- Ads -
Home ஆன்மிகம் மகா பெரியவர் மகிமை “உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”

“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”

18891883 462802840739460 3647273357723667269 o

“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”
(பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்)

(“என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப்
பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம்
தினம் தியானம் பண்ணற அம்பாள் காமாக்ஷியோட கடாட்சம்
இதெல்லாம்தான் உனக்குப் பார்வையை கிடைக்கப்
பண்ணியிருக்கு!”-பெரியவா)

கட்டுரையாளர்-வைத்யநாதன்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்-புதன் வெளியான
(14-06-2017 தேதியிட்ட-இதழ்)

ஒரு சமயம் கேரளாவுல இருந்து ஒரு பெண் தன்
ஆத்துக்காரரோட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்தா.

அவ கர்ப்பமா இருந்தபோது, தடுக்கி விழுந்ததுல தலையில
அடிபட்டுடுத்தாம். நல்ல வேளையா கருவுல இருந்த
சிசுவுக்கு எந்த ஆபத்தும் வரலை.ஆனா, அதுலேர்ந்து
அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பு அவளுக்கு
வரத்தொடங்கிடுத்தாம். போதாக்குறைக்கு கண்ணுலயும்
பார்வை மங்கத்தொடங்கி கடைசீல முழுசா
பறிபோயிடுத்தாம்.குழந்தை பிறந்ததும் பிரச்னை தீர்ந்துட
வாய்ப்பு இருக்குன்னு சிலர் சொல்லி இருக்கா.

ஆனா,உரிய காலத்துல குழந்தை பிறந்தும் அவளுக்குப்
பார்வை திரும்பலை. ஏதாவது தெய்வக் குத்தமா
இருக்குமோன்னு, அவா குடும்பத்துக்குப் பரிச்சயமான
ஒருத்தர்கிட்டே பிரஸ்னம் பார்க்கலாம்னு சொல்லி,
நம்பூதிரி ஒருத்தரை அழைச்சுண்டு வந்திருக்கா.

பெண்ணோட ஜாதகத்தை அலசி ஆராய்ஞ்ச நம்பூதிரி,
“கவலைப்படாதீங்கோ, உங்களுக்கு நிச்சயமா கண்பார்வை
கிடைச்சுடும்.அதுக்கு முன்னால, நீங்க க்ஷேத்திராடனம்
செய்யணும். குருவாயூரில் துவங்கி,கும்பகோணம்,
திருவிடைமருதூர்னு புண்ணியத்தலங்களுக்கெல்லாம்
போய் அங்கே இருக்கிற தீர்த்தங்கள்ல ஸ்நானம் பண்ணிட்டு
சுவாமியை வேண்டிக்கோங்கோ.அதிசயமான முறையில
உங்களுக்குப் பார்வை கிடைக்கும்!” அப்படின்னு சொன்னாராம்.

அவர் சொன்னபடியே செய்யலாம்னுட்டு,திருத்தல யாத்திரை
புறப்பட்ட அந்தத் தம்பதி, பல கோயில்களுக்குப் போயிட்டு,
அந்த வரிசையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் போய்
சுவாமி கும்பிட்டிருக்கா. குருக்கள் அர்ச்சனை பண்ணிட்டு,
தீபாராதனை காட்டிட்டு வந்தாராம். ஆரத்தியை தட்டுத்
தடுமாறி தொட்டு கண்ணுல ஒத்திண்டவ, நூறு ரூபாயை
தட்சணையா வைச்சாளாம்.

அந்தக்காலத்துல அது ரொம்பப் பெரிய தொகைங்கறதால,
குருக்களுக்கு ஆச்சரியம்! அதே சமயம் பார்வை தெரியாததால,
தெரியாம வைச்சுட்டாளோன்னு சந்தேகப்பட்டவர், “அம்மா…
இது பத்து ரூபாய் இல்லை. நூறு ரூபாய் நோட்டு!”ன்னு
சொல்லியிருக்கார்.

“பரவாயில்லை…அதை நீங்களே எடுத்துக்கோங்கோ!
உங்களுக்கு இது கிடைக்கணும்கறது பகவானோட விருப்பம்!”
என்று சொன்னாளாம். நெகிழ்ந்துபோன அந்த குருக்கள்,
“நீங்க மகா பெரியவாளைப் பார்த்ததில்லையா?” அப்படின்னு
கேட்டாராம்.

அவர் யாரைச் சொல்றார்னு புரியாத அந்தக் கேரள பெண்மணி,
“நீங்க யாரைச் சொல்றேள்னு தெரியலையே!ன்னு குருக்கள்
கிட்டேயே விசாரிச்சிரிக்கா.

“காஞ்சிபுரத்துல ஸ்ரீசங்கர மடத்துல இருக்காரே,அவர்தான்
மகாபெரியவர்.அவரை தரிசனம் பண்ணுங்கோ..”அப்படின்னு
அறிவுறுத்தியிருக்கார் குருக்கள்.

அப்போதான் முதன் முதலா காஞ்சிமகானைப் பத்தி
கேள்விப்பட்டாளாம், அந்த கேரளத் தம்பதி.இருந்தாலும்
அவரை உடனே தரிசிக்கணும்னு உள்ளுணர்வு தோணினதால,
உடனே புறப்பட்டு மடத்துக்கு வந்துட்டா.

கொண்டு வந்திருந்த பழங்களை பெரியவாளுக்குப் பக்கத்துல
வைச்சுட்டு, தன்னோட நிலைமையை பெரியவாகிட்டே
விவரிச்சா. வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள்
சொன்னதுனாலதான், மகாபெரியவாளைப்பத்தி
தெரிஞ்சுண்டதாகவும்,உடனே தரிசிக்கப் புறப்பட்டு
வந்துட்டதாகவும் கண்கலங்கச்சொன்னா.

எல்லாத்தையும் பொறுமையா கேட்டுண்ட ஆசார்யா,
அவளோட புருஷனைக் கூப்பிட்டார்.அவரிடம்
“நீ உன்னோட பார்யாள்கிட்டே,என்னைத் தெரியறதான்னு
கேளு!” அப்படின்னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த டார்ச்
லைட்டை எடுத்து, தன்னோட முகத்துல வெளிச்சம்
படறமாதிரி அடிச்சுண்டார்.

“உனக்கு இந்த ஆசார்யாளை தெரி..!” அவ புருஷன் கேட்டு
முடிக்கறதுக்கு முன்னாலயே,”குருக்கள் சொன்ன சந்நியாஸி
இதோ இருக்காரே.என் கண்ணுக்கு நன்னா தெரியறார்!”
அப்படின்னு குரல்ல பரவசம் தெறிக்க,உரக்கச் சொன்னார்.

ஆமாம்.ஆச்சர்யமான முறையில் பார்வை வரும்னு நம்பூதிரி
சொன்ன மாதிரியே, காஞ்சி முனிவரோட சந்நிதானத்தில்
அந்த கேரளப் பெண்ணுக்குப் பார்வை கிடைச்சுடுத்து.

தெய்வங்கள் மேல நம்பிக்கை வைச்சு கோயில்கோயிலா
போன அவாளுக்கு வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள்
சொன்னதைக் கேட்டதும் மகாபெரியவா மேல் ஏற்பட்ட
அதீத நம்பிக்கை வீண் போகலை.

பார்வை வந்ததும் அந்தப் பெண் பரம சந்தோஷமா
மகாபெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு,”உங்களாலதான்
இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”னு உருக்கமா
சொன்னதுக்கு , மகாபெரியவா என்ன சொன்னார் தெரியுமா?
“என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப்
பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம்
தினம் தியானம் பண்ணற அம்பாள் காமாக்ஷியோட கடாட்சம்
இதெல்லாம்தான் உனக்குப் பார்வையை கிடைக்கப்
பண்ணியிருக்கு!” சொன்ன மகா பெரியவாளை மறுபடியும்
நமஸ்காரம் செஞ்சா அந்தத் தம்பதி.

குங்குமப் பிரசாதம் குடுத்து,”ஒரு குறையும் இல்லாம
க்ஷேமமா இருங்கோன்னு ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா,

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version