

நூல் பெயர்: அருந்தமிழ் 50
நூல் வகை: புதுக்கவிதைகளின் தொகுப்பு
ஆசிரியர் பெயர்: ஜெயஸ்ரீ எம்.சாரி
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்- சென்னை
ஆண்டு: எப்ரல் 2026
நூல் வாங்க அலைபேசி: 9380530884
விலை: 100 ரூபாய்
— திறனாய்வு: முனைவர் மா. தாமோதரகண்ணன் —
கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.
“சொற்கள் நடந்தால் உரைநடை சொற்கள் நடனம் ஆடினால் கவிதை” என்று சொல்லுவார்கள். அந்த வகையில் கவிஞர் தன் மனதில் இயல்பாக எழுந்த உணர்ச்சிகள் முத்தமிழ்ச்சொற்களாகக் கவிதையாக நடனமாடியதை நூல் முழுவதும் காணலாம்.
மரபுக்கவிஞர்கள் பலர் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு சொல்லின் கட்டுப்பாட்டில் இயங்கி விடுவதைக் காணலாம். புதுக்கவிஞர்களுக்கு அத்தகைய இலக்கண வரம்பெல்லாம் கிடையாது. புதுக்கவிஞர்களின் கட்டுப்பாட்டில் சொற்கள் இருக்கும்.
மரபுக் கவிஞர்கள் சொல்லின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். புதுக்கவிஞர்கள் தான் நினைக்கின்ற சிந்தனையும் அதனை அப்படியே வெளிப்படுத்தும் சொற்களும் இணைந்து இயல்பாக வந்துவிடும். அதை அப்படியே பதிவு செய்து வெற்றியும் பெற்று விடுவார்கள்.
கவிஞர் நினைப்பது போலவே அப்படியே வாசகரும் நினைக்க வேண்டும்.வாசகர் கவிதை அனுபவத்தை கவிஞர் அனுபவித்ததைப் போலவே அனுபவிக்க வேண்டும். அப்பொழுது தான் கவிதை வெற்றி பெறும்.இந்நூலாசிரியரும் தன்னுடைய முன்னுரையில் “என் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்துகளாக முயற்சித்தேன் ” என்று எழுதி உள்ளார். நூலின் தொடக்கத்தில் மூன்று வகையான உட்தலைப்புகளுடன் தமிழ் வணக்கத்தோடும் வாழ்த்தோடும் கவிதையைத் தொடங்கியுள்ளார்.”ஏற்றமாய் இருந்தாலும் செருக்கு அற்றவள் “
“ஞானத்தால் தமிழர்கள் ஞானத்தை வெல்வதை “என்னும் பொன் வரிகளால் தமிழன்னையை வணங்கியும் புகழ்ந்தும் உள்ளார்.
இந்நூலாசிரியர் தன் படைப்புகளில் எதுகை, மோனை, இயைபு, அணி போன்ற இலக்கிய நயங்களுக்கு கூறுகளுக்கெல்லாம் ஆசைப்படவில்லை அதேவேளை ஓசைப்படாமல் இயல்பாக அத்தகைய இலக்கியக் கூறுகள் வருவதை அப்படியே பதிவு செய்துள்ள பாங்கும் போற்றத்தக்கது. இக்கவிதை நூல் வாசகர் மனதில் நிச்சயமாக இடம் பெறும். காலமும் அதனை மறக்காமல் இந்நூலை அசை போடும்.
திருக்குறளைப் புதியக் கண்ணோட்டத்தில் இரசித்துள்ளார். திருக்குறளில் காணப்படும் எதிர் எதிர் அதிகாரத்தில் தலைப்புகளைக் கொண்டுள்ள திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.”எதிரெதிர் தலைப்புகளில் எதிரொலிக்கும் வார்த்தைகளாமது கல்வியின் பயனுமாம் கல்லாமையின் நிலையுமாம் ” என்று பாடியுள்ளார். மேலும் மருந்து, நட்பாராய்தல் அதிகாரங்களின் தலைப்பிலான திருக்குறளுக்கும் புதுக்கவிதை நடையில் புதுமையாய் விளக்கம் தந்துள்ளார்.”உலகியலுக்கு ஒவ்வாத நட்பு நலம் அன்று ” என மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். “நேர விரயமானாலோ வாழ்வும் விரயமே ” என்று திருக்குறளைப் பற்றி அருமையாகத் தமிழ் வார்த்தைகளில் செதுக்கியுள்ளார்.
சிறுவயதில் தன்னை போற்றி வளர்த்த வானொலிக்கு நன்றி சொல்லி “என்னை எழுப்பும் அலாரமாம் வானொலி ” என்று சுவைபட கவிதை எழுதியுள்ள பாங்கு நன்றாக உள்ளது. புதுக்கவிதையில் சோதனை முயற்சியாக அந்தாதி நடையில் மூன்று தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளை எழுதியுள்ளார்.
“காலம் காட்டும் கண்ணாமூச்சி ” என்னும் தலைப்பில் “வாய்ப்பினையும் கொடுத்து வினையும் வைப்பான்;வைத்த வினையின் வழியையும் விளக்குவான்”என்னும் வைர வரிகள் வாழ்வியலை உணர்ந்து கொள்ளச் சொல்லும் அழகான வரிகளாக அமைகிறது.
“ஆளுமை கொள் ” என்னும் கவிதையானது அகர வரிசையில் அமைத்து நற்செய்திகளை உரைக்கும் ஆத்திச்சூடி கவிதை என்றும் புகழ்ந்துரைக்கலாம்.
“வாரச்சந்தை” பற்றி பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் சுவாரசியங்களைத் தொகுத்து “சில்லறைத்தனமாய் பேரம் பேசுவோரும் கூடும் இடமாம் சில்லறையுடன் சிரிப்பையும் இலவசமாய் பெறக்கூடிய இடமாம் “என்று கலகலப்பாக எழுதியுள்ளார்.
“தோல்வியின் வலி” அனைவருக்குமான தன்னம்பிக்கை வெளிச்சம் தரும் கவிதையாக வலம் வருகிறது.”தத்தி தத்தி நடக்க முயலும் குழந்தையின் தோல்வியோ பாதங்களை வலிமையாக்கும் “, “மிதிவண்டி கற்கும் போது ஏற்படும் சரிவே மீண்டும் முயல வழிவகுக்கும்” என்று பாடியுள்ளார்.
காந்தியடிகளின் குடில் பற்றிய வரலாற்றுச் செய்திகளை உள்வாங்கிய கவிதை காந்தியடிகள் வாழ்ந்த காலச்சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.தோழிகள் பேசிக் கொள்வது போல நாட்டுப்புற மெட்டில் “மண்வாசனை” என்னும் கவிதை மண்வாசனைக் கமழும் கவிதையாக இடம் பெறுகிறது.
“பிறக்கும் சொற்களால் பிறரும் மகிழட்டுமே” என்று மனித நாக்கு பற்றிய கவிதை நயமாக உள்ளது. நேரடியாக நட்புப் பாராட்டுகின்ற பழக்கம் குறைகிறது.அருகருகே அமர்ந்திருந்தாலும் அலைபேசியில் தனித்தனியே மூழ்கி விடும் அவல நிலையை ஒரே வரியில் “முகநக நட்பை முகநூல் முந்துகிறதே” என்று ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“செவிகள் திறக்கட்டும்” கவிதையில் இயற்கையில் எழுதும் ஆயிரக்கணக்கான ஒலிகளை இவ்வுலகில் கேட்டுக் கேட்டு மகிழ்வுறவே சொல்கின்றார். அக்காலத்தில் திருபாவையாக விளங்கிய ஆண்டாள் பாடிய திருப்பாவை நூலின் பெருமைகளைச் சொல்லும் கவிதை இந்நூலுக்கு அணிசேர்க்கிறது.
புத்தம் புதிய சிந்தனையில் “முதியோர் இல்லம்” இருப்பதால் முதியவர்கள் பெரும் நன்மைகளை நயமாய் பட்டியலிடுகிறது. “நூலினைப் பகுத்துணர் ” கவிதை நூல் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ” சுட்டிகளின் சேட்டைகள் “கவிதைகள் படிக்கும் அனைவரின் பழைய நினைவுகளை மீட்டெடுத்து இரசிக்க வைக்கிறது.
“அடுக்குத்தொடர் கவிதை” தாய்மையின் சிறப்புகளை ஒவ்வொரு அடியிலும் அடுக்குத்தொடர் சொல்லாட்சிகள் அமைந்து நல்லதொரு புதுக்கவிதை உத்தியாக இடம் பெற்றுள்ளது. “தீப்பொறி ” கவிதையில் இயைபுத்தொடையில் தீப்பொறியாய் படிப்பவர் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டும் சொற்கள் இடம் பெறுகிறது.
“பாரதத்தின் தீ பாரதி” என்னும் கவிதையில் இரத்தினச் சுருக்கமாகப் படிப்பவர் மனதில் தைக்கும் படியாகச் சொற்களை அமைத்துள்ளார். “நவீனமாய் ஒரு தாலாட்டு” கவிதையில் பாடுபொருளும் பாடிய விதமும் நவீனப் புதுக்கவிதையாகப் புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.
வேலைக்காரி பாடுவதாக “வீடு முழுக்க விளையாட்டு பொம்மைகள் தான் உன்னோடு விளையாடத் தான் ஒருத்தரும் இல்லையே” என்று ஏங்குகிறாள்.
கதிரவன் தன் கதிர்வீச்சால் ஏற்படுத்தும் வர்ணஜாலங்களை “கரம் இல்லா ஓவியன்” என்னும் தலைப்பில் பாடியுள்ளார். குறிஞ்சி நிலம் முல்லை நிலம் பற்றியும் பாடல்களில் விளக்கி எழுதியுள்ளார். “அம்மையின் வயிற்றில் ஆரம்பித்த பயணம் “, “சுடர் தீபமாய் அக இருளை அகற்றுவதால் இன்பமுடன் என் பயணங்கள் என்றும் முடிவதில்லை”என்று கவிஞர் பயணங்கள் முடிவதில்லை என்று பாடிய படியே அவருடைய தமிழ்க் கவிதை பயணம் இந்நூலின் வழியாக தொடரும் என்றும் தொடரட்டும் என வாழ்த்துகின்றோம்.
அருந்தமிழ் நூல் அருமையான தேன் தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய நூல்.



