- Ads -
Home ஆன்மிகம் தற்பெருமை தொனிக்க பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில்…

தற்பெருமை தொனிக்க பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில்…

“இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள். பல லக்ஷதீபம் போட்டிருக்காள்….”-பெரியவா

(ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன். லட்சதீபம் போட்டிருக்கேன்…..” என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் சொன்ன பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில் மேலே)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஓர் ஏழைப் பாட்டி.பெரியவாளிடம் அபார பக்தி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தாள். மடி ஆசாரம் பார்ப்பாள். ஏராளமான பக்தி.

தினமும் பெரியவர் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள். கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.

இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி. இன்னொரு புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை.

ஒரு பக்தர் அரிசிக் குறுணையும்,வெல்லமும் பெரியவாளிடம் சமர்ப்பிந்திருந்தார்.அவற்றை நல்லபடியாக விநியோகம் செய்ய வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.

“காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா. அரை ஆழாக்கு வீதம் போடு…” என்றார்கள்.

அந்தப் பாட்டியும் பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து, பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும், வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.

அந்த வேலை முடிந்ததும் பெரியவா அந்தப் பாட்டியைக் கூப்பிட்டார்கள்.

பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது. ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.

“திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய், எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப் போடு.ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்” என்றார்கள்.

பாட்டிக்குப் பரம சந்தோஷம். பரம சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களுக்குச் சென்று பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள் .சில நாட்களில் இந்தக் கைங்கரியம் நிறைவு பெற்றது.அந்தச் செய்தியையும் தெரிவித்தாள் பாட்டி.

பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப்பின், ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார். பெரிய மனுஷத் தோரணை, அகங்காரம்.

“ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன். லட்சதீபம் போட்டிருக்கேன்…..” என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது. தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக் கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.

வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா சந்தோஷப் பட்டிருப்பார்கள். ஆனால்,அந்தப் பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.

பெரியவா சொன்னார்கள்.

“இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள். பல லக்ஷதீபம் போட்டிருக்காள்….”

ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது. ‘யார் அந்தப் பாட்டி…அவ்வளவு பெரிய பணாக்காரி?’ என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.

“இவள்தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம் செய்தவள்…”

அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக்கொண்டு வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர் அயர்ந்து போனார். பாட்டியின் நெற்றியிலிருந்த வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு, அவளுடைய இதய சுத்தத்தை விளக்கினாற்போலிருந்தது.

பெரியவா சொன்னார்கள்.

“ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார். பிரும்மா முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.

“நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய். ஆனால், இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு (எறும்புகளுக்கு) ஆகாரம் போட்டிருக்கிறாள்.

“ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம் கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் – திரி போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப் பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள். பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி,திரி போட்டு தன் கையாலேயே ஏற்றியிருக்கிறாள்….”

கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.

பெரியவாளிடம் பவ்யமாகவும், அகங்காரமில்லாமலும் பேசவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். பின்னால் பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து இடம் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து,பல சமாசாரங்கள் பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

அடக்கம் கற்றுக்கொண்ட அவர், ஆனந்தமாகத் திரும்பிச் சென்றார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version