- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்புகழ் கதைகள்: ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராஹப் பெருமாள்!

திருப்புகழ் கதைகள்: ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராஹப் பெருமாள்!

உனக்கு ஏற்ற சம பலமுள்ள வீரர் மகாவிஷ்னூ மட்டுமே” என வருணன் சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம்

thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் பாகம் 320
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வாரம் உற்ற – சுவாமி மலை
ஸ்ரீ முஷ்ணம் ஆதி வராகப் பெருமாள்

     “உனக்கு ஏற்ற சம பலமுள்ள வீரர் மகாவிஷ்னூ மட்டுமே” என வருணன் சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம் ஸ்ரீஹரியை தேடிப் புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதர் தடுத்தார். “இரண்யாட்சா, உன்னிடம் கொண்ட அச்சத்தால் தேவர்கள் எங்கோ ஓடி ஒளிந்து விட்டார்களே, நீ இப்போது எங்கே போகிறாய்?” எனக் கேட்டார். “நான் ஹரியைத் தேடி வைகுண்டம் போகிறேன். அங்கே போனால் தான் தினவு எடுக்கும் என் தோள்களுக்குத் தகுந்த தீனி கிடைக்கும் என நினைக்கிறேன்” என்றான்.

     “நல்ல காரியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஹரி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறார்” என நாரதர் அவனிடம் சொன்னார். “அப்படியா? இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஹிரண்யாட்சன் பாதாள லோகத்திற்குள் புகுந்தான் அங்கே ஹரிபகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாட்சன் சிரித்தான். பன்றி வடிவில் இருந்த பகவானை கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார். இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொண்டனர். யுத்தத்தை நேரில் காண பாதாள லோகத்திற்கு தேவர்களுடன், பிரம்மா வந்து சேர்ந்தார். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் கதையை எடுத்து ஹரியை நோக்கி வீசினான். அதை ஹரிபகவான் தன் சக்கராயுதத்தால் தடுத்தார்.

     பின் ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. ஸ்ரீஹரி தன் சுதர்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தார். பிரம்மா அந்நேரம் ஹரியைப் பார்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினார். ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் ஹரியைப் போற்றி துதித்துப் பாடினர்.

     பின்னர் வராக மூர்த்தி பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக் கொணர்ந்து நிலை நிறுத்தினார். ஹிரண்யாட்சனுடன் யுத்தம் செய்ததால் அவர் உடல் முழுவதும் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரம்மாதியர் அப்பொழுதும் இடைவிடாது வேத தோத்திரங்கள் செய்தனர். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமாகி அந்தர்த்தானம் ஆனார். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து வாழ்வாயாக! என்று அனுக்கிரகித்தார். பின்னர் சுவாயம்புமனுவும், சத்ரூபாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து பிரியவரதர், உத்தானபாதர் என இரண்டு ஆண் குழந்தைகளும், ஆஹுதி, தேவஹுதி, ப்ரசூதி என்ற மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களுமே ஆதிமனிதர்கள் ஆவர்.

     இந்த வராக அவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தை பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும். கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்தில் ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.  தினமும் காலை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். மக்கட்பேறு வேண்டுபவர்கள், இங்குள்ள அரச மரத்தை வலம் வந்து, ஸ்ரீசந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்துகொள்வதினால் பயன் பெறுவார்கள்.   நெய் தீபம் ஏற்றுவதினால் ஐஸ்வர்யம் உண்டாகும், குடும்பம் தழைக்கும், பெண்களுக்கு திருமணம் நடக்கும். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்ட வைணவ தலங்களில் இதுவும் ஒன்று (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை).

     இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் மண்டபம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 17ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேர் வடிவ மண்டபத்தை குதிரைகளில் போர் வீரர்கள் இழுத்துச் செல்ல, பின்னால் யானைகள் தொடர்ந்து வருமாறு  வடிவமைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது.

     இக்கோவிலின் பெருமையை உணர்த்த பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஒரு ஊரை  ஆண்டு வந்தார்.  அவருக்கு தீராத வியாதி ஏற்பட்டது. வைத்தியர்கள் அவரை கைவிட்ட நிலையில், இக்கோவில் வழியாக ஆதி நவாப் செல்லும் போது, ஒரு பக்தன் தான் வைத்திருந்த பெருமாளின் தீர்த்ததையும், பிரசாததையும் கொடுத்தான்.  அதை சாப்பிட்ட ஆதி நவாப் பூரண குணமடைந்ததார். அது முதல் அவர் பெருமாளின் பக்தனாக மாறினார்.  அதுமட்டுமில்லாமல் கோவிலுக்காக நிறைய நிலங்களை எழுதி வைத்தாகக் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version