
தாம்பரம்-தென்காசி பகல் நேர அதிவிரைவு சிறப்பு ரயிலை தினசரி இரயிலாக அறிவிக்க பயணிகள் கோரிக்கை!
தாம்பரம் தென்காசி இடையே இயங்கிடும் வகையில் பகல் நேர அதிவிரைவு சிறப்பு இரயில் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை தினசரி இரயிலாக இயக்க வேண்டுமென இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்-சிவகாசி-இராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை மீட்டர் கேஜ் இரயில்வே பாதையாக இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 1998 ஆம் ஆண்டு அகல இரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. இதையத்து முதற் கட்டப் பணிகள் விருதுநகர்-இராஜபாளையம் வரை நிறைவடைந்து இரயில்சேவை அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமாரால் கடந்த 2003 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. பின்பு இரண்டாம் கட்ட பணிகளானது இராஜபாளையம்-செங்கோட்டை வரை 2005 இல் நிறைவடைந்து அப்போதைய இரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத்யாதவால் துவக்கி வைக்கப்பட்டது.
பின்னர் செங்கோட்டை-புனலூர் வரை 3 ஆம் கட்டப் பணிகள் முடிவடைந்து 2008 இல் அப்போதைய அமைச்சர் அரங்கவேலுவால் துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் நெல்லை-செங்கோட்டை வரை உள்ள அகல இரயில்பாதைப் பணிகள் 2016 இல் முடிந்தது. மேலும் இந்த வழித்தடம் முற்றிலும் மின்சாரப் பாதையாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பாதையானது, தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது. மேலும், தென்மலை, குற்றாலம் ஆகிய சுற்றுலா தளங்களுக்கும், சபரிமலை, தென்காசி, சங்கரன்கோவில், திருவில்லிபுத்தூர் ஆகிய புன்னிய ஸ்தலங்களுக்கும், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் ஆகிய தொழில் நகரங்களுக்கும் பயணிகள் மற்றும் வியாபாரிகள் எளிதாகச் சென்று வரப் பயன்படுகிறது.
இந்த வழித் தடத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, மதுரை-குருவாயூர், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம்-சென்னை ஆகிய தினசரி ரயில்களும்,
செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தென்காசி, அம்பாசமுத்திரம், நெல்லை வழியாக தாம்பரம் வரை செல்லும் வண்டியானது வாரத்தில் 3 நாட்களும், மேட்டுப்பாளையம்,விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை செல்லும் சிறப்பு இரயில் வாரத்தில் ஒரு நாளும் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2018 இல் செங்கோட்டை-தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா வண்டி இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த இரயில் தற்போது வரை இயக்கப்படவில்லை.
இருந்தபோதிலும், இவ்வழித்தடத்தில் பகல்நேரத்தில் சென்று வர போதிய இரயில் வசதி செய்து தரப்படவில்லை. எனவே, கேரளா மாநிலம் மற்றும் தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், (வ.எண் :06135) ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 15 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய 2 நாட்கள் தாம்பரம்- தென்காசி சிறப்பு ரயில் காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருநது புறப்பட்டு அதேநாள் மாலை 3:30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் செல்லும் எனவும்,
(வ.எண் 06136) ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தென்காசி-தாம்பரம் சிறப்பு ரயில் காலை 5 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்பட்டு அதேநாள் மாலை 3:15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில் என குறைவான நிறுத்தங்களுடன் அதிவேக சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டியானது, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும், சங்கரன் கோவில், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு மருத்துவம், கல்வி ஆகிய சேவைகளுக்காகச் சென்று வர பெரிதும் பயன்படும். எனவே, இந்த அறிவிப்பை இப்பகுதி பொது மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். மேலும் மதுரையைக் கடந்து தென்காசி வரும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று சென்றால், உள்ளூர் மக்கள் அதிக அளவில் இந்த ரயிலைப் பயன்படுத்தும் நிலை வரும் என்றும், ரயில் பெரும் வரவேற்பு பெறும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.
ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



