perunkulam temple thiruvlalluvar - 2026

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

உங்களோடு ஒரு வார்த்தை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
perunkulam temple thiruvlalluvar - 2026

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது…

வள்ளுவரை தெய்வப் புலவர் என்றே அழைத்தது நம் தமிழுலகு. உலகின் மற்ற ஒற்றை நபரால் தோன்றிய மதங்கள் பரவுதற்கு முன்பு வியாபித்திருந்த சனாதன தர்மத்தின் கோட்பாட்டை தம் குறட்பாக்களின் தொகுப்பில் அளித்த யோக ரிஷி திருவள்ளுவர். எவ்வித தனித்த அடையாளங்களும் தேவைப்படாத அந்நாளில் பொத்தாம் பொதுவாக வழக்கில் இருந்த தர்மத்தை அவர் சொல்லியிருக்கிறார் என்பதற்காக, அவரது சனாதன தர்ம நெறியை அவரிடம் இருந்து பறித்தல் – தமிழ்ச் சமுதாயத்துக்கே செய்யும் அப்பட்டமான துரோகம், தீங்கு.

நண்பர் குழாத்துடன் அண்மையில் பெருங்குளம் சென்றிருந்த போது எடுத்த படங்கள், கணினி சேமிப்பில் இருந்து திடீரெனத் தலைகாட்டின. அவற்றில் இந்தத் திருவள்ளுவர் படமும் ஒன்று. பெருங்குளம் சிவாலயத்தில் இது போல் ஔவையார், கம்பர், நக்கீரர் உள்ளிட்ட சங்கப் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவை கால ஓட்டத்தில் சிதிலமுற்று எதிரே உள்ள குளத்தில் போடப்பட்டதாகவும் செவிவழியாக தகவல் நிலவி வருகிறது.

இப்போது திருவள்ளுவர் என்று அடையாளப்படுத்தப்படும் விக்ரகம் மட்டும் அம்மன் சந்நிதியில் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அறிவுச் சுடராம் வள்ளுவம் தந்த தெய்வப் புலவருக்கு அகல் சுடரை ஏற்றி வெளிச்சமிட்டு வழிபடுகிறார்கள் அன்பர்கள். வள்ளுவர் எதிரே விளக்கு ஏற்ற வசதியாக வைக்கப்பட்டுள்ள விளக்குத் தட்டு இதைச் சொல்லும்.

இவ்வாலயத்தில் அல்லது இத்தலத்தில் திருவள்ளுவர் தம் திருக்குறளை அரங்கேற்றினார் (அல்லது ஊரார் முன் தம் வாய்மொழியாகச் சொன்னார் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்) என்கிற குறிப்பையும் செவிவழியாக வழிவழியாகச் சொல்லி வருகிறார்கள்.

இனி… இந்தக் கோயிலைப் பற்றியும், இங்கே தெய்வப் புலவர்களான நம் தமிழ்ப் புலவர்களுக்கு சிலைகள் இருந்தமை குறித்தும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் தம் ‘என் சரித்திரம்’ தொகுப்பில் குறிப்பிட்டுள்ளதை நண்பர்களின் பார்வைக்குத் தருகிறேன். பெருங்குளம் எனும் தலைப்பில் அவர் எழுதியவை இங்கே….
***

பெருங்குளம்‌

அவரிடம்‌ விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல்‌ மடத்துக்குப்‌ போய்‌ மடாதிபதியைக்‌ கண்டேன்‌. நான்‌ போனபொழுது அவர்‌ வீணை வாசித்துக்‌ கொண்டிருந்தார்‌. மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார்‌.

** தங்களுக்கு யமகந்திரிபுகளில்‌ நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம்‌. சிலவற்றைச்‌ சொல்ல வேண்டும்‌ ?” என்றார்‌. எல்லாரையும்‌ வசப்படுத்தும்‌ கலையாகிய சங்கீதத்திலே இன்பம்‌ காணும்‌ அவர்‌ மிகவும்‌ சிரமப்பட்டுப்‌ பொருள்‌ தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும்‌ இன்பங்‌ காணும்‌இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர்‌
விரும்பிய பொருள்‌ என்னிடம்‌ நிரம்ப இருந்தது.

மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்கள்‌ இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச்‌ சொன்னேன்‌. 3 எழுத்து முதல்‌ 13 எழுத்துக்கள்‌ வரையில்‌ யமகமாக அமைந்த செய்யுட்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ சொன்னேன்‌. கேட்டுக்‌ கேட்டு அவர்‌ மகிழ்ச்சி அடைந்‌தார்‌. நான்‌ வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும்‌ நான்‌ பார்க்கும்படி செய்தார்‌. பல பிரபந்தங்களும்‌ புராணங்களும்‌ அச்சிட்ட நூல்களும்‌ இருந்தன. குறுந்தொகை மூலம்‌ ஒரு பிரதி இருந்தது. அன்று முழுவதும்‌ அங்கே தங்கி அவருடன்‌ சல்லாபம்‌ செய்து கொண்டிருந்தேன்‌.

அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச்‌ சென்று அதன்‌ சிறப்பை அவர்‌ எடுத்துரைத்தார்‌. அங்கே உக்கிரபாண்டியர்‌ அரசாட்சி செய்தாரென்றும்‌, அவராற்‌ பூசிக்கப்‌ பெற்றமையின்‌ அவ்‌வூர்ச்‌ சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர்‌ என்னும்‌ திருநாமம்‌ வழங்குகிறதென்றும்‌ அறிந்தேன்‌. அந்தப்‌ பாண்டியர்‌ முன்னிலையில்‌ நக்கீரனார்‌ முதலிய சங்கப்‌
புலவர்கள்‌ கூடிய இடத்தில்‌ திருக்குறள்‌ அரங்கேற்றம்‌ நடைபெற்றதென்றும்‌ அங்ஙனம்‌ நடந்த இடம்‌ அதுவேயென்றும்‌ கூறி, அதற்கு அடையாளமாகச்‌ சிவாலயத்தில்‌ 49 புலவர்களின்‌ வடிவமும்‌ உக்கிர பாண்டியர்‌ வடிவமும்‌ அமைந்துள்ள இடத்தை அவர்‌ காட்டினார்‌.

“இங்கே அவர்கள்‌ இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப்‌ புலவர்களைத்‌ தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப்‌ போற்றும்‌ வழக்கம்‌ இந்த நாட்டில்‌ இருப்பதை நாம்‌ பாராட்டவேண்டும்‌? என்று நான்‌ எண்ணினேன்‌. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.