- Ads -
Home ஆன்மிகம் மகா பெரியவர் மகிமை “சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.”

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.”

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.” (பெரியவாளின் சிற்பக்கலை நுட்பம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் 1234201_315112848661397_4724600860700186658_n பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில் கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்” என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில் ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே நுழைந்தார்கள். கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை நடந்து வந்தது. “இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது” என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’ என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார். “இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள். ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும் இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித் தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள். ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார். “சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள். தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை. “மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும் சத்தத்தைக் கவனி” என்றார்கள். “கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச் செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி. “மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப் பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி- மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும் வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும். அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான் அடிப்பாகமாகக் கொள்வார்கள். “சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய். உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான் தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள். ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின் காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான் எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள் பெரியவர்கள். எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில் சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம் நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற முடிவுக்கு வருவார்கள். தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version