- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: தூது செல்லும் பொருட்கள்

திருப்புகழ் கதைகள்: தூது செல்லும் பொருட்கள்

பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல்

thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் பகுதி 307
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தருவர் இவர் – சுவாமி மலை
தூது செல்லும் பொருட்கள்

     இரத்தினச் சுருக்கம் என்னும் நூல் தூது விடுத்தற்குரிய பொருள்களாகப் பத்தினைக் குறிப்பிடுகின்றது. அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப் புள், தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் இவற்றுள் ஒன்றைப் பொருளாகக் கொண்டு, புலவர்கள் தம் புலமை கலந்தோன்று மாறும் இலக்கிய நயம் பொதுளுமாறும் தூதிலக்கியத்தை ஓதுகின்றனர்.

இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை

பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்

பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈ ரைந்துமே

தூதுரைத்து வாங்கும் தொடை.

என்னும் பழம்பாட்டால் அவ்வுண்மை புலனாகிறது.

சங்க காலப் பாடல்களில் தூது

     கடைச் சங்கத் தொகை நூல்களுள் தலைமை சான்ற புறநானூற்றுள் பிசிராந்தையார் என்னும் பெருந்தமிழ்ப் புலவர் தம் ஆருயிர் நண்பனாகிய கோப்பெருஞ் சோழனுக்கு அன்னச்சேவலை அருந்தூது விடுத்ததாக நறுந்தமிழ்ப் பாடலொன்று உள்ளது. பிசிராங்தையார் தம்பால் சோழன் கொண்டிருந்த அன்பினையும் நன்மதிப்பையும் அப் பாட்டால் இனிது விளக்குகின்றார்.

“அன்னச்சேவலே! போர் வென்றி மிக்க புரவலனாகிய சோழன் தன்னாட்டைத் தலையளி செய்யும் நன்னராளன். நீ தென்றிசைக் குமரித்துறையிலுள்ள அயிரை மீன்களை அருந்தி வடதிசைக்கண் உள்ள இமயம் நோக்கிப் பெயர்குவையாயின் இரண்டற்கும் இடைப்பட்ட சோழநாட்டுக் கோழியூரைக் குறுகுவாய். அந்நகரின் நடுவண் அமைந்த நெடுநிலை மாடத்தே நின் காதற் பேடாகிய இள வன்னத்துடன் சென்று தங்குவாய். நின் வரவினை வாயிற் காவலர்க்கு உணர்த்தாதே தடையின்றி மன்னவன் கோயிலுட் புகுவாய். எம் நண்பனாகிய கோப்பெருஞ் சோழன் கேட்குமாறு ‘யாம் பிசிராந்தையின் அடிக்கீழ் இருப்போம்’ என்று உரைப்பாய். அது கேட்ட வளவில் சோழன் மகிழ்வுற்று, நின் பேடை யன்னம் பூணுமாறு நினக்குப் பொன்னும் மணியுமாய அணிகலன்களை யளிப்பான்” எனக் கூறி இன்புற்றார்,

அன்னச் சேவல் அன்னச் சேவல்

ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்

நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக்

கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்

மையன் மாலையாம் கையறு பினையக்

குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி

வடமலைப் பெயர்குவை யாயின் இடையது

சோழநன் னாட்டுப் படினே கோழி

உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ

வாயில் விடாது கோயில் புக்கெம்

பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்

ஆந்தை அடியுறை எனினே மாண்டநின்

இன்புறு பேடை யணியத்தன்

நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

(புறநானூறு 67)

என்பது அப்புலவரின் தூதுப் பாடலாகும்.

     சத்தி முற்றம் என்னும் ஊரில் தோன்றிய புலமைச்சான்றார் ஒருவர், பாண்டியனைப் பாடித் தம் வறுமை நோயைக் களைந்துகொள்ளும் பொருட்டு மதுரைமாநகர் புகுந்தார். அவண் பாண்டியனைக் காணவியலாது வருந்தி ஒருபால் ஒதுங்கியிருந்தார். அதுபோழ்து ஒருநாள் மாலை வேளையில் வானில் வடதிசை நோக்கிப் பறந்து சென்ற நாரையினத்தை விளித்துப் பாடலுற்றார்.

நாராய் ! நாராய்! செங்கால் நாராய் !

பழம் படு பனயின் கிழங்குபிளந் தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!

என்று நாரையை விளித்த நற்றமிழ்ப் புலவர், “நாரையே! நீயும் நின் பேடையும் தென்திசைக் குமரியாடி வடதிசை இமயத்துக்கு ஏகுவீராயின் எம் ஊராகிய சத்திமுற்றத்து வாவியுள் சிறுபொழுது தங்குமின் அதற்கு அணித்தாக அமைந்துள்ளது என் குடில்; அது மழையால் நனைந்த சுவர்களே யுடையது: சிதைந்துபோன கூரையையுடையது; ஆங்கே கனை குரற் பல்லியின் நல்ல சொல்லை எதிர்நோக்கிப் பாடு பார்த்திருப்பாள் என் மனையாள்; அன்னவளைக் கண்டு, மாறன் மதுரையில் ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக், காலதுகொண்டு மேலது தழுவிப், பேழையுள்ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல் நயமிக்கதொன்றாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version