- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம்!

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம்!

‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர்

thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 309
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தருவர் இவர் – சுவாமி மலை
தண்டகம் 1

     தண்டகம் என்பது என்ற ஒருவகை சமஸ்கிருதச் செய்யுள் நூல். சியாமளா தண்டகம் என்று ஒரு நூலுண்டு. அதனை இயற்றியவர் காளிதாசர். தண்டகம் என்பது சமஸ்கிருத உரைநடை கவிதை எனச் சொல்லப்படுகிறது. இது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் காணப்படுகிறது. தண்டகத்தின் ஸ்தோத்திரங்கள் 26 எழுத்துக்களைத் தாண்டி, உரைநடையை ஒத்திருக்கின்றன. சொற்கள் மற்றும் உள்ளடக்கம் நிறைந்ததாக இருந்தாலும், பொதுவான ஸ்தோத்திரங்களுடன் ஒப்பிடும்போது, ​​சமஸ்கிருத இலக்கியங்களில் தண்டகங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் மிகவும் சிக்கலான அமைப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம். பெரும்பாலான தண்டகங்கள் ஒரு இசைக் குறியீடாக அமைக்கப்படலாம் மற்றும் பொதுவாக அவற்றை மந்திரங்களின் வடிவத்தில் உச்சரிப்பதற்குப் பதிலாக ராகமாலிகைகளாகப் பாடப்படுகின்றன.

     காளிதாசரால் இயற்றப்பட்ட சியாமளா தண்டகம் ஒரு மிகவும் பிரபலமான தண்டகம், இந்த ஸ்தோத்திரம் சாராதா தேவியை அதாவது சரஸ்வதி தேவையைப் புகழ்கிறது. இந்த தண்டகம் பிரபல பாடகி திருமதி டி.கே. பட்டம்மாள், திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி ஆகியவர்களால் பாடப்பட்டு பிரபலாமானது.

     கருட தண்டகம் என மற்றொரு தண்டகம் மிகவும் பிரபலமானது. இது ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவர்களால் இயற்றப்பட்டது.

நம: பன்னக³னத்³தாய வைகுண்ட²வஶவர்தினே ।

ஶ்ருதிஸிந்து ஸுதோத்பாத³மந்த³ராய க³ருத்மதே ॥

என்ற ஸ்லோகம் கருட தண்டகத்தின் முக்கியமான ஸ்லோகம். கருட தண்டகம் முழுதும் சொல்ல முடியாதவர்கள் இதை மட்டுமாவது சொல்லலாம்.

     ஸ்வாமி தேசிகன் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருந்த போது, ஒரு பாம்பாட்டி, நான் பாம்பை உம்மேல் விடுகிறேன். உமக்குத் திறமையிருந்தால் கருடன் மூலம் உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்” என்று சவால் விட்டான். அதைத் தொடர்ந்து அவரை பயமுறுத்தும் விதமாக உயிரிழந்த ஒரு பாம்பை அவர் மீது போட்டான்.

     ஸ்வாமி தேசிகன் கருட மந்திரத்தை உச்சரித்தார். எங்கிருந்தோ ஒரு கருடன், ஆகாயத்தில் பறந்து வந்து, பாம்பாட்டியிடமிருந்த உயிருள்ள வேறு ஒரு பாம்பைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டது. பாம்பாட்டி தன் அறியாமையையும், தான் ஸ்வாமியை தரக்குறைவாக நினைத்ததையும் உணர்ந்து அவரது காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோரினான்.

     என் வயிற்றுப் பிழைப்புக்கே இந்தப் பாம்புகள்தான் காரணம். தயவுசெய்து என் பாம்புக்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள்” என்று கெஞ்சினான். கருணை உள்ளம் கொண்ட அந்த மஹான், ‘கருட தண்டகம்’ என்ற சுலோகத்தை இயற்றினார். கருடன், கொத்திச் சென்ற பாம்பை மீண்டும் பாம்பாட்டியிடமே உயிரோடு கீழே போட்டு விட்டுப் பறந்து சென்றது.

     கம்பீர நடையுடன் கூடிய,‘கருட தண்டகம்’சொன்னால், பாம்பு நம்மை அண்டவே அண்டாது. தவிர, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் நெருங்காது. ஏழு சுலோகங்களைக் கொண்டது கருட தண்டகம். முதல் சுலோகம், ‘வைனதேயன்’ (வினதை புத்ரன்) முழுதும் பாம்பு உருக் கொண்டவன். ப்ரஹ்ம வித்தைக்கு அதிபதி என்ற விளக்கம், 2 முதல் 5 வரை வசன கவிதை நடை. தண்டகத்தின் வருணனை ஆறாம் சுலோகத்தில் உள்ளது. இறுதியில் பலசுருதி அமைந்துள்ளது. (பலஸ்ருதி என்றால் சுலோகம் சொல்வதன் பலன்.)

     ‘கருடமகில வேத நீடாதிரூடம்’ என்று சொல்வதன் மூலம், சொல்பவர், கேட்பவர் மனதை ஈர்க்கும். இறுதி வரிகளில் ‘கருடத்வஜ தோஷாய கீதோ கருடதண்டக’ கருடனை வாகனமாகக் கொண்டுள்ள எம்பெருமான் தனக்கு கருடனைக் கொடியாக ஏற்றுள்ளதையும் கண்டு களிக்கிறார். கருடாழ்வாருக்கு, ‘பெரிய திருவடி’ என்ற பெயரும் உண்டு. கருட வாகனத்தில் பெருமாளை சேவித்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். விஷ்ணு கோயில்களில் கருட சேவை முக்கிய அங்கம் வகிக்கிறது. சில இடங்களில் 11, 12, 15 கருட சேவை ஒரே சமயத்தில் நடைபெறும். தஞ்சையில் 23 கருட சேவை சிறப்பு வாய்ந்தது.

     நாச்சியார்கோயில் கல் கருடன் மீது ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாய் அலங்கரிக்கின்றன. ‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர் அணிந்திருக்கும் நாகா பரணங்களே சாட்சி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version