- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?

ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?

samavedam pic e1528682651403

கேள்வி:- ஐயப்ப பூஜை பற்றி புராணங்களில் இல்லை என்றும், அது நம் சனாதன தர்ம வழி முறையைச் சேர்ந்தது அல்லவென்றும் சில ஹிந்துக்களே கூறுகின்றனரே! உண்மையில் அதற்கு புராண ஆதாரம் இல்லையா? ‘சிவ கேசவ சுதன்’ என்ற கதைக்கு ஆதாரம் என்ன?

பதில்:- தெய்வங்கள் மந்திர சொரூபம் கொண்டவர்கள். எத்தனை மந்திரங்கள் உள்ளனவோ அத்தனை தெய்வங்கள் உள்ளனர். மந்திர சாஸ்திரத்தோடு தொடர்புடைய சில புராணங்கள் உள்ளன. அவற்றின் ஆதாரத்தோடு பூஜிக்கப்படும் தெய்வங்கள் நிறைய உள்ளனர். அது போன்று ஆராதிக்கப்படும் தெய்வமே சாஸ்தா.

‘சாஸ்தா’ என்றால் ‘உத்தரவிடுபவர்’ என்று பொருள். அதாவது ‘குரு ஸ்தானம்’. ‘குரு’ என்ற வணங்குதலுக்குரிய பாவனையையே மலயாள மொழியில் ‘ஐயப்பா’ என்று அழைக்கின்றனர். வேதாந்த வித்யையாக உருவெடுத்தவர் சாஸ்தா.

புராணங்கள் சிலவற்றில் ஐயப்பா பற்றிய குறிப்புகள் ஸ்பஷ்டமாக உள்ளன. முக்கியமாக பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

புனர் க்ருஹீத்வா தாமீஸ: காமம் காம வசீக்ருத:
ஆஸ்லிஷ்யத திவேகேன தத்வீர்யம் ப்ரச்யுதம் ததா
ததஸ்ஸ முதிதோ தேவோ மஹா சாஸ்தா மஹா பல:
அனேக கோடி தைத்யேந்த்ர கர்வ நிர்வாபண க்ஷம:

மோகினி ரூபமெடுத்த விஷ்ணு, சாட்சாத் பராசக்தியின் சொரூபமே. விஷ்ணு எடுத்த ‘சிவனை மோகிக்கச் செய்யும்’ ரூபத்தைப் பார்த்து மோகத்தில் ஆழ்ந்தார் சிவன். அவர்கள் இருவரின் தனயன் மஹா சாஸ்தா. புராணங்களில் ஓரிடத்தில் கூறப்படுவதற்கு வேறோரிடத்தில் விளக்கம் கிடைக்கும். ஏதோ சில நூல்களை மட்டுமே பார்த்துவிட்டு மற்றவை புராணங்கள் அல்ல என்று கூறக் கூடாது. அவரவர் பிரமாணங்கள் அவரவருக்கு இருக்கும். கதை வடிவம் ஒரு பக்கம் இருக்க, விக்ரக ஸ்வரூபம், ஆராதனை, ஆகம விதானங்களைப் பரிசீலித்தால் தத்துவம் புரிபடும்.

ஹரிஹர அத்வைதத்திற்கும், பிரம்ம வித்யைக்கும் குறியீடு ஐயப்பன். ஆகமங்களில் ஹரிஹர மூர்த்தியின் ஆராதனை உள்ளது. இந்த ஏக தத்துவ உபாசனை, பக்திக்கும் தர்மத்திற்கும் உற்சாகமூட்டக் கூடியது. இது போன்ற சிறந்த சுவாமியையும் சிறந்த உபாசனையையும் இல்லை என்று கூறுவதால் கிடைக்கும் பலன் என்ன? சிவ கேசவ தத்துவங்களின் கருத்தொற்றுமையை அங்கீகரிக்க இஷ்டமின்றி, வேற்றுமை வாதம் புரிபவர்கள் நம் சனாதன தர்மத்தில் நுழைக்கும் பிரிவினைகளின் ஒரு பாகமே ஐயப்பனை இல்லை என்று விமர்சிப்பது.

இந்த பரந்த பாரத தேசத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக தெய்வ சக்தி பல்வேறு பாவனைகளொடு ஆகம விதி முறைகளோடு ஆராதனை செய்யப்படுகிறது. அனைத்தையும் சனாதன தர்மத்தின் பாகமாக அறியும் போதுதான் முழுமையான ஹிந்துக்களின் ஒற்றுமை சாத்தியமாகும்.

***

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version