சென்னை: சட்டப் பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை ஒதுக்குவது குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளருடனான சந்திப்பில் தெரிவித்தவை… செய்தியாளர் :- ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உங்களுடைய கட்சி உறுப்பினர்கள் எதை எதை முன்வைத்து உரையாற்றுவார்கள்? கருணாநிதி :- எங்களுடைய கருத்துகளை இப்பொழுது நீங்கள் கேட்கும்பொழுது கூறிவிடலாம். ஆனால், அந்தக் கருத்துகளை சட்டப்பேரவையில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருயதுதான் பார்க்க வேண்டும். செய்தியாளர் :- ஆளுநர் உரையில் ஜெயலலிதாவை பாராட்டுகின்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதே? கருணாநிதி:- இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? செய்தியாளர் :- உங்கள் கட்சிதான் முக்கிய கட்சி. நீங்கள் பேரவையில் அடிக்கடி வெளிநடப்பு செய்து விடுவதால், முக்கியப் பிரச்சினைகள் பற்றி கருத்துகளை சொல்ல முடியாமல் போகிறதே? கருணாநிதி :- முக்கியப் பிரச்சினைகளை கூற வாய்ப்பு கிடைக்காத நிலையில்தான் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய நேரிடுகிறது. செய்தியாளர் :- சட்டப்பேரவையில் நீங்கள் கலந்து கொள்ள சிறப்பு இருக்கை ஒதுக்க வேண்டுமென்று இப்போது கேட்கப்பட்டுள்ளதா? கருணாநிதி :- அவர்கள் அதைத் தருவதில்லை என்று முடிவு எடுத்து விட்டார்கள். எனவே, அதை அவர்களிடத்திலே மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை.

