
என் எழுத்தின் பாதையிலே…
-ஜெயஸ்ரீ எம். சாரி
கற்றுக் கொள்வது என்பது ஒரு தொடர்ந்து வரும் செயல்முறையாகும். கற்பது என்பதோ ஒரு கசப்பான செயல்முறையாய் இருந்தாலும் அது கொடுக்கும் பலனோ மிகுதியானது.
என்னுடைய பெற்றோர் எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதற்கு ஊக்கமளித்தும் பல நல்ல புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தியும் உள்ளனர். என்னுடைய முதல் வரிகளான ‘ கல்லூரி நந்தவனத்தில்’ என என் மூன்றாம் வருட கல்லூரி நாட்களில் என் துறையில் சேர இருந்த முதலாம் வருட மாணவிகளுக்காக நான் எழுதியதை அனைவரும் ரசித்தனர். என்னுடைய திருமணத்திற்கு பின்னர், மராட்டி மண்ணானது எனது எழுத்துக்கு பலமான வேர்களை அடித்தளமாய் தந்தது. அதனால், நானும் தமிழில், ஆங்கிலத்தில், ஹிந்தியில், மராட்டியில் என் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுத ஆரம்பித்தேன். சுமார் 17 வருடங்களுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் ஆச்சார்ய வினோபா பாவே அவர்களது ‘கர்மபூமியாய்’ கருதப்படும் வர்தாவில் அச்சு ஊடகத்தில் சேர்ந்தேன். என்னுடைய அலுவலகத்தில் இருந்தவர்களின் உதவியால் என்னால் என்னுடைய பணியினை திறம்பட செய்ய முடிந்தது. என்னுடைய பணியில் நான் சந்தித்த பல பெண்களின் வார்த்தைகளில் இருந்த தைரியம், வாழ்வியல் நெறிகளால் எனக்கு ஏற்பட்ட, என்னுள் ஏற்பட்ட நேர்மறை தாக்கத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டுரையின் சாரமாகிறது.
மராட்டிய பெண்மணி பத்ம ஸ்ரீ விருது பெற்ற மறைந்த சிந்துதாயி சப்கால், 1,000க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளின் தாய் என அழைக்கப்பட்டவரின் ஒரு நிகழ்ச்சியில் நான் குறிப்பெடுக்கும் போது அவர் பெண்களின் திடமான மனதினைப் பற்றி பற்பல உதாரணங்களுடன் விளக்கியதோடு பெண்களே நம் கலாச்சாரத்தை காக்கும் தூண்கள் என்று விவரித்தார். ( அவர் உரையினால் பெண்களின் சக்தியை என்னால் உணர முடிந்தது)
பத்ம விபூஷண விருதுக்கு சொந்தக்காரரான நம் தமிழ்நாட்டின் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், வர்தாவில் உள்ள மஹாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் இண்டஸ்ட்ரியில் நடந்த நிகழ்ச்சியின் நடுவில் பத்திரிக்கையாளராய் நான் அவரை சந்தித்த போது அவர், ஆச்சார்ய வினோபா பாவேவுடன் ‘பூதான்’ இயக்கத்தில் தான் 14 வருடங்கள் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார். மனிதர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால் மரத்தையும், காகிதங்களையும் தான் உண்ண வேண்டும், என்றார். ( ஒரு விடுதலை போராட்ட தலைவியின் சுற்றுச்சூழலைப் பற்றிய அவருக்கு இருந்த கவலையை எனக்கு உணர்த்தியது.)
இப்போது, நான் அறிமுகப்படுத்த இருப்பவர் கௌசல்யா லடி, அப்போதைய துல்ஜாபூர் (வர்தா மாவட்டத்தில்) பஞ்சாயத்தின் ‘சர்பஞ்ச்’. அவருடனான என் கலந்துரையாடலின் போது கிராம குழந்தைகளின் படிப்பிற்காக அவ்வூர் பெற்றோர்களை தயார்படுத்தியதையும், கிராம மக்களுக்காக ஆரோக்கிய காப்பீடு திட்டம் கொண்டு வந்ததையும், கிராமத்தில் ஆண்கள் ஒரு கடன் வாங்குவது இருந்தாலோ அதற்கு வீட்டில் உள்ள பெண்களிடம் இருந்து அனுமதி பெற்றே ஆகவேண்டும் என்ற பல வரைமுறைகளை தான் வகுத்ததை என்னுடன் பகிர்ந்து கொண்டார். தன் கிராமத்தில் பெண்களின் மேம்பாட்டிற்கான உறுதியான திட்டங்களை கொண்டு வந்ததை “எனக்கு மகிழ்ச்சியை அளித்த விஷயம்,” என்றார் அவர். ( கிராமிய பெண்ணின் மனபலம் தானே அது.)
வர்தாவின் விடுதலை வீராங்கனை ரமாபென் ரூயாவுடம் ஹைதரபாத்தில் இருந்து செயல்படும் ஒரு தேசிய நிறுவனத்திற்காக நான் பேட்டி எடுத்தபோது விடுதலை இயக்கத்தில் அவர் பங்கு கொண்டதையும், வர்தாவில் ‘மஹிளா ஆஷ்ரமம்’ போன்ற பல காந்திய அமைப்புகள் நிறுவப்பட்டதையும் கூறினார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மக்கள் மிக மகிழ்ச்சியாய் இருந்ததாகவும், தேசியக் கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றியதையும், மக்கள் தாய் மண்ணை முத்தமிட்டதையும், மராட்டியில் நாட்டுப்பற்று பாடல்களை பாடியதையும் அவர் விளக்கி சிலாகித்தார். நம் நாடு சுதந்திரம் அடைந்த அன்று அவர் பாடிய ஒரு பாடலின் இரு வரிகளை அவர் கைப்பட ஒரு காகிதத்தில் எனக்கு எழுதி தந்தார். ( அவரின் ஞாபக சக்தியும், அவரின் நினைவலைகளை விளக்கிய விதத்தாலும் நான் கவரப்பட்டேன்.)
ஒரு அச்சு ஊடகத்திற்காக சந்தாலி மொழி எழுத்தாளரும், கவிதாயினியுமான ஜோபா முர்மு அவர்களை சந்தித்தேன். அவருக்கு இந்திய மொழிகளில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்களது இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்ற தன் அவாவை அவர் வெளிப்படுத்தினார். நம் நாட்டு எழுத்தாளர்கள் அவர்களது பகுதியில் உள்ள பழங்குடி இலக்கியங்களை வெளிக்கொணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ( நம் நாட்டின் களஞ்சியங்களில் ஒன்றான பழங்குடி இலக்கியங்களை பற்றிய அவரது ஈடுபாடு எனக்கு தெரிந்தது.)
பதினெட்டு மொழிகளை அறிந்த முனைவர் குமுத் பாலா தன்னுடைய காவிய காமுதி பன்னாட்டு பன்மொழி புலவர்கள் குழாமின் மூலமாக ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளை அனைவருக்கும் அவர் அறிமுகப்படுத்தும் பணியை விவரிக்கும் ஒரு சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. ( அவரின் மொழிகளைப் பற்றிய தொலைநோக்கு பார்வையை கண்டறிய முடிந்தது.)
மஹாராஷ்டிராவின் நாந்தேட் நகரில் இருக்கும் மாற்றுத்திறனாளியான கோதாவரி ஜங்கில்வாட் (கோலக் கலைஞர்)யின் மனதிடத்தை அவரை ஒரு நேர்முக கானலில் பேட்டியெடுக்கும் போது புரிந்தது. “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனித்திறமையையும் அவர்களின் கலையார்வத்தையும் உற்சாகப்படுத்த வேண்டும்,” என்றார் அவர். தன்னாலான சமூக உதவிகளை தேவையானவர்களுக்கு செய்யும் அவர், தன் சமூக ஊடக பக்கங்களில் அவர் ‘இந்த வாழ்க்கை மிக அழகானது’ என்ற வாசகத்தையே வைத்துள்ளார். (அவருடைய நேர்மறை வாழ்வியல் முறையை எனக்கு ஒரு வாழ்க்கைப் பாடமானது.)
நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் மியூசிக் கார்டனின் பரிதாபமான நிலையை படத்துடன் ஒரு ரிப்போர்ட்டாக நான் பணிபுரிந்த நாளிதழில் பதிவு செய்தேன். அந்த ரிப்போர் 2019 – ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அன்று அந்த நாளிதழில் வெளியானது. ( லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள் என் இந்த முயற்சியை அப்போது பாராட்டினார்கள்.)
இவ்வாறு, என்னுடைய பேனாவின் பாதை இன்னும் சில ஊக்கம் அளிக்கக்கூடிய விஷயங்களை கடந்து சென்றுள்ளது. வாசகர்களின் ஆதரவோடு என் பேனாவின் பாதை தொடரும், பல மைல்கள் இன்னும் அதன் முன்னே – என்ற ஒரே நம்பிக்கையோடு.
பத்திரிக்கை துறையில் தங்களின் பங்களிப்பு ஒரு ஆசிரியராக பேட்டி கண்டு மகளிர் பெரு மக்களின் நிகழ்வுகள் பலவும் பகிர்ந்து கொண்ட விதம் அருமை. வாழ்த்துகள் பற்பல