periyar arivulagam building - 2026

பெரியார் அறிவுலக நூலக ஊழல்: படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்

சற்றுமுன் அரசியல் தமிழகம் லைஃப் ஸ்டைல்
periyar arivulagam building - 2026

பெரியார் அறிவுலக நூலக ஊழல்: படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்

• கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் நூல் கொள்முதலில் மோசடிகள் நடைபெற்றிருப்பதைக் கண்டித்து ‘படைப்பாளர்கள் சங்கமம்’ வெளியிட்டுள்ள கூட்டறிக்கை :

நூலகம் என்பது ஒரு நாட்டின் அறிவியக்கத்தின் அடையாளம். எழுத்தாளர்கள் நாட்டின் மனசாட்சியாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே, நூலகத் துறையும் பெருந்திரளான எழுத்தாளர்களும் தடம் புரண்டுவிட்டார்கள். அரசியல் சார்புடன் செயல்படும் விருப்பமான எழுத்தாளர்களின் நூல்களையும், மோசடிகள் மூலம் பணம் குவிக்க உதவும் சாதகமான பதிப்பகங்களின் நூல்களையும் மட்டுமே, மாநில அரசுகள் பெருமளவில் கொள்முதல் செய்து வந்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கிளை நூலகத்திற்குச் சென்று பார்த்தாலும் இந்த உண்மை தெரியும். குப்பைகளின் கூடாரமாகவே நமது நூலகங்கள் காட்சி அளிக்கின்றன.

நூலகக் கொள்முதலில் சித்தாந்தச் சாய்வு ஒருபுறம், வெளிப்படையற்ற ஊழல் நிர்வாகம் மறுபுறம். இரண்டுக்கும் இடையே லாபம் பார்க்கும் அதிகாரிகள், தந்திரம் நிறைந்த பதிப்பகங்களுடன் இணைந்து கூட்டுக் கொள்ளை அடித்து வந்திருக்கிறார்கள். இங்கு நல்ல ஒரு நூல் நூலகத்தில் இடம்பெற எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதை விஷயம் அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள். அதனாலேயே சிறந்த நூல்களை வெளியிடுவோர் நூலகத் துறையை நாடுவதில்லை. இந்த ஊழலின் உச்சகட்டம் தான், கோவை, பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல் கொள்முதலில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள்.

இந்த ஊழலை அம்பலப்படுத்தி இருப்பவர், சென்ற அரசால் நூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய அமைத்த குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பது நகைமுரண். அந்தக் குழுவில் இடம்பெற்ற ஜெயரஞ்சன், ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் திமுக அனுதாபிகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அவர்களே அதிர்ச்சி அடையும் வகையில் இந்த ஊழல் நடந்தேறி இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்த ஊழலே வெளிவந்திருக்காது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லாமல் இல்லை.

ALSO READ:  பறிக்கப்படுவது ஒருவரின் பணியிடத்தையா? கண்ணியத்தையா?

கடந்த அக்.16ஆம் தேதி தான் இந்த பெரியார் அறிவுலகம் தமிழக முதல்வர் ஜோசப் விஜயால் திறந்துவைக்கப்பட்டது. அப்போது, திமுக அரசு கட்டமைத்த திட்டத்தை தொடங்கிவைத்து தவெக அரசு பெருமைப்படுவதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புலம்பி இருந்தார். இப்போது நூலகக் கொள்முதல் ஊழல் வெளியானவுடன், திமுகவும் தவெகவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நூல் கொள்முதலுக்கான ஆணையை கடந்த திமுக அரசுதான் (பள்ளிக் கல்வித் துறை – பொது நூலகம்) 05.11.2025 ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. அவர்கள் வாங்கி வைத்த நூல்களை சரிபார்க்காமல் கர்மசிரத்தையாக நூலக அடுக்குகளில் காட்சிப்படுத்தியது தான் தவெக அரசின் தவறு.

இந்த ஊழலை வெளிப்படுத்திய எழுத்தாளர் பெருமாள்முருகன் நமது நன்றிக்குரியவர். அவரது ஆய்வின்படி, ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற ஒரே பதிப்பகம் மட்டுமே 1,800க்கு மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை பெரியார் அறிவுலகத்திற்கு அளித்திருக்கிறது. ‘பீனிக்ஸ்

பதிப்பகம்’ என்ற பதிப்பகமும் நூற்றுக் கணக்கான நூல்களை அளித்திருக்கிறது. சுமார் ரூ. 300 மதிக்கத்தக்க நூல்கள் கூட ஐந்து மடங்கு விலையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

ALSO READ:  ஆரியன்காவு கோயிலில் முக்கிய திருப்பணி!

அது மட்டுமல்ல, நூல்களின் தலைப்பு, உள்ளடக்கம், தரமற்ற மொழிநடை போன்றவையும் அதிர்ச்சி அளிக்கின்றன; தகவல் பிழைகள் மலிந்த, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த நூல்கள், மொத்தமாக ரூ. 50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும், குறைந்த எண்ணிக்கையில் தேவைக்கேற்ப அச்சிடும் POD முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பதிப்பகங்கள் இதுவரை யாரும் அறியாதவை. இந்த நூல்களை எழுதியதாகக் குறிக்கப்பட்டிருக்கும் பலரது பெயர்களையும் யாருக்கும் தெரியவில்லை. எனவே, இதில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருக்கிறார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இந்த நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கோருகிறோம்.
அது மட்டுமல்ல, சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையிலுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 6 சிறப்பு நூலகங்களிலுள்ள நூல்கள் அனைத்தையும் ஒரு நடுநிலையான, நேர்மையான எழுத்தாளர் குழு மூலமாக ஆய்வு செய்வது அவசியம். ஏனெனில் சிறப்பு நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதில் சிறப்பு அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

நூலகங்களுக்கு இனியேனும் தரமான, அரசியல் சார்பற்ற, மக்களுக்குத் தேவையான நூல்களை அனைத்துப் பதிப்பகங்களிலிருந்தும் கொள்முதல் செய்ய, வெளிப்படையான, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் நடைமுறைகளையும், நெறிமுறைகளையும் உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று தவெக அரசுக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ வேண்டுகோள் விடுக்கிறது. இதற்காக, அரசியல் சார்பற்ற எழுத்தாளர்களைக் கொண்ட தேர்வுக்குழுவை தற்போதைய அரசு அமைக்க வேண்டும். முந்தைய திமுக அரசின் தவறுகளைச் சரி செய்யவே மக்கள் தவெக அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை இத்தருணத்தில் தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

பெரியார் அறிவுலக ஊழல் என்பது பெருங்கடலில் நமக்குத் தென்படும் சிறு பனிப்பாளம் மட்டுமே. இதனைத் தோண்டித் துருவினால், தமிழக நூலகத் துறையின் ஒட்டுமொத்த மோசடிகளும் அம்பலமாகும். நமது நூலகங்கள் மேம்படாமல் புதிய சமுதாயத்தைப் படைக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தவெக அரசு தீவிரமாகச் செயல்பட்டு, இந்த மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டப்படி கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

படைப்பாளர்கள் சங்கமக் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டிருப்போர்:
• ‘திராவிட மாயை’ சுப்பு
• வ.மு.முரளி
• பத்மன்
• இராம. நம்பிநாராயணன்
• ஜவஹர் வெங்கடசாமி
• பாஸ்கர் சுப்பிரமணியம்
• நரசிம்மன் தனபாலன்