vanchinathan statue garlanding in sengottai - 2026

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

உங்களோடு ஒரு வார்த்தை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
vanchinathan statue garlanding in sengottai - 2026

இன்று வீரவாஞ்சியின் பிறந்த தினம் என்று அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி நாமும் அவரது சிலைக்கு மாலை சாற்றி மரியாதை செய்து வணக்கமிட்டு வருகிறோம்.

வரலாற்றுப் பாடங்களில், 1885 டிசம்பர் 28ல் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம், டபிள்யு சி பானர்ஜி ஆகியோரால், மேற்குத் தொடர்ச்சி மலையின் வடபகுதியில் உள்ள -பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு தொடங்கப்பட்டது என்பதைப் படித்திருப்போம். அதாவது, 1857 முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் இருந்து, பிரிட்டிஷ் ராணியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இங்கே அரசாட்சி அமைந்தபின், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்புகள் – ஆயுதம் தாங்கிய மோதல்கள் – ஆங்கிலேயரின் உயிரிழப்புகள் – இவற்றைத் தவிர்க்கவும், மட்டுப் படுத்தவும், இந்திய மக்களின் எதிர்ப்புணர்வை ஆயுதமற்ற அமைதி வழி எதிர்ப்பாக மடைமாற்றவும் இந்த காங்கிரஸ் அமைப்பு தொடங்கப்பட்டது.

என்றாலும், இந்த நிகழ்வுக்கு அடுத்த ஆறே மாதங்களில் – ஆங்கிலேயரின் சதிவலைக்கு எதிர்ப்பாக – 1886ல் – அதே மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் – செங்கோட்டையில் பாரதத் தாய் ‘சங்கரன்’ எனும் தன் வீரப் புதல்வனை ஈன்றெடுத்தாள். காங்கிரஸ் ஒரு புறம் சமாதானப் பேச்சுக்காக இந்தியர்களை மேலும் மேலும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்படுத்தும் வேலையில் ஈடுபட்ட போது, அதே பம்பாயில் தோன்றிய மராட்டியச் சிங்கம் பால கங்காதர திலகரின் வழியில் வீரமிகு எதிர்ப்புணர்வு எழுச்சியை பெரும்பான்மை இந்தியர்கள் ஆதரித்தார்கள்.

அந்த வழியில், முந்தைய அரை நூற்றாண்டு ஆயுதம் தாங்கிய எதிர்ப்பின் தொடர்ச்சியை இளைஞர்கள் சிலர் மேற்கொண்டார்கள். அப்படி மேற்கு மலைத் தொடரின் வடபுறத்தில் சாவர்க்கரால் உருவான அபிநவ பாரத் சங்கம் போல் தென்புறத்தில் உருவானது பாரத மாதா சங்கம். அதன் கொள்கை செயல் வீரனாய்த் திகழ்ந்தவன் வாஞ்சி எனும் பேர் தாங்கிய சங்கரன்.

சம்-கரன் என்றால், நலம் செய்விப்பவன். பகவான் சங்கரன் தீயோரை அழித்து நல்லோருக்கு நலம் செய்விப்பவன். ஆசார்ய சங்கரர் தீய சமயக் கொள்கையோரைச் சாய்த்து நல்வழி கொண்டோர்க்கு நலம் செய்தார். வீர சங்கரன், பாரதீயருக்குத் தீங்கிழைத்த ஆங்கிலேயனை மாய்த்து தன் பெயருக்கேற்ற தன்மையை உறுதிப் படுத்தினான்.

அந்த வீரவாஞ்சிக்கு – இன்று 140 வது பிறந்த நாள் என்று கொள்கிறோம்.

வீரவாஞ்சி தன்னுயிரைத் தியாகம் செய்தது 1911 – ஜூன் 17. ஆனால் அவன் பிறந்த நாள் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை. வருடம் மட்டுமே 1886 என்பது தெரிகிறது. எனினும் அரசு விழாவாகக் கொண்டாடப் படுவதால், இன்றைய தினமே அவன் பிறந்த தினம் எனக் கொண்டு நாமும் மரியாதை செய்கிறோம்.

***
இந்த நாளில், நம் சார்பில் ஒரு கோரிக்கை….

தென் தமிழகத்தில் மிக முக்கியமான ரயில் நிலையமாகத் திகழ்வது செங்கோட்டை ரயில் நிலையம். தமிழகத்தையும் கேரளத்தின் கொல்லத்தையும் இணைக்கும் பாதையில், செங்கோட்டையே தமிழகத்தின் கடைசி பெரிய நிலையம் என்பதும், இங்கே கடந்த காலங்களில் ரயில் நிலையம் பிட் லைன் வசதிகளுடன் மிகப் பெரிதாக பராமரிக்கப் பட்டு வந்ததையும் நாம் அறிவோம்.

செங்கோட்டை, கடந்த நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்தர்கள் அதிகம் வாழ்ந்த ஊர் என்பதும், இந்த ஊரைச் சேர்ந்த இளைஞன் வீரவாஞ்சி செய்த தியாகச் செயல் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்ததும் வரலாறு.

வீரவாஞ்சி, செங்கோட்டையில் பிறந்து, திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்டக் களத்தில் பங்கேற்று, மணியாச்சி ரயில் நிலையத்தில் தன் வாழ்க்கையை தியாகம் செய்து சுதந்திரப் போரில் ஆகுதி ஆக்கிக் கொண்டான். அவனது வீரச் செயலைக் குறிப்பிட்டு, தனது மன் கி பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “தவறு செய்த கலெக்டருக்கு தண்டனை அளித்தார் வீர் வாஞ்சிநாதன்” என்று குறிப்பிட்டுப் புகழாரம் சூட்டினார்.

அத்தகைய பெருமை மிக்க வீரன் வாஞ்சியுடன் அன்றைய கால கட்டத்தில் நீலகண்ட பிரம்மசாரி, வ.வே.சு ஐயர், போன்றவர்களும். வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரியவர்களும் களத்தில் இருந்தார்கள். அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வீரன் வாஞ்சியுடன் தொடர்புடைய செங்கோட்டை, திருநெல்வேலி, மணியாச்சி, ஆகிய ஊர்களையும், வ.வே.சு.ஐயர்,, நீலகண்ட பிரம்மசாரி ஆகியோரின் நினைவைப் போற்றும் ஊர்களாகிய பாபநாசம், சீர்காழி (மயிலாடுதுறை) ஆகிய ஊர்களையும் இணைக்கும் வகையில் தற்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செங்கோட்டை – தாம்பரம் (திருநெல்வேலி வழி) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘வாஞ்சி எக்ஸ்பிரஸ்’ எனப் பெயர் சூட்ட வேண்டுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

செங்கோட்டையில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் இரண்டு ரயில்களுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளதால், செங்கோட்டை – தாம்பரம் ரயிலுக்கு வாஞ்சி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது நம் கோரிக்கை.

தற்போது, இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, தென்காசி வாழ் ரயில் பயணிகள் மத்தியில் அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், பாஜக., தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் ஐயாசாமி போன்றவர்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் குரலுடன் நம் குரலும் வாஞ்சி எக்ஸ்பிரஸ் பெயர் சூட்டலுக்காக ஒன்று சேர்கிறது.

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.