
சரளா பட் கொலை மீள் விசாரணை ஏன்?
— ராகுல் பண்டிதா —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக காஷ்மீரில் இருந்து சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தினர் (பண்டிதர்கள்) வெளியேற்றப்பட்ட விஷயம் இந்திய அரசியலில் அசாதாரணமான இடத்தை பிடித்துள்ளது. இந்த விஷயம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. ஆனால் இது ஏன் நிகழ்ந்தது என்று யாரும் ஆராய்வதுமில்லை விவாதிப்பதும் இல்லை.
காஷ்மீருக்கு வெளியே இது தேச பக்தி மற்றும் மத சார்பின்மை என்ற கருத்தியல் போராட்டத்திற்கு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. காஷ்மீருக்கு உள்ளேயோ இது ஒரு விஷயமாகவே இல்லை. எப்போதாவது மிக எச்சரிக்கையுடன் பட்டும் படாமல் சில குரல்கள் எழும்பும்.
1990 ம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதிகளால் 3.5 லட்சம் ஹிந்துக்கள் காஷ்மீரில் இருந்து விரட்டி அடிக்கபட்டார்கள். அதைப்பற்றி விவாதம் எழும்போதெல்லாம் யார் பாதிக்கப்பட்டார் (காஷ்மீரிகளா பண்டிதர்களா) என்று போட்டி ஏற்பட்டு விவாதம் சரிந்து விழும்.
இப்போது, இரண்டு விஷயங்கள் அதை அடியோடு மாற்றி அமைத்துள்ளது.
அண்மையில் காஷ்மீரின் முக்கிய தலைவர்களும் பிரிவினைவாத தலைவர்களும் பண்டித சமூகத்தினரிடம் நெருங்கி வந்துள்ளனர். கடந்த வாரம் மக்கள் ஜனநாயக கட்சியின் (பி டி பி) தலைவி மெஹ்பூபா முப்தி ஷீர்பவானி கோயிலின் வருடாந்திர உற்சவத்தில் கலந்து கொண்டு, பண்டிதர்கள் காஷ்மீருக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதே வேளையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை 1990 ஆண்டு சரளா பட் என்ற இளம் ஹிந்து செவிலியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து மறுவிசாரணையை துவங்கி உள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்க ஆரம்பித்த காலங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளை பற்றி முதல் முறையாக தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட துவங்கியுள்ளது.
இரண்டு நிகழ்வுகளும் — காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் பண்டிட்கள் திரும்பி வர அழைப்பு விடுப்பது , பண்டிட்களின் கொலைகள் பற்றி விசாரணை தீவிர படுத்தப்படுவது — ஒரு விஷயத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன. பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது இனியும் அடி குறிப்பாக இல்லாமல் நிகழ்வுக்கு காரணம் எது, யார் என்பதை ஒத்துக் கொள்ளவும் நிகழ்வுக்கு பொறுப்பேற்க செய்வதும் என்ற கட்டத்தை நோக்கி செல்வதை சொல்லுகின்றன.
பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டது யாரால், ஏன் என்ற காரணத்தை கஷ்டப்பட்டு தேடி போக வேண்டியது இல்லை. கடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் ஜமாத் இ இஸ்லாமி சார்பில் நிறுத்தப்பட்ட (போலி) போட்டி வேட்பாளர்கள் கூட பண்டிட்கள் திரும்பி வரவேண்டும் என்று கூறினர் . 2019 க்கு முன்பு காஷ்மீரில் இது கற்பனை கூட செய்ய முடியாத விஷயம். 2019 க்கு பிறகு காஷ்மீர் அரசியல் மாறிவிட்டது. டில்லி எதிர் ஸ்ரீநகர், பிரிவினைவாதம் எதிர் மைய நீரோட்டம் என்ற பழைய இருமை அரசியல் மறையவில்லை ஆனால் மங்கியுள்ளது.
ஆனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே திசையை நோக்கி பயணிக்கின்றன என்று சொல்ல முடியாது. பண்டிட்களின் வெளியேற்றத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வெறுமனே, அது நடந்தது என்று பேச்சளவில் ஒப்புக்கொள்வது எந்த விளைவையும் தராது. பண்டிட்கள் காஷ்மீர் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்பது இப்போது காஷ்மீர் அரசியலின் சொல்லாடல் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதென்பது முற்றிலும் வேறொரு விஷயம்.
பொறுப்பேற்றுக் கொள்வது என்றால் வெளியேற்றப்பட்டனர் என்ற உண்மையை ஒப்புக் கொள்வதில்லை மட்டுமல்ல. எதனால் அது நடந்தது, அது நடக்க காரணமானவர்கள் எவர், அடையாளம் தெரியாத நபர்கள் என்றில்லாமல் யார் என்று பெயர் குறிப்பிட்டு, அறிக்கை என்று இல்லாமல் சான்றுகள் சாட்சிகளுடன் பொறுப்பாக்க வேண்டும். 1990 இல் நடந்த வன்முறைகள் இனியும் சமுதாயத்தின் கூட்டு நினைவில் இருண்ட பக்கமாக இருக்க முடியாது.
பண்டிட்கள் திரும்பி வரவேண்டும் என்று கேட்பது ஒரு விஷயம். அவர்களை அச்சுறுத்தியவர்கள் யார், அவர்களை கொன்றவர்கள் யார், காஷ்மீரில் வாழ முடியாது வெளியேறி விடுவது தான் பாதுகாப்பானது என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் நினைக்க வைத்த சூழல் யாரால் உருவாக்கப்பட்டது என்று கேட்பது வேறொரு விஷயம்.
பண்டிட் களின் மத உற்சவத்தின் போது நடக்கும் ஒரு நடனத்தை முக்கியமான முஸ்லிம் தலைவர் கலந்து கொண்டு பார்ப்பது என்பது ஒரு முக்கிய குறியீடு. இதுவரை காஷ்மீரில் பொது மொழியில் தவிர்க்கப்பட்டு வந்த விஷயம் , சந்தேகம் இல்லை. ஆனால் இந்த குறியீடு கடினமான இதர விஷயங்களுடன் பொருந்த வேண்டும். திரும்பி வாருங்கள் என்று அழைப்பு வன்முறை நடந்தது ஏன் என்று கேள்வியை மனதிடத்துடன் எதிர்கொள்ளும் விருப்பம் இல்லாமல் விடுக்கப்பட்டால், திரும்பி வாருங்கள் என்று அழைக்க வேண்டியதற்கான முதல் காரணத்தை மறைத்து விடுக்கப்பட்டால் அது அர்த்தமற்றதாகும்.
இந்த இடத்தில்தான் சரளா பட் கொலை குறித்த விசாரணை ஒரு வழக்கு என்பதற்கும் அப்பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தாமதம் என்றாலும் கூட , அரசியல் அறிக்கைகளால் மட்டுமே பதிலளிக்க முடியாத விஷயங்கள் குறித்து அரசு நிர்வாகம், நிறுவனங்கள் கேள்வி எழுப்ப தொடங்கியதை இது சுட்டிக்காட்டுகிறது.
சரளா பட் கொலை விசாரணை ஏன் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள 1990 ஆண்டு வசந்த காலத்திற்கு செல்ல வேண்டும் . அப்போதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதுவரை இல்லாத வகையில் பயம் கவ்வியது. அரசு நிர்வாகம் முற்றிலும் சரிந்தது. பயங்கரவாதிகள் பண்டிட்களை குறிவைத்து கொல்லும்போது அவர்களை காப்பாற்ற யாரும் அங்கில்லை. ஆரம்பத்தில் நீதிபதிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் என்ற நிலையில் இருந்த பண்டிதர்கள் மட்டுமே தங்கள் இயக்கத்துக்கு எதிரி என்று அடையாளப்படுத்தப்பட்டு குறி வைத்து தாக்கப்பட்டார்கள் . ஆனால் அது விரைவில் சாதாரண மக்களையும் கொல்வதாக ஆனது. வெளியேற்றம் தொடங்கியது.
சரளா பட் உடல் தகனத்தின் போது இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயானத்திற்கு வந்து அவளது இறுதி அஸ்தியை மிதித்தும், கூடியிருந்த அவரது உறவினர்களை காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்றும் அச்சுறுத்தினர். ஷிரி இ காஷ்மீர் மருத்துவமனையில் குறை பிரசவ குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 23 வயது சரளா பட் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அண்மையில் நிறுவப்பட்ட மாநில காவல் துறையின் சிறப்பு விசாரணை , அவர் 1990 ஏப்ரல் 18 தேதி மதியம் பணி முடித்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் . அதுதான் நண்பர்கள் அவரை கடைசியாக உயிருடன் பார்த்தது. அவளை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினர் (ஜே கே எல் எப்) கடத்திக்கொண்டு ஜம்மு நகரத்துக்குள் கொண்டு சென்றனர் . அவளை உடலியல் ரீதியாக தாக்கினர். கொடுமைப்படுத்தினர். இறுதியாக சுட்டுக்கொன்றனர். அவளது உடல் மறுநாள் வேறொரு இடத்தில் கண்டறியப்பட்டது, என்று அறிக்கையை பதிவு செய்துள்ளது.
ஹிந்து பண்டிட் பெண்ணின் கொலை விசாரணை அப்போதைய மாநில அரசுக்கு முக்கியமான படவில்லை. ஆஜாதிக்காக (விடுதலைக்காக) போராடும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை சூழ்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக வெறி கூச்சலிட்ட உள்ளூர் மக்களின் செயல் உறைய வைப்பதாக இருந்தது. 200க்கும் மேற்பட்ட அந்த வெறி கும்பல் சரளா பட் அஸ்தியை காலால் மிதித்தும் அவளது உறவினர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறும்படியும் அச்சுறுத்தியது. அடுத்த நாள் சரளா பட் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மொத்த குடும்பமும் காஷ்மீரை விட்டு வெளியேறியது. இதை சரளாவின் உறவினர் ஜம்முவில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் கூறியுள்ளார். அடுத்த சில மாதங்களிலேயே 700க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சரளாவை போலவே கொடூரமாக கொல்லப்பட்டனர்.
சரளா பட்டின் கொலை ஜே கே எல் எஃப் தலைமையின் உத்தரவுபடி தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. அதில் குர்ஷித் அகமத் சால்கு உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கூறியது. கடந்த 35 ஆண்டுகளாக சரளாவின் கொலை மற்ற பண்டிதர்களின் கொலை போல வெறும் புள்ளி விவரமாக இருந்தது. ஆரம்பத்தில் நடந்த காவல்துறை விசாரணை வழக்கமான சடங்குகளை தாண்டி செல்லவில்லை. அரசு நிர்வாகமும் அதை தொடர்ந்து பல தசாப்தங்கள் அமைதியில் உறைந்து விட்டது.
கடந்த ஆண்டு அந்த வழக்கு மீண்டும் தொடங்கியது. நடந்த குற்றத்தை போலவே அதை தொடர்ந்த அமைதியை இப்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அமைப்பு தீர்க்க முனைகிறது. சாட்சிகளின் மறுவிசாரணை, புதிய அறிக்கைகள், குற்றம் நடந்த இடத்தை சம்பவத்தை மீண்டும் கட்டமைத்து பார்ப்பது, ஆதாரங்களை கைரேகைகளை ஆய்வு செய்வது , முன்னாள் ஜே கே எல் எஃப் தீவிரவாதிகளை தேடுவது ஆகியவற்றுக்கு பிறகு சரளா பட் மீது நடத்தப்பட்ட கொடூரமும் கொலையும் ஜே கே எல் எஃப் தலைவனான யாசின் மாலிக்கின் கட்டளைப்படி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது என்று சிறப்பு விசாரணை அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.
யாசின் மாலிக் பயங்கரவாத செயலுக்கு நிதி அளித்த விஷயமாக வேறொரு வழக்கில் சிறையில் உள்ளான். சரளா பட் வழக்கு ஒரு தனி விஷயம் அல்ல. காஷ்மீர் பண்டிட் சமூகத்தை அச்சுறுத்தி ஒட்டுமொத்தமாக மாநிலத்தை விட்டே ஓட செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதிதான் என்கிறது சிறப்பு விசாரணை அமைப்பு. விசாரணையின் ஊடாக ஒரு முக்கிய செய்தியையும் அனுப்பியுள்ளது அது .
காவல்துறையின் குற்றப்பத்திரிகை கடந்த ஜூன் 29 தேதி பதிவானது. அதில் : ” இது (குற்றப்பத்திரிக்கை) வலுவான, தவறவே விட முடியாத ஒரு செய்தியை சொல்கிறது. காலத் தாமதம் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு கேடயமாக இருக்க முடியாது. எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் பயங்கரவாத கொடூர செயல்களுக்கு சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். பயங்கரவாத செயல்கள் பயத்தினாலோ அச்சுறுத்தலினாலோ வன்முறையினாலோ நீதியை தள்ளி போட முடியுமே அன்றி சட்டத்தின் ஆட்சியை நிரந்தரமாக எப்போதும் தோற்கடிக்க முடியாது. “
மேற்கண்ட முடிவுரை நீதிமன்றத்திற்கு அப்பால் விளைவுகளை எதிர் நோக்குகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி, சகோதரத்துவத்தை பற்றி வாய் நிறைய பேசுவோரின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது. ஹிந்து பண்டிட் கொலை விசாரணை குறித்த தகவல் வெளிவந்த பிறகு எந்த காஷ்மீர தலைவரும் வாய் திறக்கவில்லை. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இந்த செய்தியாளரிடம் பேசும் போது, காஷ்மீரை சேர்ந்த தலைவர்கள் பலரிடம் அசாதாரணமான நிலையை இந்த விசாரணை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற விசாரணையின் பின்னால் உள்ள ‘நோக்கத்தை’ குறித்து அவர்கள் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் , என்றார்.
காவல்துறை சிறப்பு விசாரணை அமைப்பின் குற்ற பத்திரிக்கை வெளிவந்த வேளையில், பண்டிதர்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகிறது அரசு. இதுவரை சுமார் 3000 கனால் (ஒரு கனால் = 5445 சதுர அடி) பகுதி மீட்கப்பட்டு உண்மையான சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீர் தலைவர்களின் பதில் வினை எப்படியாக இருந்தாலும், எப்படிப்பட்ட அரசியல் விளைவுகளை ஏற்பட்டாலும் கூட விசாரணை குறித்த விவாதம் குறிப்பிட்ட குற்ற செயலின் சரித்திரம், அதை செய்தவர்களின் பெயர்கள், அதை செய்ய கட்டளையிட்டவர்கள் / தூண்டியவர்களின் அதிகார படிநிலை , நோக்கம் ஆகியவற்றைப் பற்றி கவனத்தை திருப்பி உள்ளது.
விசாரணை அமைப்புடன் சம்பந்தப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி, இது ஆரம்பம்தான் வரும் நாட்களில் மேலும் அதிகமான கொலை வழக்குகள் விசாரணை செய்யப்படும், என்று உறுதிப்பட தெரிவித்தார். ‘சரளா பட் கொலை விசாரணையின் போது வேறு பல கொலைகள் குறித்த தகவல்களும் ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன’, என்று அவர் கூறினார்.
இனி என்ன ? ஹிந்து சமய விழாக்களில் கலந்து கொள்வது ஒன்று. பழைய ஹிந்து நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பதாக காணொலி வெளியிடுவது வேறொன்று. ஆனால் , காஷ்மீர வரலாற்றில் பண்டிட்கள் தங்கள் பங்களிப்பு பற்றி கேட்கும் போது என்ன நடக்கும் ? அந்த கதையில் தங்களை கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி கேட்கும்போது ? இது போன்ற கேள்விகளுக்கு நீண்ட கால நோக்கில் அரசியல் ஒருமித்த கருத்து உருவாவதை பொறுத்தே ஒற்றுமையும் நல்லிணக்கமும் உருவாகி வரும்.
சரளா பட் வழக்கு ஒரு விதிவிலக்காக , ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால் மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால் 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.
அதுவே இப்போது காஷ்மீர அரசியல் அகராதியில் இடம் பிடித்துள்ள திரும்பி வாருங்கள், ஒன்றாக வாழ்வோம், நட்போடு வாழ்வோம் என்ற வார்த்தைகளுக்கு பொருள் சேர்க்கும். ஏனென்றால் திரும்பி வருவதென்பது வேலைவாய்ப்பு, பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வெளியேற்றப்பட்டவர்களை திரும்பி வாருங்கள் என்று வரவேற்கும் சமூகத்தின் மீதான நம்பிக்கையை பொருத்தது. நிகழ்த்திய வன்முறையை அவர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்தது.
இதுதான் சரளா பட் கொலை விசாரணையின் அரசியல் முக்கியத்துவம். மீண்டும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்பது எப்போதோ நடந்த குற்ற செயல்கள் இன்று அரசியல் ரீதியாக அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதால் அவை முக்கியமற்றவை என்பதாகி விடாது என்ற முக்கியமான சமிக்கையை வெளிப் படுத்துகிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
நன்றி : ஓப்பன் மேகசீன்



