
— பத்மன் —
நவீன காலத் தமிழ் இலக்கிய உலகின் விடிவெள்ளியாய் தோன்றிய மகாகவி சுப்ரமண்ய பாரதியாரால் எனதருமை தம்பி என்று அன்போடு அழைக்கப்பட்ட சிறப்புக்குரிய சீடர் பரலி. சு. நெல்லையப்பர். புதுவையில் வாழ்ந்த காலத்தில் தனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் எப்பாடு பட்டேனும் அந்தப் பணத் தேவையைப் பூர்த்தி செய்த நெல்லையப்பருக்கு, 1915-இல் மகாகவி அனுப்பிய கடிதத்தில் “தம்பி… தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்க!” என்று உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார்.
அத்தகைய பாரதியின் அருமைத் தம்பியான பரலி. சு. நெல்லையப்பர் தமிழையும், பாரதியின் புகழையும் உயிர்மூச்சாய் வளர்த்ததோடு அவ்விதமே தொடர்ந்து வளர்க்கத் தமக்கொரு சீடரும் தம்பியுமாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுத்தார். அத்தகைய பெருமைக்குரிய பெருந்தகைதான் எதிரொலி விசுவநாதன் என்ற திருவாரூர் சு. விசுவநாதன். பாரதி மீதும் அவர்தம் அருமைத் தம்பி போன்ற பரலி. சு. நெல்லையப்பர் மீதும் எதிரொலியார் கொண்டிருந்த பாசத்துக்கும், தமிழ் நேசத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டு அவர் படைத்தளித்த அற்புத இலக்கியமான ‘பாரதியின் தம்பி’.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் திருவாரூரில், 1941-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி பிறந்தவர், சு. விசுவநாதன். அவரது தந்தையார் பெயரும், அவர் போற்றிய மகாகவியின் இயற்பெயரான சுப்ரமணியன் என்பதுதான். பாரதியின் புகழ்பாடும் கவிஞர்களில் முதன்மைக் கவிஞராக வலம்வந்த விசுவநாதன், பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் பாடும் புலமை பெற்றிருந்தார். பள்ளிச் சிறுவனான அவரது கவிப் புலமையைக் கண்டு வியந்த திருலோக சீதாராம், அவருக்கு பால பாரதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
விசுவநாதனின் பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டு, தனித்தவோர் அடையாளமாகத் திகழும் எதிரொலி என்ற சிறப்புப் பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தவர், உவமைக் கவிஞர் சுரதா. சென்னை குரோம்பேட்டையில் நெல்லையப்பர் வாழ்ந்த காலத்தில், அவரைச் சந்திக்கும் பேறு கிடைத்து, அவருக்குச் சிறந்த மாணாக்கராய் வாய்த்த விசுவநாதன், கடந்த 1965-ஆம் ஆண்டில் நெல்லையப்பரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்கள் 70 பேரின் படைப்புகளைத் தொகுத்து, எதிரொலிகள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். அந்தத் தொகுப்பு நூலின் சிறப்பைக் கண்டு வியந்த சுரதா, எதிரொலி என்ற சிறப்புப் பட்டத்தை விசுவநாதனுக்குச் சூட்டினார்.
பாரதியின் அன்பரும் விடுதலைப் போராட்ட வீரருமான பரலி. சு. நெல்லையப்பர் குரோம்பேட்டையில் வாழ்ந்து வந்த காலத்தில், அவர் மறைந்த 1971-ஆம் ஆண்டு வரையில், அவருக்கு நெருங்கிய சீடராய் பணிவிடைகள் செய்ததோடு, தமிழ் மற்றும் பாரதி குறித்த இலக்கிய ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார், எதிரொலி விசுவநாதன்.
பாரதி பற்றிய அவரது ஆய்வுகளில், ஆகச் சிறந்த நூல் பாரதிக்கு விடுதலை. பாரதியின் படைப்புகளுக்கான பதிப்புரிமை தனியாரின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுக் காலம் இருந்ததையும், பாரதி விடுதலைக் கழகம் போன்ற தமிழார்வ அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து 1949-இல் பாரதியின் படைப்புகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதையும் உணர்ச்சி பொங்க விவரிக்கிறது, அந்நூல். அதுமட்டுமின்றி, பாரதியை தேசியக் கவிஞர் என்ற சிறிய வட்டத்துக்குள் அடைத்துவிடாமல், அவரது பெண்ணியச் சிந்தனைகள், சமூகச் சீர்திருத்தங்கள், சாதி ஒழிப்புக் கொள்கைகள், உலகளாவிய மானுடப் பார்வை ஆகிய சிந்தனைச் செறிவை எடுத்துரைத்து, அவர் பற்றிய தவறான புரிதல்களில் இருந்து அந்நூல் விடுதலை அளிக்கிறது. அத்துடன் பாரதி ஆய்வுகளில் உள்ள தவறுகள், குறைபாடுகள் ஆகியவற்றைக் களைந்தும் பாரதிக்கு விடுதலை தருகிறது.
எதிரொலியாரின் மற்றொரு மிகச் சிறந்த ஆய்வு நூல், பாரதியும் பரமசிவனும். 1990-இல் வெளிவந்த இந்நூல், கண்ணன் பாடல்களைப் பாடிய மகாகவி பாரதியாரின் பாடல்களிலும் கட்டுரைகளிலும் காணப்படும் சிவ வழிபாடு மற்றும் வேதாந்த, சித்தாந்தக் கோட்பாடுகளையும் இதன் மூலமான சமயம் கடந்த உலகளாவிய மானுடப் பார்வையையும் விளக்கியுரைக்கிறது. பாரதி பற்றி இதுபோன்ற இலக்கியப் படைப்புகளை உருவாக்கியளித்த எதிரொலி விசுவநாதன், தனது மானுடப் படைப்பான மகளுக்கும் பாரதி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.
பாரதி, அவரது சீடர் பரலி சு. நெல்லையப்பர் ஆகியோர் மீது மட்டுமல்ல, பாரதியின் மற்றொரு சீடர் பாரதிதாசன் மீதும் பற்றுக் கொண்டவர் எதிரொலியார். அவ்வகையில் இவர் படைத்தளித்த பாரதிதாசன் பரம்பரை என்ற ஆய்வு நூல், பாரதிதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 1990-இல் வெளிவந்தது. தமிழ் இலக்கிய உலகில் பாரதிக்குப் பின் பாரதிதாசன் கொண்டுவந்த மிகப் பெரிய மாற்றத்தையும், அந்தத் தாக்கத்தின் விளைவாக உருவான சீடர்களான தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பையும் பாங்குற விளக்குகிறது இந்நூல். இதனை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது இந்நூலின் பெருமையைப் பறைசாற்றும்.
எதிரொலி விசுவநாதனின் எழுத்துகளில் நினைவுகூரத் தக்க மற்றோர் படைப்பிலக்கியம், புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி அதே தலைப்பில் அவர் எழுதிய ஆய்வு நூல். இதுமட்டுமின்றி, வள்ளலார், காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தியாகி வ.வே.சு. அய்யர், திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, நாரண. துரைக்கண்ணன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற பலதுறை ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளையும் நூல்களாக எழுதியுள்ளார். இவ்வாறாக 50-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்தளித்துள்ளார்.
இவ்விதம் பாரதியின் புகழையும், தமிழின் பெருமையையும் பரப்புவதைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு, குறிப்பாக பாரதியின் கருத்துகள் இளம் தலைமுறையினரிடம் எதிரொலிப்பதைத் தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த எதிரொலி விசுவநாதன் அவர்கள், சென்னைப் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கத்தில், (2026) ஜூலை 28-ஆம் தேதியன்று மண்ணுலகில் இருந்து விடைபெற்று, பாரதியோடு ஐக்கியமானார்.
அன்னாரின் வழியில், பாரதியின் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல நாம் உழைப்பதே, அவர் போன்ற பாரதி அன்பருக்கு நாம் செய்யும் உண்மையான நினைவஞ்சலி ஆகும்.



