sabarimala niraiputharisi pooja - 2026

சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இந்தியா ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala niraiputharisi pooja - 2026

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.

மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நிறை புத்தரிசி பூஜை என்பது கேரளத்தின் ஆவணி மாதம் துவங்கும் புதிய அறுவடைக்காலத்தின் தொடக்கத்தையும் விவசாய செழிப்பையும் குறிக்கும் மிக முக்கியமான சிறப்பு வழிபாடாகும். இந்த ஆண்டுக்கான (2026) நிறை புத்தரிசி பூஜை ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று காலை சபரிமலை சன்னிதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இச்சடங்கின் போது கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிர்கள் ஐயப்பனுக்குப் படைக்கப்பட்டு தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரூ தலைமையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடாக அதற்கு முந்தைய நாள் ஆக. 2 மாலையே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது.

பதினெட்டாம் படி வழியாகவும் பாரம்பரிய வாத்தியங்கள் முழங்கவும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டு தந்திரிக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கப்பட்டன. புதிய நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட பாயசம் மற்றும் அவல் ஆகியவை ஐயப்பனுக்குப் படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பூஜைக்குப் பிறகு கருங்கற்கள் மற்றும் அதற்குரிய சன்னிதானப் பகுதிகளில் நெற்கதிர்கள் கட்டப்பட்டு, மீதமுள்ள கதிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்துப் பூஜித்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான நெய்யபிஷேகம் உச்சி பூஜை உட்பட பல்வேறு பூஜை சடங்குகள் நடைபெற்றது. இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. இனி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

தற்போது கேரளாவில் திடீரென பெய்த கடும் மழையால் பம்பை நதியில் ஆகஸ்ட் முதல் நாள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சபரிமலை பம்பை உட்பட பத்தனம்திட்டா கொல்லம் மாவட்டங்கள் உட்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

பம்பை நதியில் மிக அதிகமான தண்ணீர் வரத்து இருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் ஆற்றுக்கு மேலும் சென்று அக்கரையில் உள்ள கணபதி கோவில் மற்றும் கட்டிடங்கள் உள்ள பகுதிகளிலும் தேங்கியது .பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல நடைபாதைகளில் போதிய வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.