வாசிப்போர் நாடிடும் புத்தகக் கண்காட்சி!

Published:

chennai bookfare - 2026
  • ஜெயஸ்ரீ எம். சாரி

கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி 2026 நேற்று இனிதே நிறைவுற்றது. இந்தக் கண்காட்சியில் எவ்வளவுக்கு புத்தகங்கள் விற்றிருக்கின்றன மக்கள் எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதெல்லாம் இனி தெரியவரும். வாசிப்புப் பழக்கம் தேய்ந்து வரும் இந்நாட்களில் இத்தகைய புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் ஓர் ஊக்குவிப்பு முயற்சியே!

நம் இல்லத்தில் இருக்கும் புத்தகங்களே நமக்கு பெருமை என்பது ஒரு அழகான கூற்றாகும். புத்தகம் வாசிப்பை தன் அன்றாட நிகழ்வுகளில் கட்டாயமாக கொண்டுள்ள என் தந்தையுடன் நான் சென்னை புத்தகக் கண்காட்சி – 2026 காணச் சென்றேன்.

எனக்கு ஒரு அருமையான அனுபவம் அங்கு கிட்டியது. நுழைவுச் சீட்டினையும், ஸ்டால்களின் வரிசைகள் தாங்கிய சீட்டுகளையும் பெற்றுக் கொண்டு நாங்கள் இருவரும் ஸ்டால்களில் இருந்த புத்தகங்களை காணச் சென்றோம்.

பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் புத்தகங்களை காண்பதே மனதிற்கு நிறைவாய் இருந்தது. அந்தக் காலத்து எழுத்தாளர்களான உ.வே.சா, நா. பார்த்தசாரதி, லா.சா.ரா. கோதைநாயகி அம்மாள், லெக்ஷ்மி, மெரீனா, சோ ராமஸ்வாமி, சாவி, கல்கி, அண்ணாதுரை போன்றோர்களின் புத்தகங்களை பார்க்கும் போதே பரவசமாய் இருந்தது.

நாங்கள் சென்ற அன்று கூட்டம் அதிகமில்லை. மாற்றுத் திறனாளிகள் சிலர் தங்கள் உதவியாளர்களோடு வந்திருந்ததைப் பார்த்த போது புத்தகங்கள் ஒரு சிறந்த தோழமையாக, துணையாக இன்றும் இருக்கின்ற விஷயம் புரிந்தது. புத்தகப் பிரியரான என் தந்தை பார்த்து பார்த்து தனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தனக்கு பிடித்த பதிப்பகங்களில் இருந்து வாங்கினார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டாலில் திருமதி. கிரிஜா ராகவன், ஆசிரியர், லேடீஸ் ஸ்பெஷல், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவருக்கு இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழினை அளித்து விட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். பின்னர், எங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொண்டோம்.

பிரபல தமிழ் நாளிதழ் அமைத்திருந்த ஸ்டாலில் நல்லக் கூட்டம். மற்றொரு தமிழ் நாளிதழ் ஸ்டால் காலியாகவே இருந்தது. புகழ்பெற்ற ஆங்கில நாளிதழின் ஸ்டாலில் இருந்த ஊழியர்கள் வாசகர்களின் கையைப் பிடித்து இழுத்து சந்தாக் கட்டுங்கள் என்று கட்டாயப்படுத்தாததால் வாசகர்கள் தப்பித்தார்கள்.

தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில் ‘நம் உரத்த சிந்தனை’யும் கவரில் இருந்ததால் அதையும் ‘க்ளிக்’ செய்தேன். என் தந்தை பணிபுரிந்த இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஸ்டாலில் அவரை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு மனநிறைவோடு புதிய புத்தகங்களை கையில் ஏந்தி நாங்கள் வந்தோம். தமிழ்நாடு அரசின் இலவச பேருந்தில் கண்காட்சி திடலில் இருந்து வந்து மெட்ரோவில் இல்லம் வந்து சேர்ந்தோம். இல்லம் வந்தவுடன் என் தந்தை தான் வாங்கிய புத்தகங்களில் எல்லாம் தன் பெயரையும், வாங்கிய தேதியையும் எழுதினார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img