- Ads -
Home ஆன்மிகம் மகா பெரியவர் மகிமை ” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!’-மகா பெரியவா

” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!’-மகா பெரியவா

17309425 418371555182589 581110579721556446 n 1

” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு
வந்துட்டயாக்கும்!’-மகா பெரியவா

(நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு,
பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா,
என்ன?!)

”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
(இவர் பிரதோஷம் மாமா உறவினர்)
தொகுப்பு-சாருகேசி
‘நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
புத்தகம்-காமகோடி பெரியவா

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று,
அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு
சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.

”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன்
திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய
இடமாதலால்,பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.

அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது
முகம்காட்டிக்கொடுத்தது.இதைமகாபெரியவாளும்ககவனித்திருக்கவேண்டும்.
தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி
அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும்
இருந்தார்.

பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ”எனக்குத் தீராத வயித்து வலி
சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத
வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு
பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி,
அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். ‘காஞ்சிப் பெரியவரை உடனே போய்த்
தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார்.
அதான், இங்கே வந்தோம்” என்றார் குரல் தழுதழுக்க.

”ஓஹோ… அப்படியா சொன்னார்..?” என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார்
பெரியவா.

அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை
பிறந்ததுபோலும்! தொடர்ந்து… ”எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை
விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம்
கிடைக்கலேன்னா… இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா… தினம்
தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என்
உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்” என்று
கதறினார்.

பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க… நெல்லை அன்பர் தனது
வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ”இப்ப
என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!” என்று வியப்பும் கண்ணீருமாகச்
சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக்
கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே
உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார்
எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு
தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.

பெரியவாளுக்கு பிக்ஷை தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான்.
பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பிக்ஷையில் ஏதேனும் தவறு இழைத்து
விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான
ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத்
தோன்றியது.

மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி
யவாளுக்கு பிக்ஷை செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச்
செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ”எனக்கு என்னவோ,
எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா
உத்தரவு தரணும்!” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.

உடனே, ”’என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு
அடிக்கடி சொல்வியே பாலு… இப்ப ஏன் போகணும்கறே?” என்று குறும்புச்
சிரிப்புடன் கேட்டார் பெரியவா.

எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ”இல்லே
பெரியவா… சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை
தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்…” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார்
பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.

வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என
வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள்.
பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு,
வெள்ளியில் ‘வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். ‘வயிறு’ கிடைக்கவே இல்லை.

உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின்
அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.

”என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல
கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப்
பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க.
நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!” என்று
சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.

பாலுவுக்கு ஒரே குழப்பம். ‘யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் ‘வயிறு’ வாங்க
அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என
வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.

‘பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல,
கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே… பாலு சிறு வயதில் படித்த
மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது.
சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக
வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார்
அந்த அதிகாரி.

பிறகென்ன… சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப்
பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார்
பாலு.

மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின்
வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி
குடிகொண்டு இருந்தது.

”பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்”
எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ”சரிதான்… என் வயித்து
வலியைக் கொண்டு போய், அந்தவைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!”
என்றார் புன்னகைத்தபடி!

சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட
மகா பெரியவாளுக்கு, பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும்
தெரியாமல் போய்விடுமா, என்ன?!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version