இலங்கை இறுதிப் போர் குறித்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கலாவது ஒத்திவைப்பு

ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அஹ்டிசாரி தலைமையிலான சர்வதேச நிபுணர் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறீசேனா அரசு போர்க் குற்றங்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக்கான ஐ.நா. தூதர் சையத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.