- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம் 2

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம் 2

சிந்து எனப்படும் இசைப்பாவகையையும், கலித்துறைகள் பற்றியும், ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டான ஏசல் பற்றியும் குறிப்பிடுகிறார்.

thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 310
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தருவர் இவர் – சுவாமி மலை
தண்டகம் 2

     சியாமளா தண்டகம், கருட தண்டகம் தவிர வேலம்பூர் ஸ்ரீ வரத விஷ்ணு கவி (கேதண்டப்பட்டி ஆண்டவன்) எழுதியுள்ள கோமள தண்டகம் என்று ஒரு பிரபலமான தண்டகம் உள்ளது. இது கும்பகோணம் திவ்ய தேசத்தில் உள்ள கோமளவல்லி நாச்சியார் மீது இயற்றப்பட்ட அழகிய தண்டகம்.

     சில பிரபலமான தெலுங்கு தண்டகங்கள் – (1) மல்லிகார்ஜுன பண்டிதர் எழுதிய மௌனி தண்டகம், (2) போதனா எழுதிய போகினி தண்டகம், (3) தல்லாபக சீனத்திருமலாச்சார்யுலு எழுதிய அஸ்தபாஷ தண்டகம், (4) நந்தி திம்மனை எழுதிய திரிஸ்தலி தண்டகம், (5) தல்லாபக பெடத்திருமலாச்சார்யுலு எழுதிய ஸ்ருங்கார தண்டகம், (6) கஞ்சர்ல கோபண்ணா எழுதிய ராம தண்டகம், (7) தேகுமல்ல ரங்கசாயி எழுதிய கிருஷ்ண தண்டகம், (8) கவதூரி ராகவையா எழுதிய ராஜகோபால தண்டகம், (9) எனுகு லக்ஷ்மண்ணா எழுதிய நிரிசிம்ம தண்டகம். ஸ்ரீபாதராஜா எழுதிய புகழ்பெற்ற கன்னட தண்டகத்தின் பெயர் லக்ஷ்மி நரசிம்ம பிராதுர்பவ தண்டகம் ஆகும்.

     தமிழில் தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுள் யாப்பு ஆகும். தாண்டக யாப்பினால் இயற்றப்பட்டவை தாண்டகம் என்னும் இலக்கிய வகையாகப் பெயர் பெறுகின்றன. இதனை முறையே யாப்பருங்கல விருத்தியாலும் (95-ம் நூற்பா உரை) வீரசோழியத்தாலும் (129) அறிய முடிகின்றது. இவ்வகையான நூல்களையும் பக்தி இலக்கியம்தான் நமக்கு முதலில் அறிமுகம் செய்கின்றது. திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை முழுவதும் இத்தாண்டக யாப்பு வழியாக அமைந்துள்ளது. 981 பாடல்கள் கொண்ட அவரது 99 பதிகங்கள் திருத்தாண்டகம் என்றே வழங்குகின்றன. திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாடிய திருத்தாண்டகங்கள் பாவின் குறுமை, நெடுமை ஆகிய அளவு கருதி முறையே திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் எனப்பெயர் பெறுகின்றன.

     இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றி வந்தது என்றும் தமிழ் யாப்பே என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. வடமொழியில் ‘தண்டகம்’ என வழங்கும் யாப்பு ஒன்றுண்டு என்பதை முன்னரே பார்த்தோம். இஃது அளவொத்த நான்கடிகளைக் கொண்டிருக்கும் என்றும், பொது சகாப்தம் 2 அல்லது 3ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது – என பிங்கல சந்தம் என்ற நூல் குறிப்பிடுகின்றது. இவ்வகையான யாப்பில் அடி ஒன்றுக்கு 27 முதல் 999 வரை எழுத்துகள் இடம் பெறும். இத்தண்டகமே தமிழில் தாண்டகம் ஆயிற்று என்பர்.

     வடமொழித் தாண்டகத்தையே தமிழுக்குரிய தாண்டகமாக்கி வீரசோழியமும் யாப்பருங்கல விருத்தியும் குறிப்பிடுகின்றன. இங்கு ஒரு வேறுபாடு எண்ணத்தகும். வீரசோழியம் தண்டகம் என்றே குறிக்க யாப்பருங்கல விருத்தி மட்டும் தாண்டகம் எனக் கூறுகிறது. வடமொழி யாப்புப்படி விருத்தம் என்னும் பொதுப்பெயர், அளவொத்த

நான்கடியையும் அனைத்துச் செய்யுளையும் குறிக்கும். அடிகளிற் பயிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் விருத்தங்களைச் சந்தம் எனவும், தண்டகம் எனவும் பிரிப்பர்.

     ஓரெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தளவும் உடைய அடிகளால் ஆகிய செய்யுள் சந்த விருத்தமாம். இருபத்தேழு எழுத்துகளுக்கு மேல்வரின் அது தண்டக விருத்தமாகும். ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் சிற்சில அடிகள் 27 எழுத்துகளும் அவற்றின்மிக்கு 28, 29 எழுத்துகளும் பெற்று வருகின்றன. முப்பது பாசுரத்திற்கும் மொத்தம் உள்ள நூற்றிருபது அடிகளில் இவ்வாறு தாண்டக அடிகளாக வருவன 24 அடிகள் மட்டுமே. எனினும் ஒரு பாசுரம் கூட முழுவதும் தாண்டக அடிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

     மேலும் ‘தருவர் இருவர்’ எனத் தொடங்கும் இந்தத் திருப்பிகழில் அருணகிரிநாதர் சரச கவிமாலை என வழங்கப்படும் இன்பரசம் பொருந்திய கவிமாலை (மாலை என்பது நூறு பாடல்கள் கொண்டது) பற்றியும், சிந்து எனப்படும் இசைப்பாவகையையும், கலித்துறைகள் பற்றியும், ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டான ஏசல் பற்றியும் குறிப்பிடுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version