கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக முதல்வர் அறிவித்துள்ள வெள்ளை அறிக்கையில், இந்து கோயில்கள் பற்றிய வருமானம், சீரமைப்பு மற்றும் அதன் எதிர்காலத் திட்டம் குறித்தும் முழுமையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

தமிழகத்தில் பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். அதே சமயம் அனைத்து துறைகளிலும் கடந்த திமுக ஆட்சி செய்தது என்ன? அதில் நடந்த முறைகேடுகள் என்ன? என்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது தமிழக மக்கள் கோரிக்கையாக சமூக ஊடகங்களில் வெளிவருகிறது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை என பல துறைகளில் ஊழல் கறைபடிந்த நிர்வாகம் குறித்த கேள்விகள் நீள்கிறது. உதாரணமாக வெளிநாட்டு முதலீடு ஈர்த்த விவகாரம் குறித்த விமர்சனங்கள் திமுக ஆட்சியிலேயே எழுந்தன. இதில் புதிய அரசுக்கு நமது கோரிக்கை, இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடு குறித்தும் தீவிரமான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

கடந்த திமுக ஆட்சியில் மூவாயிரம் கோவில்களில் அவசரகதியில் குடமுழுக்கு நடைபெற்றது. பல லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டது. அதில் பல முறைகேடுகள் குறித்து புகாரும் வந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நடந்த முறைகேடுகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டது தெரிய வந்தது.

கோவில் நிலங்கள் வீடுகள் முறைகேடாக தனியாருக்கு, அரசு துறைகளுக்கு தாரை வார்க்க அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்ட வழக்குகள் பதிவாகின.

பக்தர்கள் காணிக்கை அளித்த நகைகள் உருக்கப்பட்டதில், கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களைத் தந்தும் கடந்த திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை.

மேலும் திமுக, அதிமுக ஆட்சியில் தெய்வத் திருமேனிகள், கோவிலின் புனிதமான பொருட்கள், பழைமையான விக்ரகங்கள் முதலானவை களவாடப்பட்டு, கடத்தப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? இந்த குற்றங்களுக்குத் துணைபோன இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர். ஆனால் அந்த வழக்குகள் தொடர்ந்து நடத்தாமல், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீண்டும் பணி அமர்த்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

கடத்தப்பட்ட இறைவன் திருமேனிகள் மீட்க போதுமான நடவடிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்தது இன்றைய ஊடகங்களில் வெளிவந்துள்ளது. எனவே ஊழலில் முறைகேடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத் துறை கடந்த காலங்களில் செயல்பட்டதை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை புதிய அரசு, தமிழக மக்கள் முன் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இதன் மூலம் கடந்த ஆட்சியில் நடைபெற்றவை மக்களின் பார்வைக்கு வரும். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் அதிகாரிகள் செய்யும் தவறை தட்டிக்கேட்கத் துணிவு வரும்.

இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணை போகாமல், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையாக, நேர்மையாக இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

எனவே முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.