
— கேப்டன் அமரீந்தர் சிங் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
ஒவ்வொரு அரசியல் காலகட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். இப்போது உள்ள அரசியலும் ஆட்சியும் நரேந்திர மோடியை மையமாக கொண்டு இருப்பதால் ‘மோடியிசம்’ என்று பெயர். நரேந்திர மோடி சிறந்த தலைவர். கட்டுப்பாடு உள்ள கட்சி அமைப்பை கொண்டவர். பண்பாட்டை பெருமிதத்துடன் உயர்த்தி பிடிப்பவர். முடிவெடுக்க மத்தியில் ஒரு குழுவை கொண்டவர். திட்டங்களை தொழில்நுட்பத்தின் துணையுடன் முன்னெடுப்பவர். உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்துபவர். தேச பாதுகாப்பில் சக்தி வாய்ந்த அரணை ஏற்படுத்தியுள்ளவர். பொது மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்.
இதுவொரு வகையில் , ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தை பயன்படுத்தி தேசத்தை வரையறை செய்வது . உறுதியான தலைவர், குறிக்கோள் கொண்ட ஆட்சி, வலிமையான இந்தியா இதுவே உறுதிமொழி. இதை யாரும் மறுக்க முடியாது. கவனிக்க தவற முடியாது.
சர்ச்சைக்கு உட்படுத்த முடியாதபடி அரசியல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். பாஜகவை முக்கிய அரசியல் கட்சி என்ற நிலையில் இருந்து இந்திய அரசியலின் மைய அச்சாக மாற்றியுள்ளார். நெடுங்காலமாக அந்த கட்சி கோலோச்சிய புவிபரப்பை விரிவு படுத்தி உள்ளார். தொடர்ந்து அதற்கு ஆதரவளித்து வந்த சமூகங்களுக்கு அப்பால் உள்ள சமூகங்களுக்கும் அதை விரிவாக்கி , அவற்றிற்கு அரசியல் தலைமை கொடுத்துள்ளார்.
2024 ல் பாஜக 240 இடங்களுக்கு சரிந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த தேர்தல் தீர்ப்பு மோடியை நிராகரிக்கவில்லை . அவருக்கு தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தது. தேசம் தொடர்ச்சியை தேர்ந்தெடுத்தது. அதே வேளையில் பரஸ்பர ஆலோசனை, கூட்டணி, கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் கொண்டு வந்தது.
மோடியிசத்தினால் பொது சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளது வெளிப்படை. உள்கட்டமைப்பு வளர்ச்சி, எண்ம பொது பயன்பாடுகள், நலத் திட்டத்தின் பயன்கள் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது, நிதி உதவிகளையும் நேரடியாக வங்கி கணக்கில் வழங்குதல் , கழிப்பறை, வீடு, மின்மயமாக்கல் , நலத்திட்ட உதவிகளை மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய அளவில் அரசின் திறன் வளர்ந்துள்ளது. அத்துடன் தேவையற்ற மாநில அரசியலையும் கட்டுப்படுத்தி உள்ளது.
நிதிஆயோக்கின் கணக்கின்படி 2013-14 இல் 29.17 சதவீதமாக இருந்த வறுமை 2022-23 ல் 11.28 ஆக குறைந்துள்ளது. கணக்கீட்டு முறை பற்றி விவாதம் இருக்கலாம். ஆனால் மக்களிடம் நலத்திட்டங்களும் நிதி உதவியும் நேரடியாக போய் சேர்ந்துள்ளதை மறுப்பது நேர்மையற்றதாகும்.
அரசின் திறனுக்கு இணையாக அதன் அரசியல் தெளிவும் மக்களை கவர்ந்துள்ளது. முன்னேற வேண்டும் என்று மொழியை மோடியிசம் பேசுகிறது. தேசத்தின் உறுதியை, பண்பாட்டு மீட்சியை பேசுகிறது. தாமதம் , முடிவெடுக்க முடியாமல் திணறல், பிளவுபட்ட அதிகாரம் ஆகியவற்றால் வெறுப்புற்று இருந்த மக்களிடையே வேகமான அரசு, பெரிய அளவிலான செயல்பாடுகளைக் கொண்ட அரசுக்கு வரவேற்பு இருப்பது இயல்புதான்.
மோடியிசம் தேசத்தின் அரசியல் சாசனத்தில் உறுதியாக இருக்கிறதா என்று கேள்வி அடுத்ததாக எழுதுகிறது. மோடியின் காலகட்டம் தேசத்தின் பன்மையை பலவீனப்படுத்தி உள்ளது. உரிமைகளை அரசு தரும் சலுகைகளாக மாற்றி உள்ளது. அரசு அமைப்புகளை கைப்பற்றிக் கொண்டுள்ளது இவற்றின் மூலம் அரசியல் சாசனத்தையே மாற்றி அமைக்கிறது என்று எதிர்பாளர்கள் விமர்சிக்கிறார்கள். ஆதரவாளர்களோ அவற்றை மோடியின் மீதுள்ள காழ்ப்பினால் சொல்லப்படுபவை. இந்திய பண்பாட்டின் மீள்எழுச்சிக்கு எதிரானவை என்று புறமொதுக்குகிறார்கள்.
இரண்டு நிலைப்பாடும் முழுமையானது அல்ல. அரசியல் சாசனத்தின்படி ஒரு அரசை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அது எப்படி அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்று பார்க்க வேண்டுமே தவிர அரசியல் கோஷங்கள், ஆதாரமற்ற அபிப்பிராயங்கள் மூலமாக அல்ல.
தேர்தல்கள் தொடர்ந்து கடுமையான போட்டியை கொண்டுள்ளன. மாநிலங்களில் அரசுகள் மாறுகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் அரசுகள் உள்ளன. நீதிமன்றங்கள் அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து அடிப்படை உரிமைகள் பறி போகாமல் நிலை நிறுத்துகின்றன.
‘சோஷலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற அரசு’ என்பதை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 2024 நவம்பரில் தள்ளுபடி செய்தது. தேசத்தின் அரசியல் சாசனத்தின் சீர்மை குலைக்கப்பட்டதாக கூறுவது சரியல்ல.
ஆனால் அரசியல் சாசனத்தில் உள்ள வார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக நீக்காமலே அதை பலவீனப்படுத்த முடியும். ஆவணங்களில் எந்தவித மாறுதலும் செய்யாமல் அமைப்புகளின் சுதந்திரத்தை, நம்பகத்தன்மையை, மரபை ஒழிக்க முடியும். ஜனநாயகம் என்பது அவ்வப்போது நடக்கும் தேர்தல்களினால் மட்டுமே நிலை நிறுத்தப்படுவதில்லை. வரம்பு மீறாத அதிகாரம், மாற்றுக் கருத்துக்கும் மதிப்பு , நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறல் , மாநிலங்களிடையே சமத்துவ அணுகுமுறை, சமமான குடியுரிமை ஆகியவற்றால் நிலை நிறுத்தப்படுகிறது.
பன்மை பற்றி கவலை என்பது சட்டப்படி மத சுதந்திரத்தை அகற்றுவது என்பதில்லை. பெரும்பான்மையினரை திரட்டுவதும் சிறுபான்மையினரை நிபந்தனைக்குட்பட்டே ஏற்க முடியும் என்ற அனல் பறக்கும் பேச்சுக்களினாலும் ஏற்படுகிறது. பண்பாட்டு தேசியம் என்பது அரசியல் சாசனத்தின் படி சரியானது. ஏற்புடையது. ஆனால் பண்பாட்டு மேலாதிக்கம் என்பது அல்ல.
ஹிந்து நாகரீகத்தின் தொடர்ச்சியை தேசம் பெருமையுடன் ஏற்கலாம். ஆனால் குடியரசு ஒவ்வொரு குடிமகனுக்குமானது. அதில் எந்த நிபந்தனையும் இல்லை. சமமான குடியுரிமை என்பது மதம் சார்ந்ததோ, அரசியல் கொள்கை சார்ந்ததோ, குறிப்பிட்ட தேசிய அடையாளத்தை சார்ந்ததோ அல்ல.
சோசலிசம் குறித்து அறிவார்ந்த விவாதம் தேவை. நம்முடைய சோசலிச அரசமைப்புச் சட்டம் லைசன்ஸ் – பர்மிட் – கோட்டா முறையை மீண்டும் கொண்டு வரும்படி கோரவில்லை. தனியார் தொழில் முனைப்புக்கு எதிரானது அல்ல. எல்லாவற்றிலும் அரசுடமைக்கு முன்னுரிமை என்பதல்ல. அது சமூக , பொருளாதார நீதியை கோருகிறது. வாய்ப்புகளில் சமத்துவம் , ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பாதுகாப்பை கேட்கிறது.
மோடி யுகத்தின் நலத்திட்டங்கள் பலவும் அரசமைப்பு சட்டத்தின் இந்த நோக்கத்தை முன்னெடுத்து செல்வதாகவே உள்ளன. கௌரவ பதவிகள் தலைவரின் வெகுமதியாக வழங்கப்படும் போது தான் பிரச்சனை வருகிறது. உணவு பாதுகாப்பு, வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் , வீட்டு வசதி, கல்விக்கான நிதி உதவிகள், சமூக பாதுகாப்பு ஆகியவை பெருந்தன்மையான செயல்கள் அல்ல. அவை பொதுமக்களுக்கான கடமை. குடிமக்களிடமிருந்து பெறப்படும் நிதியிலிருந்து சட்டப்படி அவர்களுக்கு செய்யப்பட வேண்டியவை.
எனவே, உரிமைகளின் அடிப்படையில் அமைந்த அரசாட்சி என்பது ஒத்திசைவு கொண்டதாக இருக்க வேண்டுமேயன்றி வெகுமதி அரசியலாக இருக்கக் கூடாது. வீணாய் கசிவதை தொழில்நுட்பம் தடுக்கலாம். பலன்களை சரியாக கொண்டு சேர்க்கலாம். ஆனால் சரியான தரவுகள் இல்லாததாலோ, முறையாக அடையாளப்படுத்தப்படாதாலோ, நிர்வாக முறை கேடுகளினாலோ குடிமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற முடியாமல் போக கூடாது. நலத்திட்ட உதவிகளுக்கான நெறிகள் அனைவருக்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்கான வழிமுறைகள், சமூக தணிக்கை, சட்ட ஆய்வுக்கான வழிகள் ஆகியவை இருக்க வேண்டும்.
ஒரு குடிமகன் உரிமை பெற்றவனாக இருப்பது கட்டாயம் . சலுகைகளுக்கு நன்றி உள்ளவனாக வாழக் கூடாது.
அதேபோல் அமைப்புகளை கைப்பற்றி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வெற்று கோஷமாக இல்லாமல் சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசும் ஆட்சி செய்யவும், சட்டப்படியான நியமனங்களை செய்யவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உரிமை பெற்றவை. ஆனால் அமைப்பின் தன்னாட்சி என்பது சட்ட தொழில்நுட்பத்தை சார்ந்ததாக இருக்கக் கூடாது. அதற்கு வெளிப்படையான பணி நியமனங்கள், சீரான நெறிமுறைகள், பக்க சாய்வு கொண்ட தலைமையிடமிருந்து விலகி இருத்தல் தேவைப்படுகிறது.
கவலை அளிக்கும் புள்ளி விவரங்களை இப்போது பார்ப்போம். 17 வது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் சட்டமானவை 58 சதவீதம். 16 சதவீதம் சட்ட வரைவுகள் மட்டுமே நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டன. 2019 முதல் 2023 வரை 80 சதவீத மத்திய பட்ஜெட் எந்த விதமான விவாதமும் இன்றி வாக்கெடுப்பில் வென்றுள்ளன.
அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் ரகசியமாக நிதி திரட்டுவது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதில் ஆளும் தரப்புக்கு மேலாதிக்கம் தருவது அதன் செயல்பாடுகளில் சுதந்திர தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. இதனால் ஒவ்வொரு அமைப்பும் ஆளும் தரப்பால் கைப்பற்றப்பட்டதாக கூற முடியாது. ஆனால், உண்மையில் சுதந்திர தன்மை பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி அவற்றின் சுதந்திரத் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும்.
மோடியிசம் தொடர வேண்டுமா ? ஆம். அதன் சாரமான விஷயம் தொடர வேண்டும்.
நம் நாட்டிற்கு உறுதியான தலைமை, தேசிய நம்பிக்கை, உள்கட்டமைப்பு, எண்ம புதுமை, நம்பத் தகுந்த பாதுகாப்பு திறன், நேரடியாக கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியும்படியான நற்பலன்கள் ஆகியவை தேவை. ஆனால் மோடியிசம் என்பது தலைவரை மையம் கொண்டது என்பதிலிருந்து அமைப்பை மையம் கொண்டு தேச நிர்மாணத்தில் ஈடுபடுவதாக பரிணாமம் பெற வேண்டும்.
இந்த மாறுதலுக்கு தெளிவான திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் சீரிய விவாதங்கள் நடக்க வேண்டும். சட்ட வரைவுகள் குழக்களால் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பொது செலவினங்கள் மீது கட்டுப்பாடு இருக்க வேண்டும். மாநிலங்களை பாதிக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அரசமைப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கான பணி நியமனங்கள் கட்சி சார்பை கடந்து இருக்க வேண்டும்.
விசாரணை அமைப்புகள் அனைவர் மீதும் சமமாக நடவடிக்கை மேற்கொள்வதாக இருக்க வேண்டும். நலத்திட்டங்களின் பலன்கள் உரிமையுடன் பெறப்படுபவையாக இருக்க வேண்டும். அரசியல் விவாதங்கள் வழக்கம் போல பிளவை ஏற்படுத்துவதற்கு பதிலாக சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
வளர்ச்சியின் அடுத்த கட்டம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக, போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதாக, சிறு தொழில் துறையை வலுப்படுத்துவதாக, விவசாயத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவதாக, தரமான பொதுக் கல்வியை தருவதாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் எட்ட கூடியதாக மருத்துவம், வாழத் தகுதியான நகரங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் சூழலியல் ஆகியவை தேவைப்படுகின்றன.
பாஜகவும் தனது வெற்றிகளை அமைப்பு சார்ந்ததாக்க வேண்டும். என்னதான் அசைக்க முடியாதவர் என்றாலும் ஒரு ஆளுமையை மட்டும் சார்ந்து இருப்பது தேசிய கட்சிக்கு நல்லதல்ல. அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நம்ம தகுந்த மாநில தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி விவாதங்கள் நடக்க வேண்டும். அடுத்தடுத்து தலைவர்கள் மேலெழுந்து வரும் கலாச்சாரம் தேவை.
மோடியிசம் இந்தியாவுக்கு துடிப்பான சக்தியை தந்துள்ளது. வளர வேண்டும் என்ற நோக்கத்தையும் சர்வதேச அளவில் வலிமையான குரலையும் தந்துள்ளது. இருந்தாலும் அதன் வரலாற்றுப் பூர்வமான மதிப்பு ஒரு தலைவரின் ஆதிக்கத்தினாலோ அல்லது கட்சியின் தேர்தல் வெற்றிகளாலோ மட்டுமே அளவிடப்படுவதில்லை.
மோடியா அல்லது அரசியல் சாசனமா என்பது தெரிவு செய்யப்பட வேண்டிய விஷயம் அல்ல. அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்ட மோடியிசமா அல்லது அதை மீறி வளரும் மோடியிசமா என்பதுதான்.
நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் பஞ்சாபின் முன்னாள் முதல்வர். இப்போது பாஜகவில் உள்ளார்.

