
அதிமுக-பாஜக கூட்டணி
2026 வரை நிலைக்குமா?
பாஜக அவசரப்பட்டு விட்டதா?
— ஆர். வி. ஆர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போன வாரம் சென்னை வந்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். முடிவில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கட்சிகளிடையே கூட்டணி அமைந்தது என்று அறிவித்தார். அப்போது பழனிசாமியும் அருகில் அமர்ந்திருந்தார்.
பழனிசாமியின் ஒரு சமீபத்திய பேச்சால் அதிமுக-பாஜக கூட்டணியில், குறிப்பாக பாஜக பக்கம், அதிர்வலைகள் தென்படுகின்றன. இப்போது பல பாஜக ஆதரவாளர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் இவை. 2026 தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா? அதிமுக-வை நம்பி பாஜக கூட்டணி அமைத்தது சரிதானா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?
இதற்கான விடைகளை நாம் பல கோணங்களில் தேட வேண்டும்.
அதிமுக-வோ பாஜக-வோ 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வெல்ல முயற்சிக்க, அவைகளுக்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம். ஆகையால் அவை திமுக-வை எதிர்க்கப் போகும் ஒரு கூட்டணியைத் தங்களுக்குள் அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்.
பழனிசாமியின் தற்போதைய அறிவிப்பு, செய்தியாளர்களிடையே அவர் பேசியபோது வெளிவந்தது. அவர் சொன்னது: ‘அதிமுக-பாஜக கட்சிகள் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்றால், புதிய மாநில அரசில் பாஜக பங்கு பெறாது, அதிமுக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கும்’. அமித் ஷாவும் அப்படிப் புரிந்து கூட்டணியை அறிவித்தார் என்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஆனால் பத்திரிகைச் செய்திகள் அந்த ரீதியில் இல்லை.
பழனிசாமியின் அறிவிப்பை பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. இது பற்றிய கேள்விக்குப் பதில் சொன்ன பாஜக-வின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மாநில ஆட்சியில் அதிமுக-வோடு பாஜக-வும் பங்கு கொள்வது பற்றி அமித் ஷாவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் உரிய நேரத்தில் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்” என்று பழனிசாமியின் கருத்தை ஏற்காமலும் மறுக்காமலும் நாசூக்காகப் பேசினார்.
அதிமுக தலைவர் பழனிசாமி, அவரது கட்சியினரால் போற்றப் படுபவரல்ல. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு உடையவர் அல்ல. தலைமைப் பண்புகள் கொண்டவரும் அல்ல. அதிமுக-வுக்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னத்தைக் கொண்ட அந்தக் கட்சிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தலைவராகி இருப்பவர்.
பாஜக என்ற கட்சியோ, அதன் தமிழகப் பிரிவோ, அதிமுக மாதிரியான கட்சி அல்ல. தமிழக பாஜக-வின் தலைவர்கள், பாட்டன் சொத்தில் சுகிக்கும் வம்சா வழிகள் அல்ல. அவர்கள் அனைவரும் தேசாபிமானத்துடன் துடிப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியும் திறமையான நிர்வாகமும் நிலவவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.
இத்தகைய தமிழக பாஜக, அதிமுக-வோடு கூட்டணி அமைத்து என்ன செய்யவேண்டும் என்று பழனிசாமி நினைக்கிறார்? அதிமுக-வை ஆட்சியில் அமர்த்திப் பழனிசாமி முதலமைச்சராகத் தேவையான சில எம்.எல்.ஏ-க்களைக் கூட்டணிக்கு நிரந்தரக் காணிக்கையாக்கி பாஜக ஓரமாக அமர்ந்திருக்க வேண்டுமா?
அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கு பழனிசாமியின் விருப்பமும் ஒரு காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் பாஜக அதரவாளர்களிடையே உண்டு – அமித் ஷா இதை லாவகமாகக் கையாளக்கிறார் என்பது வேறு விஷயம். இதுபோக, அதிமுக-பாஜக கூட்டணி 2026 சட்டசபைத் தேர்தலில் வென்றாலும், மாநில ஆட்சியில் பாஜக பங்கு கொள்ளாமல் வைக்கப் படும் என்றால், அது அண்ணாமலை அபிமானிகளுக்கு இரட்டை இடியாக வரும், அதை பாஜக ஏற்பதும் எளிதல்ல. இதைப் பழனிசாமி உணரவில்லையா?
அதிமுக மட்டும் தனியாக மாநில ஆட்சியில் அமர்ந்து, யாரும் பார்க்காமல் என்ன செய்ய விரும்புகிறது? புரிகிறது, புரியாமலும் இருக்கிறது.
இன்னொன்று. 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக-வுக்குத் தனி மெஜாரிட்டி இல்லை, பாஜக எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்தால் தான் ஆட்சிக்கு மெஜாரிட்டி உண்டு என்றானால், அப்போதும் பாஜக-வை ஆட்சியில் சேர்க்க விரும்பாதா அதிமுக? இல்லை, பாஜக-வுக்கு அந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் எப்படியும் கிடைக்க முடியாத படி அந்தக் கட்சிக்கு மிகக் குறைந்த தொகுதிகளை ஒதுக்க அதிமுக எண்ணுகிறதா? பழனிசாமியின் அறிவிப்புக்குப் பின்னால் தெளிவான முதிர்ச்சியான சிந்தனை இல்லை.
இதுதான் இப்போதைய நிலை. ஆனால் என்ன இருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்குள் அவர்கள் அதிமுக-வைப் பற்றியும், அதன் பேராசைகள் மற்றும் தந்திரங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசலாம். அவை அனைத்தும் பாஜக தலைவர்கள் நொடியில் அறிந்தது தான். ஆனால் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது, பேசவும் மாட்டார்கள்.
மோடியும் அமித் ஷாவும் தாங்கள் கொண்ட உயர்ந்த இலக்கு, ஆகவேண்டிய காரியம், அதில் தான் குறியாக இருப்பார்கள். அவர்கள் வெளியில் பேசுவது தேவையான அளவு மட்டும்தான் இருக்கும். ஆகையால் பாஜக ஆதரவாளர்கள் அவர்களின் மதியூகத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
எப்படியான மனிதர்களை சமாளித்தவர்கள், வென்றவர்கள், மோடியும் அமித் ஷாவும்? காங்கிரஸ் கட்சியின் சோனியா குடும்பம், ஷரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி, நிதிஷ் குமார், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி, சந்திரபாபு நாயுடு மற்றும் கேஜ்ரிவால். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பழனிசாமியை அரசியல் ரீதியாக எங்கு விட்டு எங்கு பிடிக்கவேண்டும் என்று பல கணக்குகள் இருக்கும்.
திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்பது பாஜக-வின் பிரதான இலக்கு. இதற்காக, முதலில் அதிமுக-வுடன் கூட்டணியைப் பேசி முடித்துவிட்டு பாஜக காத்திருக்கும். பின்னர் நாள் ஆக ஆகப் பழனிசாமி கூட்டணிக்கு ஒவ்வாத பேச்சுக்களைப் பேசி முரண்டு பிடித்தால் – யார் கண்டது, நடிகர் விஜய்யிடமிருந்து பழனிசாமிக்கு எப்போது என்ன ஒப்புதல் வருகிறதோ! – அதிமுக கூட்டணியிலிருந்து வேறு வழி இல்லாமல் பாஜக அப்போது விலகலாம். ஆனால் பாஜக இப்போது அதிமுக-விடமிருந்து விலகி நின்று, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வுடன் கூட்டணி பற்றிப் பேச ஆரம்பிக்க முடியாது. ஆகையால் அதிமுக-வுடன் முதலில் கூட்டணியை அமைத்து வைப்பது பாஜக-வுக்கு அவசியம் – நன்றாகப் போனால் அதைத் தொடரலாம்.
இது போக, தேர்தலுக்கு முன்போ பின்போ அதிமுக-வில் அதிருப்தி கொண்ட அக் அக்கட்சியின் தலைவர்கள் அதிமுக-வைப் பிளக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் பழனிசாமியும் பாஜக-விடம் முரண்டு பிடித்து முறைத்துக் கொண்டிருந்தால், அதிமுக-வில் ஏற்படும் பிளவும் பாஜக-விற்கு அனுகூலம் என்றால், அப்போது பாஜக அந்தத் திசையிலும் பார்க்கலாம். இது போன்ற மாற்று வாய்ப்புகள் பாஜக பக்கத்திலிருந்து அதிமுக-வுக்குக் கிடைக்காது.
அதிமுக-வுடனான தேர்தல் கூட்டணியைப் பாஜக தொடர்ந்து நிர்வகிப்பது ஒரு செஸ் ஆட்டம் மாதிரி. நாம் வியக்கும் பாஜக செஸ் வீரர் அந்த விளையாட்டில் கில்லி என்றால், அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் அவரது ஆட்டத்தைக் கடைசி வரை அமைதியாகப் பார்க்க வேண்டும்.
நாம் போற்றும் செஸ் வீரர் இந்த ஆட்டத்தின் முடிவில் பெரிய வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அவரிடம் சாம்பியனுக்கான ஆட்டத் திறமையும் துடிப்பும் யுக்தியும் இருக்கிறது. இன்றோ நாளையோ, ஒருநாள் அவர் எப்படியும் அபாரமாக வென்று வருவார். அவருக்குக் கை தட்டுவோம்!
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com