hindumunnani

விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்? இந்து முன்னணி அதிருப்தி

அரசியல் சற்றுமுன் சென்னை தமிழகம்
hindumunnani
hindumunnani

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நேரத்தில் இடைத்தேர்தல் அறிவித்து இருப்பதை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்று மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி தேதி முதலே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற உள்ளது. தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து வீதிகளிலும் வீடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் மேடைகள் அமைப்பதற்கும் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை ஆகிறது.

விநாயகர் சதுர்த்தி நடைபெறுகின்ற இடங்களில் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் விழா நடத்துவதற்கும் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பக்தர்கள் அனுமதிக்கு செல்ல வேண்டி இருப்பதால் சிரமப்படும் சூழ்நிலைகள் உருவாகும். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பக்தர்கள் ஊர்வலமாக செல்வதற்கும் நடைமுறை சிக்கல்கள் உருவாகும்.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக அதிகமான வாகன சோதனைகள் நடத்தப் படுவதுண்டு. மக்கள் நியாயமான கணக்குகளோடு கொண்டுவரும் பணத்தை கொண்டு செல்வதற்கும் அச்சப்படுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது பல்வேறு வியாபாரங்களோடு தொடர்புடையது. கோடிக்கணக்கான வியாபார பணம் புழக்கத்தில் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டினால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் நியாயமானது தான் என்றாலும் கூட விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளின் போது தேர்தலை நடத்துவது என்பது பக்தர்களையும் வியாபாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கும் செயலாகவே அமைகிறது.

எனவே மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் தேதியை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்பு நடத்த மறுபரிசீலனை செய்து மாற்றி அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் தேர்தல் கமிஷனை கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.