும். வைத்திய, ஜோதிட, மந்திர, தேவதா ரகசியங்கள் எத்தனையோ அதில் உள்ளன. சமீபத்தில் பிரசித்தி பெற்றுள்ள ‘ரேக்கீ’ போன்ற மருத்துவ முறைகள் மூலம் கூட அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
எது உண்மையாக உள்ளதோ அதையே கூறியுள்ளனர் மகரிஷிகள். அவர்கள் ஊகித்து, கற்பனை செய்து எழுதும் எழுத்தாளர்கள் அல்லர். இந்திரியங்களுக்கு அதீதமானவற்றை தரிசித்த சத்திய த்ரஷ்டர்கள். அப்படிப்பட்ட ரிஷிகள் கூறியவற்றையும் அதிலுள்ள விஞ்ஞானத்தையும் நாம் அறிய வேண்டும். ‘சிராத்தம்’ போன்ற பித்ரு கர்மாக்கள் நம் சம்பிரதாயத்தின் ஒரு பாகமே. அனைத்து வர்ணத்தவருக்கும் இது பொருந்தும்.
“ஜீவதோ வாக்ய கரணம்
ப்ரத்யப்தம் பூரி போஜனம்
கயாயாம் பிண்ட தானம் ச
த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா..” – என்பது தர்ம சாஸ்திர வசனம்.
-“உயிரோடு இருக்கும்போது தாய், தந்தையர் சொல்லுக்கு கௌரவம் அளிப்பது, பின்னர் ஒவ்வோர் ஆண்டும் சிராத்தம் செய்வது, கயையில் பிண்ட தானம். இம்மூன்றும் புத்திரனுக்கு உய்வளிப்பது” என்பது இதன் பொருள்.
தெய்வ ருணம், பித்ரு ருணம், ரிஷி ருணம், பூத ருணம், மனித ருணம் – இந்த ஐந்தும் ஒவ்வோர் மனிதனும் தீர்த்துக் கொள்ள வேண்டிய கடன்கள் என்பது சனாதன தர்மத்தின் பிரதான சூத்திரம். இந்த ஐவருக்கும் திருப்தி உண்டு பண்ணி, ருண விமோசனம் பெறுவதே புண்ணியமாகும். இதனைச் செய்பவரே புண்ணியாத்மா. செய்யாதவர் பாபாத்மா. இந்த வெளிப்படையான வேறுபாடு போதும்.
அதனால் தான் லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் ‘பஞ்ச யக்ய ப்ரியா’ என்ற நாமத்தால் அம்பாளை அழைக்கிறோம். பஞ்ச யக்யங்களில் பித்ரு யக்ஞமும் கூறப்பட்டுள்ளது.
யக்ஞம் என்ற உடனே அது ஏதோ வைதீக கர்ம காண்டம் என்றோ, ஹோமங்கள் செய்வது என்றோ எண்ண வேண்டாம். சாமானிய மனிதனுக்கு கூட குடும்ப சம்பிரதாயமாக வருகின்ற வழிமுறைகளே இவை. ‘யக்ஞம் ‘ என்றால் நன்றி உணர்வோடு செய்யும் பாவனை மயமான ஆராதனை, வழிபாடு என்பதே. அதற்குத் தகுந்த கிரியைகளையே தர்ம சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அவை அனைத்து வர்க்கத்தவருக்கும் வேறுபாடு இன்றி உள்ளன. நாம் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஐந்து கடன்கள் இவையே. இந்த பஞ்ச யக்ஞங்களின் மேல் மக்களுக்கு அறிதலும், ஆர்வமும் ஏற்படுத்துவதற்காகவே, தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
நமக்குத் பிடித்தமானவை மட்டுமே உண்மைகள் என்று எண்ணக் கூடாது. நமக்குப் பிடிக்காவிட்டாலும் கசப்பு மருந்தாக இருந்தாலும் சத்தியம் சத்தியமே! சர்வேஸ்வரனின் சிருஷ்டி, ஸ்திதி, லயம் – இவற்றின் பாகமே இவையும். ஜீவனின் பிறப்பு, மரணம் மட்டுமேயன்றி, அவனுடைய இடைவிடாத பிரயாணத்தில் பல்வேறு உடல்கள், பல்வேறு லோகங்கள், அவற்றில் வசிப்பது – போன்றவை உள்ளன. இது பற்றிய செய்திகள் எந்த புராணத்தை, எந்த வேத பாகத்தை, எந்த இதிகாசத்தைப் புரட்டிப் பார்த்தாலும் கண்ணில் தென்படும்.
ஸ்ரீ ராமன் போன்றவர்களும் தர்ம புத்திரன் போன்றவர்களும் இத்தகைய கர்மாக்களை செய்துள்ளார்கள். பீஷ்மராகிய காரண ஜென்மம் எடுத்தவருக்கே கர்மா செய்தான் தர்ம புத்திரன். ஆயின், பீஷ்மருக்கு பிரேத நிலையிலிருந்து முக்தி கிடைக்காது என்பதாலா? அல்ல. அது தர்ம புத்திரனுக்கு விதிக்கப்பட்ட கர்மா என்பதால் அதனை ஆற்றினான்.
இறந்தவருக்கு புத்திரன் இல்லாத பட்சத்தில் அதற்கு மாற்று உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. மரணித்த ஒவ்வொரு ஜீவனும் தின கர்மாக்கள் பூர்த்தியாகும் வரை பிரேதமாகவே இருக்கிறான். அதன் பிறகுதான் பிரேத நிலையிலிருந்து விமுக்தி பெறுகிறான். சரியான கர்மா செய்யப்படாவிட்டால் பிசாசு நிலையை ஏற்படும் அவகாசம் உள்ளது. ஆனால், முக்கிய விஷயம் என்ன வென்றால் – இறந்தவர்கள் அனைவரும் பிசாசுகளாக மாறுவதில்லை. ஊர்த்துவ லோகங்களுக்கு, மேலுலகங்களுக்கு செல்வதோ அல்லது உய்வடைவதோ நிகழ்கிறது.
பக்தர்கள், ஜீவன் முக்தர்கள், யோகிகள் போன்றோர் அப்படிப்பட்டவர்களே! இறந்தவர்கள் பிசாசுகள் ஆகாமல் உய்வடைந்த போதிலும், அவர்களின் புத்திரர்கள் மட்டும் தம் தம் ஆசாரப்படி கர்மாக்கள் செய்து தான் தீர வேண்டும். அந்த கர்மாக்கள் இறந்த ஜீவனின் மேலுலக பயணத்தை விரைவு படுத்தும்.
மரணித்தவர் பிரேத நிலை அடையாமல் உய்வடைந்தாலும், அவருடைய புதல்வன் மட்டும் அந்த கர்மாக்களை செய்யாவிட்டால் அத்தகைய புதல்வர்களுக்கு பித்ரு ருணத்திலிருந்து விமுக்தி கிடைக்காது. மீண்டும் பிராயச்சித்தங்கள் செய்து, மற்ற கர்மாக்களுக்கு அருகதை பெற்ற வேண்டும். அது மட்டுமின்றி, உய்வடைந்த தர்மாத்மாக்களின் ஆசிகள் தம்மை நினைத்து சிரத்தையோடு கர்மா செய்தவர்களுக்குக் கிடைத்தே தீரும். பித்ரு கர்மாக்களை செய்யாதவர்கள், மற்ற தெய்வக் கிரியைகளுக்கு அருகதையை இழக்கிறார்கள்.
சம்பிரதாயம் அறிந்த ஆசாரியர்கள், பித்ரு கர்மா செய்யாதவர்களின் இல்லங்களில் போஜனம் கூட சுவீகரிக்க மாட்டார்கள். அதனால் பித்ரு ருண விமுக்திக்காக அனைவரும் அந்த கர்மாக்களை செய்து தான் தீர வேண்டும். இதில் எத்தகைய மறு விவாதமும் கிடையாது.
கஷ்டப்பட்டு உழைக்காவிடில் தனம் சம்பாதிக்க இயலாது என்பது உலக நியதி. ஆனால் ஒரு சிலர் எந்த சிரமமும் இன்றி திடீரென்று செல்வந்தர்களாகிறார்கள். அதற்காக உலக நியதியை மாற்ற இயலாது அல்லவா? கஷ்டப்பட்டு செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்று தானே உபதேசிக்க வேண்டும்? அதே போல், யாரோ ஒரு சில யோகிகளுக்கு பிரேத நிலை விமுக்திக்கு மேலுலக யாத்திரைக்கான தேக கர்மாக்கள் தேவை இல்லாமல் போகலாம். அதற்காக, அதனை சர்வ சாதாரண நியதியாக கூற முடியாதல்லவா? ஜீவனின் வரவு, போக்கு, போக்குவரத்து, அநேக லோகங்களில் வசித்தல் – இவற்றைப் பற்றி சுய அனுபவத்தோடு யோகம், தியானம் போன்ற சாதனைகள் மூலம் தரிசித்தவர்கள் இன்றளவும் உள்ளனர்.
பரமஹம்ச யோகானந்தா தன் ‘யோகியின் சுய சரிதை’ யில் இவற்றைப் பற்றி விவரித்துள்ளார். அன்னிபெசன்ட் அம்மையார் போன்றவர்கள் ஆராய்ந்து எழுதிய நூல்களும் உள்ளன. இவையனைத்தும் நமக்கு கவலை அளிப்பதற்காக ஏற்பட்டவை அல்ல. வெளிப் பார்வைக்கு இவை அனைத்தும் ‘வீண்’ என்று தோன்றலாம். ஆராய்ந்து நோக்கும் சூட்சுமக் பார்வைக்கு இவற்றின் பலன் புரிபடும்.
கருட புராணம்:-
கருட புராணம் வீடுகளில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கோ படிக்கக் கூடாதென்பதற்கோ சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. அஷ்டாதச புராணங்களை வீடுகளில் வைத்துக் கொள்ளலாம். படிக்கலாம். கருட புராணமும் 18 புராணங்களில் ஒன்று. அதனை மரணத் தீட்டு நேரத்தில் படிப்பதன் மூலம், அப்போது செய்யும் கர்ம காண்டத்தில் கர்த்தாவுக்கு சிரத்தை ஏற்படுகிறது என்றும், இந்த புராண மகிமையால் மரணித்தவருக்கு சத்கதி கிடைக்கிறது என்றும் விசுவாசத்தோடு அது போன்ற சமயங்களில் கட்டாயம் படிப்பது வழக்கம். அவ்வவவு தானே தவிர, மீதி நாட்களில் படிக்கவே கூடாது என்பதல்ல. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். மேலும், அறிந்து கொள்ள வேண்டிய பரலோக விஞ்ஞானம், ஜீவனின் ஜனன, மரணங்களுக்கு அப்பால் உள்ள விஷயங்கள் எத்தனையோ உள்ள சிறந்த கிரந்தம் கருட புராணம். கருட புராணம் உள்ள இடத்தில் லட்சுமி நிவாஸம் செய்வாள் என்று அந்த புராணத்திலே சொல்லப்பட்டுள்ளது.

கடைசியாக ஒரு வார்த்தை. ஷாஜஹானை அவன் புதல்வனே சிறையிலிட்டான். அப்போது, யமுனை நதி தீரத்தில் ஒரு இந்தியர் தன் தாய் தந்தையருக்கு கர்ம காண்டம் நடத்திக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்தான் ஷாஜஹான். ‘அங்கே என்ன நடக்கிறது?’ என்று அறிந்து கொண்டு துக்கித்தான். ‘எப்போதோ மரணித்த பெற்றோரை நினைவில் இருத்தி கர்மா செய்கிறான் இவன். உயிரோடிருக்கும் போதே தந்தையை இவ்விதம் சிறை பிடித்து அடைத்துள்ளான் என் புதல்வன்’ என்று துக்கப்பட்டானாம்.

அத்தகைய கீழ் நிலை எந்த இந்தியனுக்கும் வரக் கூடாதென்று விரும்புவோம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version