தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை

தென்காசி மாவட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி ரூபாய் 70,90,000/- மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்த 02 நபர்களை அதிரடியாக கைது செய்து 25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவரின் வாட்ஸ் அப்பிற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வந்த வீடியோ அழைப்பில் காவல்துறை சீருடையில் இருந்த நபர் தான் மும்பை காவல்துறையை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பணபரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக கூறி மிரட்டி, அவரது ஆதார் எண் மற்றும் புகைப்படம் பயன்படுத்தி போலியான அரசு ஆவணங்களை தயாரித்து அவற்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

இதை உண்மையென்று நம்பிய முதியவர் மோசடிக்காரர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக மொத்தம் ரூ.70,90,000/- பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டார்.

இது குறித்து மேற்படி முதியவர் தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் I.P.S., அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் திருமதி. பி. வசந்தி அவர்கள் தலைமையிலான சைபர் கிரைம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட அரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்த ஆகாஷ் குமார் (வயது 26) என்ற நபரையும், டெல்லி மாநிலம் துவாரகா பகுதியை சேர்ந்த பிரசாந்த் விஸ்வாஸ் (வயது 31) ஆகிய இரண்டு நபர்களையும் வட மாநிலம் சென்று அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் 25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.